• Mon. May 12th, 2025

24×7 Live News

Apdin News

புதுச்சேரிக்கு ‘மாநில அந்தஸ்து’ கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்: முதல்வர் ரங்கசாமி | We will insist central govt for the statehood demand – CM Rangasamy

Byadmin

May 12, 2025


புதுச்சேரி: “என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாளில் இருந்து முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கையே மாநில அந்தஸ்துதான். எனவே அதுகுறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான நீட் அல்லாத கால்நடை மருத்துவம், பொறியியல், நர்சிங், கலை, அறிவியல், வேளாண், சட்டம் மற்றும் உயிரியல் பாடப் பிரிவுகளின் சேர்க்கைக்கு சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று (மே 12) முதல் வரும் 31-ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான தகவல் சிற்றேடு வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.

இதனை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். கல்வித் துறை செயலர் பிரியதர்ஷினி, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் முதல்வர் ரங்கசாமி கூறியது: “ஆண்டுதோறம் நீட் மற்றம் நீட் அல்லாத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் நிரப்பப்பட்ட வருகிறது. அதுபோல் 2025-26-ம் ஆண்டுக்கான நீட் அல்லாத அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை இன்று முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம். மொத்தம் 10,577 இடங்கள் உள்ளன.

புதுச்சேரியில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துகின்ற அரசாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்ளது. இதுவரை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றோம். இப்போது அறிவித்த திட்டங்களை விரைவில் செயல்படுத்துவோம். ரேஷன் கடைகளில் இலவச அரிசி கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கோதுமை கொடுக்கப்படும். புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவரிடம், மத்திய அரசு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் நிர்வாகம் தொடர்பாகவும் பேசினேன்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொள்கையே மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பது தான். அதற்காக எப்போதும் வலியுறுத்துவோம். இப்போதும் வலியுறுத்தி வருகின்றோம். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாளில் இருந்து கேட்கப்படும் முக்கிய கோரிக்கை மாநில அந்தஸ்துதான். அதனை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். நடந்து முடிந்த சட்டப்பேரவையில் கூட அனைத்து கட்சிகளும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்தி பேசியதை பார்த்திருப்போம்,” என்றார்.

அப்போது புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானம் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் இருப்பதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு முதல்வர், “மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்,” என்றார். தொடர்ந்து 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா என்ற கேள்விக்கு, “எதுவுமே கிடைக்கும் என்ற நம்பிக்கை தான் வாழ்க்கையே, அதே நம்பிக்கையில் தான் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்” என்றார்.

மாநில அந்தஸ்து கிடைக்காவிட்டால் பாஜக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என எதிர்கட்சியினர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, “மாநில அந்தஸ்து கிடைப்பதற்கு மத்திய அரசை எங்களுடைய அரசு நிச்சயமாக வலியுறுத்தும்,” என பதிலளித்தார்.



By admin