• Mon. Oct 27th, 2025

24×7 Live News

Apdin News

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ கருப்புக்கொடி; மேடையில் ஏறி ஊழல் குற்றச்சாட்டு! | MLA protest black flags against Puducherry Governor and Chief Minister

Byadmin

Oct 27, 2025


புதுச்சேரி: மின்பஸ்கள் தொடக்க நிகழ்வில் ஆளுநர், முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடந்ததுடன், மேடையில் ஏறி ஊழல் நடப்பதாக தொகுதி எம்எல்ஏ குற்றம் சாட்டி விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

புதுவை அரசின் போக்குவரத்து துறை சார்பில் பேருந்து பணிமனை, மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழா, மின் பஸ்கள், மின் ரிக்‌ஷா இயக்கம், ஆட்டோ சவாரி செயலி தொடக்கவிழா இன்று மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரில் நடந்தது.

இங்கு மின் பஸ்களை சார்ஜ் செய்யவும், பராமரிக்கவும் தேவையான உள்கட்டமைப்புகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இதன்மூலம் லாபத்தில் இயங்கிய அரசு போக்குவரத்து கழகத்தை ஒழித்துவிட்டு, முழுமையாக தனியார்மயமாக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது என அத்தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையிலான பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

எம்எல்ஏ நேரு தலைமையில் இன்று மறைமலை அடிகள்சாலை, கண் டாக்டர் தோட்டம், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் நின்று கொண்டிருந்தனர். விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், எம்பி செல்வகணபதி மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை வரவேற்க மறைமலை அடிகள் சாலை, தாவரவியல் பூங்கா எதிரே காத்திருந்தனர்.

அப்போது ஆளுநரின் கார் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தை சுற்றி வந்தது. அப்போது ஆங்காங்கே நின்றிருந்த பொது நல அமைப்புகள் நேரு எம்எல்ஏ தலைமையில் கருப்பு கொடிகளுடன் விழா நடைபெற்ற பணி மனை முன்பு திடீரென குவிந்தனர். அவர்கள் கருப்புக்கொடியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி முன்பு காட்டினர். இதனால் போலீஸார் அங்கு வந்து ஆளுநர், முதல்வரை பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர்.

நுழைவுவாயில் கதவை போலீஸார் அடைத்து போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நேரு எம்எல்ஏ மகன் ரஞ்சித்குமார் சட்டை கிழிந்தது. உதவியாளர் செங்குட்டுவன் கீழே விழுந்ததால் காயமடைந்தார். இதையடுத்து போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து விழாமேடையில் அமர்ந்து இருந்த ஆளுநர், முதல்வர் ஆகியோரை பார்த்து எம்எல்ஏ நேரு கேள்வி எழுப்பினார். ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டி சராமரியாக கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தார்.



By admin