• Fri. Nov 8th, 2024

24×7 Live News

Apdin News

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை: டிச.20 முதல் விமானங்களை இயக்கும் இண்டிகோ | Dec 20 Indigo operates flights to Bengaluru and Hyderabad from Puducherry

Byadmin

Nov 8, 2024


புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. பெங்களூரு, ஹைதராபாத்துக்கு வரும் டிசம்பர் 20-ல் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்குகிறது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013 ஜனவரியில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான நிலையம் செயல்பட துவங்கியது. இந்நிலையில் புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமானங்களை இயக்குவதை கடந்த மார்ச் 30-ம் தேதியுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுத்தியது.

இதனால் கடந்த 7 மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்படி கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருந்தது இண்டிகோ. ஆனால் எதிர்பாராத காரணங்களால் அதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 20 முதல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி இன்று (நவ.8) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஏடிஆர் 72 ரக விமான சேவையை வரும் டிசம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. இச்சேவை தினமும் இருக்கும். பெங்களூருவில் இருந்து காலை 11.10 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 12.25க்கு புதுச்சேரி வந்தடையும்.

பின்னர், மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். அதேபோல் ஹைதராபாத்திலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு மாலை 4.30 மணிக்கு வந்தடையும். பின்னர் மாலை 5.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.35 பெங்களூரு சென்றடையும்.” என்று அவர் கூறியுள்ளார்.



By admin