• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மறு பரிசீலினை செய்ய அதிமுக வலியுறுத்தல் | puducherry admk govt slams tamil nadu govt

Byadmin

Jan 10, 2025


புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை மறு பரிசீலினை செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில அதிமுக நிர்வாகிகள், பிற அணி பொறுப்பாளர், வார்டு கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதுச்சேரி மாநில தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் எம்ஜிஆர் சிலை, அலங்கரிக்கப்பட்ட படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டம், அமைதி பேரணிகளுக்கு அனுமதி மறுப்பதும், ஆர்ப்பாட்டம் நடத்தும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு, ஜனநாயக உரிமையை காலில் போட்டு மிதிக்கும் சர்வாதிகார தமிழக திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளியான திமுகவை சேர்ந்த ஞானசேகரனை தனது வீட்டுக்கு வர வழைத்து அவ்வப்போது உணவு அருந்தும் அளவில் மிகநெருங்கிய தொடர்பில் இருக்கும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை, தமிழக ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

தமிழக பகுதியில் உள்ள வீடுர், சாத்தனூர் அணைகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி தண்ணீரை திறந்த விட்டதினால், புதுச்சேரியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அணை நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண நிதியை தமிழகத்திலிருந்து சட்டப்படி கேட்டு பெறவேண்டிய புதுச்சேரி அரசு மவுனம் காப்பது தவறான ஒன்று.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு இன்று வரை நிதியுதவி ஏதும் அளிக்காத மத்திய அரசையும், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்புக்கு ஏற்றார் போன்று நிவாரண உதவியை வழங்காத மாநில அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம், பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண உதவியை அரசு அறிவிக்க வேண்டும்.

டெல்லியில் இருந்து பணிக்காக வருகை தரும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏற்கெனவே மூன்று முறை கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தி மக்களுடைய எதிர்ப்புக்கு பிறகு அதை வாபஸ் பெறுவது தொடர்கதையாக இருந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பல மாநிலங்களில் விற்பனை ஆகாத பல லட்சம் ஹெல்மெட்டுக்கள் விற்பனைக்கு இதுபோன்ற உத்தரவுகள் துணை நின்றன.

இந்நிலையில் வரும் 12-ம் தேதியிலிருந்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கொண்டு வருவது முரண்பாடான செயலாகும். போக்குவரத்து நெரிசல் மிக்க புதுச்சேரி நகரப் பகுதியில் மணிக்கு 20 கி.மீ வேகத்துக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத நெருக்கடியில் கட்டாய ஹெல்மெட் சட்டம் என்பது அவசியமற்றது. தேசிய நெடுஞ்சாலை தவிர்த்து நகரப் பகுதியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முதல்வர் மறு பரிசீலினை செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



By admin