புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சண்முகம் பிறந்த நாள் விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முன்னாள் முதலவர் நாராயணசாமி உள்ளிட்டோர் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் நாராயணசாமி பேசியதாவது: நமக்கு யார் உதவி செய்தாலும் அவர்களை வாழ்நாளில் மறந்துவிடக்கூடாது. ஆனால் அரசியலில் இப்போது நாம் பார்க்கிறோம். துரோகிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் அனுபவித்தவர்கள் தான் முதுகில் குத்துகிறார்கள். நாராயணசாமி எது சொன்னாலும் கவலைப்படாதீர்கள் என்று முதல்வர் ரங்கசாமி சொல்கிறார். ஊழலைப்பற்றி சொன்னால் அவர்களுக்கு கவலை இல்லை.
பொதுப்பணித்துறையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகாலமாக ஊழல் நடக்கிறது. 30 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள். அதில் முதல்வர், அமைச்சருக்கு பங்கு போகிறது என்று சொன்னோம். இப்போது கையும் களவுமாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரை சிபிஐ கைது செய்திருக்கிறார்கள்.
ஊழல் நடக்காமல் கைது செய்யுமா சிபிஐ. மத்தியில் பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியும் இருக்கிறது. இந்த ஆட்சியில் மத்திய பாஜக அரசு, அவர்கள் நிர்வகிக்கும் சிபிஐ-யே கைது செய்கிறது. இதிலிருந்து இந்த ஆட்சியில் ஊழல் நடப்பது நன்றாக தெரிகிறது.
நீங்கள் எது வேண்டாமலும் சொல்லுங்கள் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று முதல்வர் இருக்கிறார். அவருக்கும், அமைச்சருக்கும் கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான் முக்கியம். முதல்வர் அலுவலகத்தில் 6 புரோக்கர்கள் இருக்கிறார்கள். அவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்.
முதல்வர் கோப்பில் கையெழுத்திட்டால் அதனை துரத்திச் சென்று சம்மந்தப்பட்டவர்களிடம் லஞ்சம் வாங்குகின்றனர். அனைத்திலும் ஊழல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா காந்திக்கும் துரோகம் செய்தவர்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.
புதுச்சேரியில் இப்போது கமிஷன் ஆட்சித்தான் நடக்கிறது. இதனை சொன்னால் கோபம் வருகிறது. நாராயணசாமி பொய் சொல்கிறார். உண்மையை பேசுவதில்லை. நான் பொய் சொன்னால் சிபிஐ பொய் சொல்கிறதா? சிபிஐ தான் தலைமை பொறியாளர் உள்ளிட்டவர்களை பிடித்துள்ளனர்.
புதுச்சேரியில் பதவி சுகத்தை அனுபவிக்கவும் சென்றவர்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அவர்களால் இப்போது நிம்மதியாக இருக்கவும், தூங்கவும் முடியவில்லை. இத்துடன் அவர்களின் அரசியல் அஸ்தமனம் ஆகிவிடும். எவரும் வெற்றிபெற முடியாது. எல்லா தொகுதிகளிலும் நின்று வெற்றி பெருவோம் என்று முதல்வர் ரங்கசாமி சொல்கிறார். ஏனாம் தொகுதியில் நின்று நீங்கள் தோற்றவர். நீங்கள் பேசலாமா?
முதல்வர் எந்த தொழிலும், வியாபாரமும் செய்யவில்லை. பல அடுக்கு மாடி கட்டிடம் அப்பா சாமி கோயிலில் கட்டியுள்ளார். அந்த பணம் எங்கிருந்து வந்தது. ரூ.20 கோடியில் ஏசி கல்யாண மண்டபம் கட்டி வருகிறீர்கள். அதற்கான பணம் எங்கிருந்து வந்தது. இதற்கெல்லாம் பதில் சொல்வதில்லை.
இதனையெல்லாம் எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், ரங்கசாமியின் ஏஜென்ட் ஆவார். அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். 2026-ல் ராகுல் காந்தி, சோனியா காந்தி தலைமையில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.