புதுச்சேரி: பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புதுச்சேரி வந்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கேட்டு போர்கொடி தூக்கினர். அதில் எதிர்ப்பும் கிளம்பியது. இதனால் சமாதான முயற்சி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், முதல்வருடன் திடீர் சந்திப்பு நடந்தபோது எம்எல்ஏக்கள் செயல்பாட்டில் தனது நிலைப்பாட்டை ரங்கசாமி தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர், முதல்வர் ரங்கசாமி இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். இதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஆறு பேர் வென்றனர். அதில் செல்வம் சட்டப்பேரவைத் தலைவராக உள்ளார். அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் உள்ளனர்.
பாஜகவில் வென்ற ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் உள்ளனர். அதில் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகம் நோக்கி அவரது ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். தற்போது இவர்கள் மூவருடன் சேர்ந்து பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் வாரியத்தலைவர் பதவியும் கேட்டனர். ஆனால், முதல்வர் ரங்கசாமி தரவில்லை. இதனால் இவர்கள் டெல்லி வரை சென்று புகார் தந்தனர். இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்டின் மகன் ஜோஸ் சார்லஸ் உடன் கைகோர்த்து புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் தந்தனர்.
இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சரும், புதுவை மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்த ராஜீவ் சந்திரசேகர், புதுவை மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் இன்று புதுவைக்கு விமானத்தில் வந்தனர்.
இவர்கள் உடன் மாநிலத் தலைவர் செல்வகணபதி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார் ஆகியோர் ஹோட்டல் சன்வே சென்றனர். அங்கு வந்த முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு நடத்தினர். அப்போது முதல்வர் ரங்கசாமி பாஜக எம்எல்ஏக்கள் செயல்பாடு தொடர்பாக தனது நிலைப்பாட்டையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.
அச்சந்திப்புக்கு பிறகு பாஜக குழு ஹோட்டல் அக்கார்டு வந்தது. அங்கு பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர் மற்றும் நியமன எம்எல்ஏக்கள் ஆகியோரை முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா உள்ளிட்டோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்ற அறிவுறுத்தலை அவர்கள் ஏற்கவில்லை. சுழற்சி முறையில் அமைச்சர் பதவி, ஆதரவு சுயேட்சைகளுக்கு வாரியத் தலைவர் பதவி தர அறிவுறுத்தியும் தரவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தந்த அங்காளன், சிவசங்கர் ஆகியோர் திரும்ப பெற அறிவுறுத்தி மேலிடத்தில் தெரிவித்த தகவலை தெரிவித்து அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து சுழற்சி முறையில் அமைச்சர் பதவி ஜான்குமாருக்கா அல்லது கல்யாணசுந்தரத்துக்கா என்பதிலும் போட்டி ஏற்பட்டது. அமைச்சர் பதவி கேட்டும், அது யாருக்கு என்பதிலும் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புறப்பட்டு சென்றார். புதுச்சேரி மேலிட பார்வையாளர் நாளை புதுச்சேரியில் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் பேசவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.