புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் முழுக்க ஏசி மயமாக்கப்பட்டதை முதல்வர் ரங்கசாமி இன்று தொடக்கி வைத்தார்.
சுற்றுலா நகரான புதுச்சேரியில் முக்கிய கோயில் மணக்குள விநாயகர் கோயில். கடற்கரை அருகே நகரப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்வர்.புதுச்சேரியில் பொதுமக்கள், வர்த்தகர்கள் என பலரும் நாள் தவறாமல் இந்தக் கோயிலுக்கு வருவர்.
மணக்குள விநாயகர் தேவஸ்தானத்தில் பக்தர்களின் நலன் கருதியும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றும் ரூ.33 லட்சம் செலவில், தேவஸ்தானம் முழுவதும் வரும் குளிர்சாதன வசதி ஏற்படுத்தும் பணி அண்மையில் தொடங்கியது. பக்தர்கள், உற்சவதாரர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த நன்கொடை தொகை போக மீதமுள்ள தொகை, தேவஸ்தான நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
தேவஸ்தானம் முழுவதும் குளிர்சாதன வசதி ஏற்படுத்துவதற்காகும் செலவில் மூன்றில் ஒரு பகுதியான ரூ.11.90 லட்சத்தை புதுச்சேரி யூகோ வங்கி நன்கொடையாக தந்திருந்தது. குளிர்சாதன வசதி பணிகள் முற்றிலும் நிறைவடைந்திருந்த நிலையில், இந்த வசதியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுப் பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏ ரமேஷ் மற்றும் சிவாச்சாரியார்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.