• Sun. Dec 29th, 2024

24×7 Live News

Apdin News

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2 உயர்வு: ஜன. 1 முதல் அமலுக்கு வருகிறது! | Petrol, diesel prices hiked by Rs 2 in Puducherry

Byadmin

Dec 29, 2024


புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜன. 1 முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரி மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையே உள்ள பெட்ரோல், டீசல் விலை வேறுபாட்டை குறைக்கவும், புதுச்சேரி மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டத்தின்(வாட்) கீழ் பெட்ரோல், டீசலுக்கு திருத்தப்பட்ட வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட வரி விகிதங்கள் வரும் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் வரி 14.55 சதவீதத்திலிருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்கால் பகுதியில் 14.55 சதவீதத்திலிருந்து 16.99 சதவீதமாகவும், மாஹே பகுதியில் 13.32 சதவீதத்திலிருந்து 15.79 சதவீதமாகவும், ஏனாமில் 15.26 சதவீதத்திலிருந்து 17.69 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் மீதான வாட் வரி புதுச்சேரியில் 8.65 சதவீதத்திலிருந்து 11.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. காரைக்காலில் 8.65 சதவீதத்திலிருந்து 11.23 சதவீதமாகவும், மாஹேவில் 6.91 சதவீதத்திலிருந்து 9.52 சதவீதமாகவும், ஏனாமில் 8.91 சதவீதத்திலிருந்து 11.48 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாஹேவில் ரூ. 91.92 மற்றும் ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ. 84.31, மாஹேவில் ரூ. 81.90 மற்றும் ஏனாமில் ரூ.84.75 இருந்து வருகிறது.

தற்போது வாட் வரி உயர்வால் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.26, காரைக்காலில் 96.03, மாஹேவில் 93.92, ஏனாமில் 96.92 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் டீசல் லிட்டருக்கு ரூ. 86.48, காரைக்காலில் ரூ.84. 31, மாஹேவில் ரூ. 81.90, ஏனாமில் ரூ. 84. 75 உயர்த்தப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோதும் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை விட புதுச்சேரியில் விலை குறைவாகவே இருக்கும். அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.

குறிப்பாக கடலூரை விட புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.54, நாகப்பட்டினத்தைவிட காரைக்காலில் ரூ.6.22, கண்ணூரைவிட மாஹேவில் ரூ.13.86, காக்கநாடாவைவிட ஏனாமில் ரூ.15.16 விலை குறைவாக இருக்கும். டீசல் கடலூரைவிட புதுச்சேரியில் ரூ.7.91, நாகப்பட்டினத்தைவிட காரைக்காலில் ரூ. 7.54, கண்ணூரைவிட மாஹேவில் ரூ.10. 88, காக்கிநாடாவை விட ஏனாமில் ரூ.11.09 விலை குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



By admin