புதுச்சேரி: பொதுத் தேர்வில் பாடப் புத்தகங்களை பார்த்து எழுத கூறிய ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி புதுவை மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினர் கோரிக்கை மனுக்களை இன்று வழங்கினர். ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்வித் துறையை இழுத்து மூடி போராட்டம் நடத்துவோம் என்றனர்.
புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர் பாவாணன் தலைமையில் ஏராளமானோர் ராஜீவ்காந்தி மருத்துவமனை அருகேயுள்ள கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு வந்தனர். புதுவை கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினியை சந்தித்து மனு அளித்தனர். ஏராளமானோர் சென்றதால் பலரும் தரையில் அமர்ந்தனர். அதைத்தொடர்ந்து கல்வித் துறை பாதிப்புகளை இயக்குநரிடம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: ”புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சமீபத்தில் நடைபெற்ற மாதிரித் தேர்வில் பெரும்பாலான மாணவ, மாணவியர் தோல்வியடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பொதுத் தேர்வில் மாணவர்கள் விதிகளை மீறி பாடப் புத்தகங்களை பார்த்து எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
ஆகவே, இதுபோன்ற செயல்களால் புதுவையின் கல்வித் தரம் பாதிக்கப்படும். அதனையடுத்து சிபிஎஸ்இ பாட முறையை திரும்பப் பெறவும், பொதுத் தேர்வில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்வித் துறை இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்வித் துறையை இழுத்து மூடி போராட்டம் நடத்துவோம்” என்றனர்.