புதுச்சேரி: புதுச்சேரியில் மஞ்சள் அட்டை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் எம்.எல்.ஏ-க்கள் பேசினர். பின்னர் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியது: “ரூ.13,600 கோடிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் போட்டுள்ளோம். இது நிறைவேற்ற முடியுமா, நிதி இருக்கிறதா என்றெல்லாம் எம்.எல்.ஏ-க்கள் கேட்டிருந்தனர். நிச்சியமாக திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களுக்கு பாதிக்காத நிலையில் வரிகள் போடலாம். எந்த வகையில் வருவாய் கூட்ட முடியுமோ அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகின்றோம். ஒன்றிரெண்டு திட்டங்கள் வேண்டுமானால் இப்போது வருகின்ற நிலையில் இருக்கலாம். புதுச்சேரியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் எல்லா தொகுதிகளும் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்த்தியுள்ளோம். பள்ளி கல்வி, உயர் கல்விக்காக அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகின்றோம். உயர் கல்விக்கு வழங்கப்படும் உதவித் தொகை காலதாமதம் ஆகலாம். ஆனால் அதையும் உரிய நேரத்தில் கொடுத்து விடுகிறோம்.
சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்திய இடத்தை கடந்த காலத்தில் சரியாக செயல்படுத்த முடியவில்லை. இப்போது அந்த இடத்தை மத்திய அரசிடம் இருந்து நாம் கேட்டு பெற்றிருக்கிறோம். அதில் தொழில் நிறுவனங்கள் கொண்டு வரும் நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டு வருகிறது. ஐடி பூங்கா அமைக்க பலமுறை முயற்சி எடுத்தும் வரவில்லை. இப்போது ஐடி பூங்கா உள்ளிட்ட நிறுவனங்கள் அமைக்க தனியாக இடம் ஒதுக்கி கொண்டுவர கேட்டுள்ளனர். அது அரசின் பரிசீலனையில் இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். அதற்காகத்தான் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
குடிமைபொருள் வழங்கல் துறை மூலம் இலவச அரிசி கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இப்போது நாம் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். முதியோர் உதவித் தொகை உயர்வு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியுள்ளோம். நிச்சயமாக இந்த அரசு சொன்னதை செய்கின்ற அரசாகத்தான் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அனைத்தும் சிவப்பு அட்டைதாரர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது. மஞ்சள் அட்டைதாரர்களுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை என்று எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர். புதுச்சேரியில் இலவச அரிசி சிவப்பு ரேஷன் அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ கொடுத்து வருகின்றோம். புதுச்சேரியில் மஞ்சள் அட்டை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
புதுச்சேரியில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். ரொட்டிபால் ஊழியர்களுக்கு எம்.டி.எஸ் ஆக மாற்றி மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படுவதற்கான கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் அந்த ஊதியம் கொடுக்கப்படும்.
ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்த ஊதியம் நிச்சயம் எல்லா பணியாளர்களுக்கும் வழங்கப்படும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிஆர்டிசியில் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகிறது. வருவாயும் இப்போது அதிகரித்துள்ளது. கூடுதல் பேருந்து விடப்பட இருக்கிறது. இதனால் மேலும் வருவாய் உயர வாய்ப்புள்ளது. ஆகவே அதற்கு தகுந்தபடி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். எனவே இப்போது போடப்பட்டுள்ள பட்ஜெட்டில் தெரிவித்துள்ள அத்தனை திட்டங்களையும் அரசு விரைவாக செய்யும்,” என்று அவர் கூறினார்.