புதுச்சேரி: “வருவாயைப் பெருக்கவே புதிய மதுபான கொள்ளை போன்ற முடிவுகளை அரசு எடுக்கிறது” என்று புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “புதுக்குப்பம் அரசு பள்ளியில் குடிநீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகு தகுந்த நடவடிக்கையை அரசு நிச்சயம் எடுக்கும். பள்ளி கட்டிடம் கட்ட ஏற்கெனவே சட்டப்பேரவைத் தலைவர் கேட்டிருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பள்ளி கட்டிம் கட்டவும், பழுதானவைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். அப்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் பள்ளி கட்டித்தில் இருந்து குதித்து காயமடைந்தது தேர்வு பயமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், “ஒரே நேரத்தில் எல்லா பிள்ளைகளும் 100 மதிப்பெண் எடுக்க முடியுமா? என்றால் முடியாது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தினால் தேர்வு எழுத பயம் என்பதில்லை. மாநில பாடத்திட்டம் இருக்கும்போதே பிள்ளைகளுக்கு தேர்வு பயம் இருந்தது. அந்த மாணவரிடம் நானே விசாரித்தேன். அவர் எந்தவித பதிலும் கூறவில்லை. சிபிஎஸ்இ தேர்வு பயம் என்று அனுமானத்தினால் பேசுகின்றனர். ஆனால் முழுமையான காரணம் தெரியவில்லை. அதுபற்றி உரிய விசாரணை செய்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்போம். எந்த பாடத்திட்டமாக இருந்தாலும் மாணவர்கள் படித்து தான் ஆக வேண்டும். ஒருசில பிள்ளைகள் ஆர்வமுடன் படிப்பார்கள், சிலருக்கு தேர்வு பயம் வரத்தான் செய்யும். என்ன செய்யலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முன்மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புகின்றனர். ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது உண்மை அல்ல. மின்கட்டண உயர்வை மாநில அரசு முடிவு செய்வதில்லை. தமிழகம், புதுச்சேரியில் இணை ஒழுங்கு முறை ஆணையம் தான் கட்டண உயர்வை முடிவு செய்கிறது. எதிர்கட்சியினர் போராட்டம் செய்வதற்கு முன்பாகவே மின் கட்டண மானியம் கொடுக்கலாம் என முடிவு செய்து, ஆண்டுதோறும் மானியம் கொடுத்து வருகின்றோம்.
மின் கட்டணத்தில் இதர கட்டணங்கள் வசூலிப்பது சம்மந்தமாக மின்துறை அதிகாரிகளுடன் பேசி விளக்கம் அளிக்கப்படும். பாஜக ஜனநாயகமாகன கட்சி. அந்த கட்சியில் கருத்து சொல்ல அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. எல்லோருடைய கருத்தையும் பேசி கட்சி மேலிடம் முடிவெடுக்கும். கட்சியின் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார். அவருடைய எல்லா குற்றச்சாட்டுக்கும் நான் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றேன். மற்றவர்கள் எப்படி என்பது எனக்கு தெரியாது. அவருக்கு ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவது வாடிக்கையாகிவிட்டது. ஆதாரப்பூர்வமாக எந்த குற்றச்சாட்டையும் அவர் கூறவில்லை.
மதுபான கொள்கையைப் பொறுத்தவரையில் அரசு முடிவு செய்ய வேண்டும். மாநிலத்தின் நிதிநிலைமைக்கு ஏற்ப அரசு ஒரு கொள்கை முடிவை எடுத்து அறிவிக்கிறது என்றால் அது அரசு சம்பந்தப்பட்டது. அதில் பொத்தாம் பொதுவாக எதையும் சொல்லாமல் ஆதாரப்பூர்வமாக இருந்தால் சரியாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் திட்டங்களை செய்ய முடியுமா என்றால் முடியாது. வருவாய் வரவேண்டிய வழிகளை ஆராய வேண்டியது அரசின் கடமை. அதுபோன்ற சமயங்களில் தான் புதிய மதுபான கொள்கை போன்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. வீட்டு வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த வேண்டி வரும்.
அதையெல்லாம் தவிர்ப்பதற்காகத்தான் இதுபோன்ற முடிவுகளை அரசு எடுத்து வருகிறது. மக்கள் மத்தியில் எந்தவித வரி திணிப்பும் வந்துவிடக் கூடாது. மக்களைப் பாதிக்காத வகையில் வருவாயைக் கொண்டு வர வேண்டும் என்று அரசு சிந்திக்கிறது. திட்டங்களை செயல்படுத்தும் போது மாநிலத்தின் வரிவருவாய் முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தான் இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. எல்லாத்துக்கும் சட்டத்திட்டங்கள், வழிமுறைகள் இருக்கிறது. அதற்குட்பட்டு செய்யப்படுகிறது. மக்களுக்கு சிரமமின்றி திட்டங்களை எப்படி கொடுக்க முடியும், மாநில வருவாயை எப்படி பெருக்க முடியும் என்பதையெல்லாம் பார்த்து தான் முதல்வர், அமைச்சர்கள் செய்கின்றனர். எடுத்ததும் எதையும் செய்ய முடியாது,” என்று அவர் கூறினார்.