புதுச்சேரி: புதுச்சேரி பாஜக அரசை காப்பாற்ற திமுக எங்களுக்கு துணை நிற்கிறது என பாஜக எம்எல்ஏ தெரிவிக்கும் விதத்தில் திமுக – பாஜகவின் உறவு உள்ளது என்று அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை சம்பவத்தில் பிரச்சினையை திசை திருப்பும் தமிழக திமுக அரசை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அண்ணா சிலை பழைய பஸ் நிலையம் அருகில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியது: “சட்டப்பேரவைத் தொடர் நடைபெறும் சமயத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பிரச்சினையை திசைத்திருப்பும் நோக்கத்தில் தமிழக ஆளுநரை பயன்படுத்தி ஒரு பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும்போதே கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு இன்று வரை பாஜகவுடன் எவ்வித உறவும் இல்லாமல் அதிமுக உள்ளது. ஒருபுறம் தமிழகத்தில் பாஜகவை விமர்சனம் செய்துகொண்டே மறுபுறம் டெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகியோரை பல்வேறு விழாக்களுக்கு இங்கு அழைத்து வந்து உள்ளுக்குள் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வது திமுகவின் பாஜக ஆதரவின் புதிய இரட்டை வேடம்.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியின் பாஜகவை சேர்ந்த பேரவைத் தலைவர் மீது 3 எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். அது சம்பந்தமாக பாஜக எம்எல்ஏ ஜான்குமார் திமுக ஆதரிக்கும் வரை பேரவைத் தலைவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சிவா அறிவிப்பை சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக அரசை காப்பாற்ற திமுக எங்களுக்கு துணை நிற்கிறது என பாஜக எம்எல்ஏ தெரிவிக்கும் விதத்தில் திமுக பாஜகவின் உறவு உள்ளது. ஆனால், இவையெல்லாம் மூடி மறைத்து விட்டு அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக உள்ளதாக மக்களை ஏமாற்றும் விதத்தில் திமுக பேசுவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழகத்தில் காவல் துறை மூலம் அறிவிக்கப்படாத அவசரகால நிலைமையை திமுக கட்டவிழ்த்துள்ளது” என்று குறிப்பிட்டார்.