பட மூலாதாரம், Getty Images
பெரும்பாலும் ஒருவர் இறந்தபிறகு அவரை புதைப்பதற்கு அல்லது இறுதிச் சடங்குகளை செய்வதற்கு சிறிது நேரம் எடுக்கும்.
முன்பெல்லாம் கோடைக் காலத்தில் ஒருவர் இறக்கும்போது, இறந்தவரின் உடல் சாக்கு துணியில் மூடப்படும். ஆனால் இப்போது குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட வாகனங்கள் அதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
பதப்படுத்தப்பட வேண்டிய சடலங்கள், குறைவான வெப்பநிலையில் வைக்கப்படுவதன் மூலம் அவை விரைவில் அழுகாமல் இருக்கின்றன.
அறிவியலின்படி, ஒருவர் இறந்தபிறகு சடலத்தின் மீது பாக்டீரியாக்கள் வளருகின்றன. உடல் அழுகுவதற்கு முக்கிய காரணம் இதுதான். வழக்கமாக, இறந்து 12 மணிநேரம் கழித்து உடல் அழுக ஆரம்பிக்கிறது.
ஆனால், பல சமயங்களில், உடல்கள் புதைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அவை அழுகுவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
பழமையான கல்லறைகளை தோண்டியபோது, பல ஆண்டுகள் கழித்தும் அதிலிருந்த சடலங்கள் கிட்டத்தட்ட அப்படியே இருந்தன. இது பெரும்பாலும் மத ரீதியிலான பார்வையுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது. ஆனால், இதற்கு பின்னால் அறிவியல் ரீதியிலான காரணங்களும் உண்டு.
இப்படியான சூழல்களில், உடல்கள் அழுகாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன.
இதற்கு தடயவியல் விஞ்ஞானிகள் இரு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, மம்மிஃபிகேஷன் எனப்படும் உடல் அழுகாமல் பதப்படுத்தும் செயல்முறை (mummification). மற்றொன்று, இறந்த உடல் முழுவதும் மெழுகு போன்ற பொருளால் பூசப்படுவது (adopasory), இது உடல் அழுகாமல் தடுக்கிறது.
இயற்கையாகவே ‘மம்மி’யாதல்
பட மூலாதாரம், Getty Images
வறண்ட காற்று மற்றும் ஈரப்பதம் மிகவும் குறைவாக, அதிக வெப்பநிலை உள்ள சூழல்களில் இறந்த உடல்களை வைக்கும்போது, உடலில் நீர் உள்ள பகுதிகள் வேகமாக வறண்டு விடுகின்றன. இதன் காரணமாக, உடலில் பாக்டீரியாக்கள் வளர முடியாமல், உடல் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கும்.
சர் சலீம் உல்லாஹ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி, இந்த செயல்முறைக்கு மம்மிஃபிகேஷன் என்று பெயர் என தெரிவித்தார்.
இந்த செயல்முறை உடலை பதப்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. இதன்காரணமாக, பாலைவனங்களில் பல சடலங்கள் இயற்கையாகவே ‘மம்மி’யாகி விடுகின்றன, பல ஆண்டுகள் அழுகாமல் அதே நிலையில் இருக்கின்றன.
வறண்ட மணல் உள்ள பகுதிகளில் சடலங்கள் இயற்கையாகவே பதப்படுத்தப்படுவது சாத்தியம்.
எனினும், வங்கதேசத்தில் மணல் மற்றும் காற்றில் உள்ள அதிக ஈரப்பதம் காரணமாக இவ்வாறு நடப்பதில்லை.
அடாப்சரி (Adapsory)
பட மூலாதாரம், Getty Images
அடிபோஜெனிக் (Adipogenic) அல்லது அடிபோஸ் (adipose) திசு என்பது, ஒருவித சோப் போன்று இருக்கும் மெழுகு போன்ற பொருளாகும். இது உடலில் உள்ள கொழுப்பு உடைவதற்கு பதிலாக, அதை பாதுகாக்க உதவுகிறது.
யூஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் எனும் ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கை, அடிபோசைட்டுகள் உருவாகுதல் மற்றும் அழிக்கப்படுதல் இரண்டும் சூழலை சாந்தே அமைவதாக கூறுகிறது.
ஒருமுறை இத்தகைய அடப்சோரியம் உருவான பின்னர், பல நூறு ஆண்டுகளுக்கு அது நிலையாக இருக்கிறது.
டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி கூற்றின்படி, இது பல விஷயங்களை பொறுத்து அமைகிறது. வெப்பநிலை, காலநிலை, உணவு முறை, உடல் புதைக்கப்பட்டுள்ள முறை, உயிரிழந்த நபரின் உடல்நிலை உள்ளிட்ட பல விஷயங்களை பொறுத்து அமைகிறது.
டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி பிபிசி வங்க சேவையிடம் கூறுகையில், “ஈரமான சூழல்களில், சடலங்கள் வெள்ளை நிறத்தில் தோன்றும். அவற்றைப் பார்க்கும்போது ஏதோ ஒன்று பூசப்பட்டிருப்பது போன்று தோன்றும். உடலில் உள்ள கொழுப்பு பகுதி, மெழுகு போன்ற பொருளை உருவாக்கி, சடலம் முழுவதையும் சூழும். இது, நீருடன் ஏற்படும் வேதியியல் செய்முறையால் நடைபெறுகிறது” என்றார்.
இந்த செயல்முறை நடந்தால், அந்த சடலம் நீண்ட காலத்துக்கு அப்படியே இருக்கும் என்கிறார் அவர். அதாவது, உடல் அழுகத் தொடங்கும் செயல்முறை நடக்காது.
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழில் வெளியான மற்றொரு ஆய்வில், அத்தகைய சடலங்கள் பல பத்தாண்டுகளாக பதப்படுத்தப்படலாம் என்கிறது.
மேலும், அடாப்டாலஜி (adaptology) எனும் இந்த முறையில் மூன்று விஷயங்களும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாவது, ஹைட்ராக்ஸி கொழுப்பு அமிலங்கள் உருவாவது
இரண்டாவது, இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள அதிகப்படியான நீர்.
மூன்றாவது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை.
இந்த காரணங்களுக்காக, உடல்கள் மண்ணுக்குக் கீழே ஆழமாக புதைக்கப்படும்போதும் இத்தகைய சூழல் உருவாக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
டாக்டர். நஸ்முன் நஹார் ரோஸி கூறுகையில், இத்தகைய சூழலை உடலில் உருவாக்கக்கூடிய பல மருந்துகள் உள்ளன என்கிறார்.
பல வித உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் தனிமமும், உடல் அழுகுவதை மெதுவாக்குகிறது.
தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் தடயவியல் நிபுணர் மருத்துவர் கபீர் சோஹெல் கூறுகையில், இத்தகைய அடபோசிஸ் முறையை வேறுவிதமாக விளக்குகிறார்.
“இறந்த பின் உடலில் உள்ள கொழுப்பு கெட்டியாகி விடுவதால், உடல் அழுகுவதற்கு காரணமான பாக்டீரியா அல்லது மற்ற கிருமிகள் செயல்பட முடியாமல் போகிறது. அப்படியான சூழலில், உடலின் அமைப்பு அப்படியே மாறாமல் நீண்ட காலம் இருக்கிறது, மேலும் முகமும் அடையாளம் காணும் வகையில் உள்ளது. இத்தகைய சூழல்களில் உடல் நீண்ட காலத்துக்கு முன்பே புதைக்கப்பட்டாலும் அதே நிலையில் உள்ளது.” என்றார் அவர்
தாகா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறையில் இணை பேராசிரியராக உள்ள டாக்டர். முகமது மிஸானர் ரஹ்மான் கூறுகையில், உடலில் அதிகமாக கொழுப்பு இருந்தால், இவ்வாறு நிகழ வாய்ப்புள்ளது என்கிறார்.
புதைக்கப்படும் இடத்தில் காற்று இருந்தாலோ அல்லது அந்த நிலம் தாவரங்கள் வளர முடியாத தரிசு நிலமாக இருந்தாலோ அல்லது மணலாக இருந்தாலோ, உடல் அழுகுவது மெதுவாக இருக்கும் என்கிறார் அவர்.
“வங்கதேசத்தில் நிலவும் சூழலில், உடலின் தோல் இலகுவாகி, ஆறு முதல் 12 நாட்களுக்குள் உதிர்ந்துவிடும். ஆனால், இந்த கால அளவு பருமனாக இருப்பவர்களுக்கு நீள்கிறது. அப்படியான சமயங்களில், ஒரு மாதம் அல்லது அதற்கும் மேலான காலம் எடுக்கிறது,” என தெரிவித்தார் அவர்
வங்கதேசத்தில் குளிர் காலங்களில் நிலவும் வறண்ட வானிலையால், அடிபோஸ் திசுவின் மூலம் அழுகாமல் இருப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகின்றன. எனினும், இந்திய துணைக்கண்டத்தின் காலநிலை வேகமாக அழுகுவதற்கான சாதகத்தையே கொண்டுள்ளது.
வேதியியல் விளைவுகள்
மருத்துவர் கபீர் சோஹெல், சில சந்தர்ப்பங்களில் உடல்களை பதப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்தார். அப்படியான சூழல்களில், ஃபார்மாலின் உள்ளிட்ட பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய ரசாயனங்கள் பூசப்பட்ட உடல்கள், நீண்ட காலத்துக்கு பதப்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, வெளிநாட்டில் ஒருவர் இறந்து, அவரை அவருடைய சொந்த நாட்டுக்கு அனுப்பும்போதோ அல்லது வேறு காரணத்துக்காக பதப்படுத்த வேண்டிய தேவை இருந்தாலோ, அந்த சூழல்களில் எம்பால்மிங் எனும் செயல்முறை செய்யப்படுகிறது.
இதற்கு, ஃபார்மால்டீஹைட், மெத்தனால் மற்றும் மற்ற ரசாயனங்களின் உதவியுடன் உடல் பதப்படுத்தப்படுகிறது.
புதைக்கப்பட்ட பின்னரும் கூட, இந்த ரசாயனங்களால் உடல்கள் நீண்ட காலத்துக்கு அழுகாமல் அப்படியே இருக்கும்.
ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிக்கல் சயின்ஸ் எனும் இதழில் வெளியான கட்டுரையின்படி, மண்ணில் உள்ள உலோகங்கள், கனிமங்கள் மற்றும் அமிலத்தன்மை காரணமாக, உடலை அழுகச் செய்யும் பாக்டீரியாவின் விளைவுகளை குறைத்து, உடல் அழுகுதலை மெதுவாக்கும் என்கிறது.
இதுதவிர, உடல்களை பதப்படுத்த அங்கு நிலவும் வெப்பநிலையும் சில சமயங்களில் தாக்கம் செலுத்துகிறது. உதாரணத்திற்கு, இமயமலையில் இறப்பவர்களின் உடல்கள், பல நாட்களுக்கு அழுகாமலேயே உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு