திருச்சி: திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவெறும்பூர் பிரகாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பகுதியில் புதை சாக்கடை குழாயின் சில இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், அடைப்பை அப்புறப்படுத்துவதற்காக மாநகராட்சியில் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களான கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பிரபு(32), புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ரவி(38) ஆகியோர் சாக்கடைக்குள் இறங்கினர்.
அப்போது, புதை சாக்கடையில் உருவாகியிருந்த விஷவாயு தாக்கி இருவரும் மயங்கி விழுந்தனர். சக தொழிலாளர்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று விஷவாயுவை வெளியேற்றி விட்டு 2 பேரையும் மீட்டனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரின் உடல்களும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்புரவுத் தொழிலாளர்கள் இருவரும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் ஈடுபட்டதாலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்த தாக அப்பகுதி மக்கள் கூறினர்.