உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் ஜனவரி முதலாம் திகதியில் புது வருடத்தையும் புனித மரியாள் இயேசுவின் தாய் என்ற திருவிழாவையும் கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இன, நிற, மத, மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதுமுள்ள மக்களால் ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் முதல் தினம் ஆங்கிலப் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டு வந்தாலும் இந்த புத்தாண்டு எப்படி உருவானது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.
வருடத்தின் புதிய தினத்தை வரவேற்கும் நாம் அந்த தினம் எவ்வாறு தோன்றியது என்பதன் வரலாற்றை தெரிந்து கொள்வதும் அவசியம்.
மெசபடோனியர்களின் புத்தாண்டு
ஜனவரி முதல் திகதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங்களாகத்தான் இடம்பெறுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள் மார்ச் 25ந் திகதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில் ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தன.
மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25ஆந் திகதி ஆண்டின் முதல் திகதியாகவும் இருந்தது. இயேசுவின் தாய் மரியாள் கர்ப்பமுற்ற திகதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அவர்கள் அனுசரித்தனர்.
ரோமானியர்களின் புத்தாண்டு
சூரியனின் நகர்வினை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர்களின் கலண்டரின் மார்ச் 1 ஆம் திகதியையே புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினர். ரோமானிய மன்னர்களில் ஒருவரான நுமா போம்பிலியஸ் என்பவர் 10 மாதமாக இருந்த ஆண்டில் மேலதிகமாக இரண்டு மாதங்களைச் சேர்த்து ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என உருவாக்கினார்.
முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பெப்ரவரி என்று பெயர்கள வைத்தனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அந்த முறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது.
ஜுலியன் கலண்டர்
ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1ஆந் திகதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அதனை இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. 46 ஆம் ஆண்டில் அவர் அறிவித்தார். அவர் பின்பற்றிய கலண்டர் முறை, ஜுலியன் கலண்டர் முறை என அழைக்கப்பட்டது.
புத்தாண்டு தினத்தில் நிலவிய குழப்பம்
இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என கூறினர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் திகதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இவ்வாறாக 1500 ஆம் ஆண்டு வரை ஆண்டின் முதல் திகதியில் பல குழப்பங்கள் நிலவியது.
கிரிகோரியன் கலண்டர்
கி.பி. 1582 ஆம் ஆண்டு போப் 13 ஆம் கிரிகோரி ஜுலியன் கலண்டரை இரத்துச் செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு எனக் கூறி, அந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என 365 நாட்களையும் 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் கலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது.
புதிதாய் பிறந்த புத்தாண்டு
கிரிகோரியன் கலண்டர் முறைப்படி ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. அது முதல் கடந்த 500 ஆண்டுகளாக ஜனவரி 1ஆம் திகதி புத்தாண்டு தினமாக உலகம் முழுவதுமுள்ள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
The post புத்தாண்டு உருவானது எவ்வாறு? appeared first on Vanakkam London.