4
தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலங்களில் சுற்றுலா செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தாங்கள் வீட்டில் இல்லை என்பதையும், குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு சென்றிருப்பதையும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிரங்கப்படுத்துவது, திருடர்களுக்கு வாய்ப்பாக அமையக்கூடும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். வீடுகள் ஆளில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் இத்தகைய பதிவுகள், திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாகின்றன.
பாதுகாப்பு அபாயங்களைக் குறைக்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது விடுமுறைக்கால அனுபவங்களையும் புகைப்படங்களையும் சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய பின்னர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது, அயலவர்களிடம் அது குறித்து அறிவிப்பதோடு, பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.