0
புனித அந்தோனியார் கல்லூரி (கண்டி), புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி (கொட்டாஞ்சேனை), புனித சூசையப்பர் கல்லூரி (மருதானை), புனித பேதுருவானர் கல்லூரி (பம்பலப்பிட்டி) ஆகிய பாடசாலைகள் பங்குபற்றும் 56ஆவது புனிதர்களின் நான்கு முனை விளையாட்டு விழா நவம்பர் மாதம் 8ஆம், 9ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.
சகோதரத்துவம், நட்புறவு, விட்டுக்கொடுப்பு, பாரம்பரியம் மற்றும் ஒன்றுகூடல் ஆகியவற்றை பறைசாற்றும் விழாவாக புனிதர்களின் நான்கு முனை விளையாட்டு விழா (Saints’ Quadrangular) அமைகின்றது.
புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புனிதர்களின் நான்கு முனை விளையாட்டு விழா 1963இல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
பெசில் நோயர் (புனித ஆசீர்வாதப்பர்), டொம் டீன் (புனித அந்தோனியார்), ஜிம்மி வெண்டகூன் (புனித சூசையப்பர்), மொறிஸ் பேரேரா (புனித பேதுருவானவர்) ஆகியோரே அங்குரார்ப்பண விளையாட்டு விழாவின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களாக செயற்பட்டனர்.
அப்போது பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியினால் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், கத்தோலிக்க பாடசாலைகளான புனித அந்தோனியார், புனித சூசையப்பர், புனித பேதுருவானர் ஆகிய 3 பாடசாலைகள் மாத்திரமே விண்ணப்பித்திருந்தன. அப்போதுதான் புனிதர்களின் நான்கு முனை கிரிக்கெட் போட்டி உதயமானது.
இதனைத் தொடர்ந்து அங்குரார்ப்பண ஏற்பாட்டுக் குழுவினர், புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் மறைந்த ரஞ்சித் சமரசேகர ஆகியோர் இந்த நான்கு பாடசாலைகளையும் தொடர்ந்து உற்சாகப்படுத்தி ஊக்குவித்ததன் பலனாக இவ் விளையாட்டு விழா பொன் விழாவைக் கடந்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் மட்டுமல்லாமால் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், கத்தார் ஆகிய நாடுகளிலும் புனிதர்களின் நான்கு முனை விளையாட்டு விழா நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
ஆரம்பத்தில் கிரிக்கெட் போட்டி மாத்திரம் நடத்தப்பட்டுவந்தது. ஆனால், காலப்போக்கில் கூடைப்பந்தாட்டம், றக்பி ஆகிய விளையாட்டுக்கள் இணைத்தக்கொள்ளப்பட்டன. இதனைவிட மெய்வல்லுநர் போட்டிகள் புறம்பாக நடத்தப்பட்டு வருகிறது.
புனிதர்களின் நான்கு முனை விளையாட்டு விழாவானது நான்கு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விழாவாகும்.
இவ் விளையாட்டு விழா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பாடசாலையினது பழைய மாணவர்கள் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்படுகிறது.
இந்த வருடம் ஓல்ட் ஜோஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படுவதுடன் ஆரம்ப வைபவத்தில் சிட்ரெக் அண்ட் விரேலியோ நிறுவனத்தின் பணிப்பாளரும் புனித சூசையப்பர் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான டினுக் டி சில்வா விஜயரட்ன சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இரண்டாம் நாள் பரிசளிப்பு வைபவத்தின்போது புனித சூசையப்பர் கல்லூரியின பழைய மாணவர் கெனெத் டி ஸில்வா பிரதம அதிதியாக கலந்துகொள்வார்.
லங்காபே லிமிட்டெடின் முன்னாள் அதிபரான கெனெத் டி ஸில்வா, தற்போது லங்கா ரேட்டிங் ஏஜென்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
போட்டிகள்
பிரதான ரி20 கிரிக்கெட்டின் அரை இறுதிப் போட்டிகள் புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்திலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ரி20 கிரிக்கெட்டின் அரை இறுதிப் போட்டிகள் புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்திலும் நவம்பர் 8ஆம் திகதி நடைபெறும்.
இரண்டு பிரிவினருக்குமான இறுதிப் போட்டிகள் புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் நவம்பர் 9ஆம் திகதி காலையிலும் பிற்பகலிலும் நடைபெறும்.
பிரதான பிரிவு மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் புனித சூசையப்பர் கல்லூரியின் உள்ளக அரங்கில் இரண்டு தினங்களிலும் நடைபெறும்.
அணிக்கு எழுவர் றக்பி லீக் சுற்றும் இறுதிச் சுற்றும் புனித சூசையப்பர் கல்லூரி மைதானத்தில் நவம்பர் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெறும்.
இது இவ்வாறிருக்க, நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம் கண்டி, நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மடம் கொட்டாஞ்சேனை, திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பம்பலப்பிட்டி, சென். பிறிஜெட் கன்னியாஸ்திரிகள் மடம் கொழும்பு 7 ஆகிய சகோதர பெண்கள் பாடசாலைகள் பங்குபற்றும் இரண்டாவது அணிக்கு அறுவர் மென்பந்து நொக் அவுட் கிரிக்கெட் போட்டி புனித சூசையப்பர் மைதானத்தில் நவம்பர் 9ஆம் திகதி காலையிலும் மாலையிலும் நடைபெறும்.
கிரிக்கெட் போட்டிகளில் சம்பியனாகும் அணிகளுக்கு குவாட்ரெங்க்யூலர் கிண்ணங்களும் கூடைப்பந்தாட்டத்தில் சம்பியனாகும் அணிகளுக்கு அருட்தந்தை ஜோ ஈ. விக்ரமசிங்க கிண்ணமும் ஒட்டுமொத்த சம்பியனாகும் பாடசாலைக்கு ரஞ்சித் சமரசேகர ஞாபகார்த்த கிண்ணமும் வழங்கப்படும்.
ஒவ்வொரு விளையாட்டிலும் அதிசிறந்த வீரரகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் விசேட பரிசுகள் வழங்கப்படும்.