பட மூலாதாரம், Getty Images
கிறிஸ்தவர்களை பொறுத்தவரை, இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் இன்று. இதனை ஏன் புனித வெள்ளி (குட் ஃப்ரைடே) என்று அழைக்கின்றனர்?
பைபிளின் கூற்றுப்படி, இயேசுவுக்கு சிலுவை ஒன்றை ஏந்திச் செல்ல வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அதிலேயே அவர் அறையப்பட்டார்.
இதில் புனிதமாக கருத என்ன இருக்கிறது?
சில தரவுகள், இந்த நாள் புனிதமாக கருதப்படுவதால், ‘குட்’ என்று அழைக்கப்படுகிறது என்கிறது. சில தரவுகள், ‘லார்ட்ஸ் ஃப்ரைடே’ என்ற பதமே மருவி ‘குட் ஃப்ரைடே’ அழைக்கப்படுகிறது என்கிறது.
இந்த பதம் எங்கிருந்து தோன்றியது?
ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் மூத்த ஆசிரியர், ஃபியோனா மேக் ஃபெர்சன், இந்த பதம் பொதுவாக ஒரு மதம் சார்ந்த நிகழ்வு நடந்ததை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பதம் என்கின்றார்.
இந்த பின்னணியில் பயன்படுத்தப்படும் ‘குட்’ என்ற வார்த்தை, தேவாலயம் புனிதமாக கருதும் ஒரு நாளையோ அல்லது குறிப்பட்ட காலத்தையோ குறிக்க பயன்படுத்தப்பட்டதாகும் என ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி கூறுகிறது.
அதனால் தான் கிறிஸ்துமஸ் அல்லது பேன்கேக் நாள் அன்று, வாழ்த்துகள் அனைத்தும், “ஹேவ் ஏ குட் டைம்” என்பதாக அமைந்திருக்கும்.
ஈஸ்டருக்கு முன்பு வழங்கப்படும் புனித விருந்து, பேன்கேக் டே என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும்.
புனித வெள்ளி மட்டுமல்ல, புனித புதனும் ஈஸ்டருக்கு முன்பு கடைபிடிக்கப்படும். ஆனால் அது அதிக புகழ்பெற்ற நாளாக பார்க்கப்படுவதில்லை.
கி.பி.1290-வாக்கில் பயன்படுத்தப்பட்ட அகராதியில், புனித வெள்ளி, காட் ஃப்ரைடே (Gaud Friday) என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவம் தொடர்பான சந்தேக விளக்கக் குறிப்புகளைக் கொண்டிருக்கும் பல்டிமோர் கேடிசிசம், புனித வெள்ளி புனிதமாக கருதப்படுகிறது. ஏன் என்றால் அன்று தான், இயேசு மனிதர்கள் மீதான அளவு கடந்த அன்பை காட்டியுள்ளார் என்று குறிப்பிடுகிறது.
இந்த கேடிசிசம், 1885 முதல் 1960 வரை அமெரிக்க கத்தோலிக்கப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
1907-ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட முதல் கத்தோலிக்க என்சைக்ளோபிடீயா, குட் ஃப்ரைடே என்ற பதம் எங்கிருந்து தோன்றியது என்பது தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லை என்று குறிப்பிடுகிறது.
லார்ட்ஸ் ஃப்ரைடேவில் இருந்து இந்த பதம் மருவியது என்று சில தரவுகள் குறிப்பிடுகிறது.
‘குடேஸ் ஃப்ரெய்டக்’-ல் இருந்து இந்த பதம் மருவியிருக்கலாம் என்று சில தரவுகள் குறிப்பிடுகின்றன. நவீன டேனிஷ் மற்றும் ஆங்கிலோ -சக்ஸோன்ஸில் இது ‘லாங் ஃப்ரைடே’ என்று அழைக்கப்படுகிறது.
கிரேக்க இலக்கியத்தில் இது புனித மற்றும் பெரிய வெள்ளி (Holy and Great Friday) என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் ”புனித வெள்ளி” என்று ரொமான்ஷ் மொழியிலும், ”வருத்தமான வெள்ளி” என்று ஜெர்மன் மொழியிலும் அழைக்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?
நம் அனைவருக்கும் இயேசுவின் தோற்றம் எப்படி இருக்கும் என்று தெரியும். மேற்கத்திய கலையில் அதிகமாக உருவாக்கப்பட்ட கலைப்படம் இயேசுவுடையது.
உலகெங்கும் அவர் பயன்படுத்திய புகைப்படங்களில், நீண்ட முடியுடனும், தாடியுடனும் அவர் காணப்படுகிறார். பெரும்பாலான நேரங்களில் வெள்ளை நிற அங்கிகளோடு அவர் காணப்படுவார்.
அவருடைய முகம் அனைவருக்கும் பரீட்சையமானது. ஆனால் உண்மையில் இயேசு பார்ப்பதற்கு அப்படிதான் இருப்பாரா? அப்படி இல்லை.
நம் அனைவருக்கும் நன்கு பரீட்சையமான படமானது கிரேக்க சாம்ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்டது. பைசாண்டைன் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து பெறப்பட்ட இயேசுவின் படங்கள் நான்காவது நூற்றாண்டில் இருந்து பிரபலமடைந்தது.
அந்த படங்கள், இயேசு எப்படி இருப்பார் என்ற ஒரு அடிப்படையை வழங்குகிறது. ஆனால் அது வரலாற்று ரீதியான துல்லியத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை.
பட மூலாதாரம், Thinkstock
ஒரு பேரரசரின் படத்தை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரோமில் உள்ள சாண்டா புடென்ஜினா தேவாலயத்தில் இந்த படத்தை நம்மால் காண இயலும்.
இயேசு அதில் தங்க நிற டோகா (மேலங்கி) அணிந்திருப்பார். இந்த உலகத்தையே ஆளும் ஒரு அரசர் போன்று அந்த காட்சி இருக்கும். நீண்ட முடி மற்றும் தாடியுடன் அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் ஜீயஸ் (Zeus) போன்ற தோற்றத்தை அவர் கொண்டிருப்பார்.
தொன்மையான கிரேக்க மதத்தில் உச்ச கடவுளாக வணங்கப்பட்டவர் ஜீயஸ். அவருடைய புகழ்பெற்ற கோவிலானது ஒலிம்பியாவில் உள்ளது. அதில் இருக்கும் சிலையின் அடிப்படையில் தான் இயேசுவின் படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரோமப் பேரரசர் அகஸ்டஸின் சிலையும் ஜீயஸின் படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நாடோடித் துறவியாக இயேசு
பைசாண்டைன் கலைஞர்கள் இயேசுவை, சொர்க்கத்தில் இருந்து உலகை ஆளும் பேரரசராக வடிவமைத்துள்ளனர். ஜீயஸின் இளமைத் தோற்றத்தில் இயேசுவை உருவகப்படுத்தியுள்ளனர்.
காலப்போக்கில், இயேசுவை சொர்க்கத்தில் இருக்கும் நபராகக் காட்டும் உருவகப்படுத்தலில் மாற்றமடைந்தது. பிறகு, ‘ஹிப்பி’க்கான ஒரு தோற்றத்தோடு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த படங்களே காலப்போக்கில் இயேசுவின் படங்களாக நிலைநிறுத்தப்பட்டது.
கேள்வி என்னவென்றால், இயேசு உண்மையாகவே பார்க்க எப்படி இருந்தார்? தலை முதல் பாதம் வரை அவர் எப்படி இருந்தார் என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்போம்.
பட மூலாதாரம், ALAMY/GETTY IMAGES
ஆரம்ப கால கிறித்துவர்கள் இயேசுவை, சொர்க்கத்தில் இருக்கும் கடவுளாக நினைக்கவில்லை. மாறாக, அவரை உண்மையான மனிதனாகவே நினைத்தார்கள். அவர்கள் வணங்கிய இயேசுவிடம் மீசையோ, நீண்ட முடியோ இல்லை.
ஆனால் ஒரு நாடோடி துறவியாக, இயேசுவின் உருவத்திற்கு தாடி இணைக்கப்பட்டது. ஏன் என்றால் அவர் வாழ்ந்த நாடோடி வாழ்வில் அவர் தாடியை மழிக்கவில்லை என்பது கூட அவர்களின் கருத்தாக்கமாக இருக்கலாம். அதனால் தான் இயேசுவின் படங்களில் அவர் தாடியோடு காணப்படுகிறார்.
பரட்டையாக காணப்படும் தலைமுடியும், தாடியும் தத்துவவாதி போன்ற தோற்றத்தை அவருக்கு அளித்திருக்கலாம். மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக நினைக்கும் ஒரு துறவி என்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் இந்த மாற்றங்கள் அவருடைய படத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு