பட மூலாதாரம், Getty Images
“அவர் ஓடும் விதம் மற்ற எல்லோரும் ஓடுவதை விடவும் வித்தியாசமானது. அவருடைய கடைசி கட்ட ‘ஆக்ஷனும்’ வித்தியாசமாக இருக்கும். நான் அவரது பந்துவீச்சை போதுமான அளவு எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கு ஒத்துப்போக எனக்கு சில பந்துகள் அவகாசம் எடுக்கவே செய்கிறது”
பும்ராவின் வேரியேஷன்கள், அதை சரியான நேரத்தில் பயன்படுத்தும் உத்தி, துல்லியம் மற்றும் சீரான செயல்பாடு அவரை நம்பர் 1 டெஸ்ட் பௌலராக்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் விட பும்ராவின் ‘வித்தியாசமான பௌலிங் ஆக்ஷனே’ பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி பேட்டர்கள் பலரும் கூறியுள்ளனர்.
மெதுவாக ஓடிவந்து, முதுகை முன்னே அதிகமாகவும், பக்கவாட்டில் கொஞ்சமாகவும் வளைத்து, கைகளை முழுமையாக நீட்டி அவர் பந்துவீசும் முறை சற்றே தனித்துவமான ஒன்று. இது அதிகம் காயம் ஏற்படுத்தக்கூடிய முறை என்று ஆரம்பத்தில் பேசப்பட்டிருந்தாலும், வெகுவிரைவிலேயே பும்ராவின் ஆயுதமாக மாறிவிட்டது.
அந்த பந்துவீச்சு முறையை ‘டீகோட்’ செய்த பல முன்னணி வீரர்களும் வல்லுநர்களுமே, அதுவே அவருக்கு மிகப் பெரிய பலம் என்று கூறியிருக்கிறார்கள்.
பும்ராவின் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 6), அந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை எப்படி அவரது பலமாக விளங்குகிறது என்று பார்ப்போம்.
குழப்பம் ஏற்படுத்தும் ‘வேகம் இல்லாத சிறிய ரன் அப்’
வழக்கமாக பெரும்பாலான வேகப்பந்துவீச்சாளர்களின் ரன் அப் அதிக தூரம் கொண்டதாக இருக்கும். அவர்கள் ஓடிவரும் வேகத்திலிருந்து அவர்களுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால், பும்ராவின் ரன் அப் குறுகிய தூரம் கொண்டது. அதேசமயம் மெதுவானதும் கூட. இது பேட்டர்களின் தயார் நிலையை சோதிப்பதோடு, அவர்களுக்கு எதிர்பாராத சவாலைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள் இங்கிலாந்தின் இரு முன்னாள் கேப்டன்கள்.
இந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடரின்போது, ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பும்ராவின் பந்துவீச்சு பற்றி அலசியிருந்தார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன்.
பட மூலாதாரம், Getty Images
அப்போது பேசிய நாசர் ஹுசைன், “நீங்கள் (ஒரு பேட்டராக) எப்போது நகரப் போகிறீர்கள் என்று யோசிக்கும் போது பும்ராவின் ‘ஸ்டட்டரிங் ரன் அப்’ (நின்று நின்று ஓடுவது போன்ற ரன் அப்) சிக்கலை ஏற்படுத்தும். அவர் ஓடி வருவதைப் பார்த்தால், அந்தப் பந்து ஏதோ காலிங்வுட் வீசும் வேகத்தில் (சற்றே மிதமான வேகத்தில்) வரும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். ஏன் சில சமயம் அவர் ஓடிவருவதைப் பாதியில் நிறுத்தப் போகிறாரா என்றுகூட நினைப்பீர்கள். ஆனால், அது அப்படியிருக்கப் போவதில்லை” என்று கூறினார்.
பெரும்பாலான பேட்டர்களுக்குமே ‘டிரிகர் மூவ்மெண்ட்’ என்பது இருக்கும். அதாவது, அவர்கள் பந்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக தங்கள் ஸ்டான்ஸில் இருந்து சிறிய அளவு நகர்வார்கள். பந்துவீச்சாளர் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வரும்போது, அவர்கள் இந்த நகர்வைத் தொடங்குவார்கள். பெரும்பாலான பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை வழக்கமான பாணியில் இருக்கும் என்பதால் அவர்களுக்குப் பிரச்னை இருக்காது. இந்த இடத்தில்தான், பும்ராவின் வித்தியாசமான ரன் அப், அவர்களைக் குழப்பிவிடும்.
அதனால்தான் ஸ்மித் போன்ற அனுபவ வீரருக்கே, ஒவ்வொரு முறையும் பும்ராவை எதிர்கொள்ளும்போது சில பந்துகள் அவகாசம் தேவைப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், அவர் மெதுவாக ஓடிவருவதைப் பார்த்துவிட்டு, பந்தை வேகமாக எதிர்கொள்வதும் பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.
கடந்த ஆண்டு, டெய்லி மெயில் பத்திரிகையில் பும்ரா பற்றி எழுதியிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஸ்டுவர்ட் பிராட், “பும்ரா மிகவும் அமைதியாக, மெதுவாக, ‘shuffle’ செய்து ஓடும்போது அங்கே ஆற்றல் அதிகம் உண்டாகப்படுவதில்லை. அதனால் அங்கு பில்ட் அப்பே இல்லை. அப்படியிருக்கும் போது திடீரென்று பந்து பெரும் வேகத்தில் உங்களை நோக்கி வரும்போது பெரும் குழப்பம் ஏற்படுத்தும். இதுவே மற்ற சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைப் பாருங்கள், நல்ல வேகத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கிரீஸை நோக்கி ஓடிவருவார்கள். அப்போது ஒரு பேட்டருக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும். பும்ரா விஷயத்தில் அது நேரெதிராக இருக்கிறது” என்றார்.
இதன்மூலம் உளவியல் ரீதியாக ஒரு பேட்டரை பும்ராவின் ரன் அப் குழப்புகிறது என்கிறார் பிராட்.
பும்ராவின் டெலிவரி ஸ்டிரைட் (Delivery Stride – பந்தை வீசுவதற்கு முன்பான கடைசி அடி) சிறிதாக இருப்பதால் அவரால் சமநிலையைத் தக்கவைக்க முடிகிறது, கட்டுப்பாட்டோடு இருக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
ஆற்றலை உருவாக்கும் பௌலிங் ஆக்ஷன்
அதேசமயம், மெதுவாக ஓடிவரும் ஒருவரால் எப்படி பந்தை வேகமாக வீசமுடியும் என்ற கேள்வி எழுகிறது.
“பெரும்பாலான பௌலர்கள் 60% ஆற்றலை அவர்களின் வேகமான ரன் அப் மூலம் உருவாக்குகிறார்கள். ஆனால், பும்ரா தான் ஓடிவருவதன் மூலம் 30% ஆற்றலையும், தன் பௌலிங் ஆக்ஷன் மூலம் 70% ஆற்றலையும் உருவாக்குகிறார்” என்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேமியன் ஃபிளெமிங்
சில ஆண்டுகளுக்கு முன்பு, பும்ராவின் பந்துவீச்சு முறை பற்றி 7 ஸ்போர்ட் நிகழ்ச்சியொன்றில் அலசியிருந்த ஃபிளெமிங், அந்த பந்துவீச்சு முறையால் அவர் உடல் கவண் போல் செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.
பும்ரா பந்தை வீசும்போது, அவருடைய முன்காலுடைய (இடது கால்) முழங்கால் வளையாமல் நேராக இருப்பதால், அது உடலின் கீழ்ப் பகுதியுடைய வேகத்தைக் குறைத்து, மேற்பகுதியின் வேகம் அதிகரிக்க உதவுகிறது என்று ஃபிளெமிங் கூறினார். “பும்ராவின் முன்கால் வேகத்தைக் குறைக்கும்போது, உடல் மற்றும் தோள்பட்டை இலக்கை (பேட்டர்) நோக்கி கவண் போல் செலுத்தப்படுகிறது” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
பும்ரா பந்துவீசும்போது அவரது முழங்கை மடக்கப்படாமல் நீண்டிருக்கும். இந்த நிலையை ஹைப்பர்-எக்ஸ்டென்ஷன் (hyperextension) என்கிறார்கள். இந்த நிலையில் பும்ராவுடைய முழங்கையின் வேகம் குறையும்போது, முன்கையின் வேகம் அதிகரித்து, அது கவண் போல் செயல்பட்டு பந்தை முன்னே செலுத்தத் தொடங்குகிறது என்றார் ஃபிளெமிங்.
மூன்றாவது கட்டமாக அவருடைய மணிக்கட்டும் இதேபோன்ற வேலையைச் செய்வதாக அவர் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“பும்ராவின் மணிக்கட்டு நம்பமுடியாத அளவுக்கு வளைந்துகொடுக்கிறது (flexible). இதை நீங்கள் சர்வதேச பௌலர்களிடம் அதிகம் பார்க்க முடியாது. இங்கே உள்ளங்கையின் வேகம் குறையத் தொடங்கும்போது, மணிக்கட்டின் வேகம் கூடி அது கவண் போல் பந்தைத் தள்ளுகிறது” என்று ஃபிளெமிங் கூறினார்.
இப்படி பும்ராவின் பந்துவீச்சு முறை அவரது உடலின் மூன்று பகுதிகளை கவண் போல் பயன்படுத்துவதால் அவருடைய பந்தில் வேகம் உருவாகிறது.
பட மூலாதாரம், Getty Images
விரைவாக கீழே இறங்கும் பந்து
பெரும்பாலான பௌலர்களைக் காட்டிலும் பும்ராவின் பந்து சீக்கிரமாக ஆடுகளத்தில் பிட்ச்சாகிவிடும். அதனால் பேட்டர்கள் அதைக் கணிப்பது மிகவும் கடினமாகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலை, 2019ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் விவரித்திருந்தார் ஐஐடி கான்பூரின் விண்வெளி பொறியியல் பேராசிரியர் சஞ்சய் மிட்டல்.
வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை ரிலீஸ் செய்யும்போது, அது பின்னோக்கி சுழன்றுகொண்டே (back spin) செல்கிறது. அப்போது மேக்னஸ் விளைவு (Magnus effect) காரணமாக பந்தில் மேல்நோக்கி விசை ஏற்படுத்தப்படுகிறது.
“பேக் ஸ்பின்னுடன் நகரும் கிரிக்கெட் பந்தில் இருக்கும் மேக்னஸ் விசை, பந்தை காற்றில் அதிக நேரம் மிதக்க வைக்கிறது. இது பேட்டர்கள் பந்தை அடிப்பதை எளிதாக்குகிறது” என்கிறார் சஞ்சய் மிட்டல்.
அதேசமயம், பும்ரா பந்தை அதீதமாக பின்னோக்கி சுழலச் செய்வதால், அவர் தலைகீழ் மேக்னஸ் விளைவை உருவாக்குகிறார் என்றும், அதனால் பந்து விரைவாக பிட்ச் ஆகி பேட்டர்களுக்கு சவால் கொடுக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“பும்ராவால், 1000 ஆர்பிஎம் சுழற்சி வேகம் மற்றும் மிகவும் நிலையான சீம் பொசிஷனுடன் சுமார் 145 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும். இது கிரிக்கெட் பந்திற்கு கிட்டத்தட்ட 0.1 சுழல் விகிதத்தை அளிக்கிறது. ஐஐடி கான்பூரின் தேசிய காற்று சுரங்கப்பாதை வசதியில் உள்ள சுழலும் கோளத்தில் (Rotating sphere at the National Wind Tunnel Facility) செய்யப்பட்ட சோதனைகள், இந்த சுழல் விகிதம் பந்தில் தலைகீழ் மேக்னஸ் விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பும்ராவின் அதீத வேகத்தில் நகரும் ஒரு கிரிக்கெட் பந்தில், கீழ்நோக்கிச் செல்லும் விசை செயல்படும்போது, பந்து கூர்மையாகக் கீழ்நோக்கிச் செல்கிறது. எனவே பேட்ஸ்மேன்கள் அவரது பந்துகளைக் கணிப்பதில் சிரமப்படுகிறார்கள்” என்று சஞ்சய் மிட்டல் எழுதியிருந்தார்.
சாட்டை சுழற்றப்படுவதுபோல் பும்ராவின் மணிக்கட்டு (கவண் போல் என்று ஃபிளெமிங் குறிப்பிட்டது) பந்தை ரிலீஸ் செய்வதுதான் அவரது பந்துகளில் பின்னோக்கிய சுழற்சியை அதிகப்படுத்துகிறது. இது வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பின்னோக்கிய சுழற்சியையும் அதிகப்படுத்துகிறது. அதனால், பந்து விரைவாக பிட்ச் ஆகிறது.
ஆக, பும்ராவின் உடல் கவண் போல் செயல்படுவது, வேகத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பந்தை வேகமாக கீழே இறக்கி அவரது பந்துவீச்சை மேலும் தனித்துவமாக்குகிறது.
குறையும் இடைவெளி, குறையும் நேரம்
பும்ராவின் இந்த பௌலிங் ஆக்ஷன் இன்னொரு விதத்திலும் பேட்டர்களுக்கு சவாலாக விளங்குகிறது.
பெரும்பாலான பௌலர்கள் பந்தை விடுவிக்கும்போது அவர்கள் கை பௌலிங் கிரீஸுக்கு நேர் கோட்டிலோ அல்லது சற்று முன்னரோ இருக்கும். ஆனால், பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை மூலம், அவரது பந்துவீச்சு கையான வலதுகை வெகுதூரம் முன்தள்ளி இருக்கிறது.
மிகையாக நீட்டப்பட்ட பும்ராவின் கை (hyperextended arm) காரணமாக, அவர் பௌலிங் கிரீஸிலிருந்து வெகுதூரம் முன்தள்ளி பந்தை விடுவிக்கிறார். இதனால் பந்துக்கும் பேட்டருக்குமான இடைவெளி குறைவதோடு, பேட்டர் எதிர்பார்ப்பதை விட பந்து சீக்கிரமே வந்துவிடுகிறது. அதனால், அவர்கள் அதற்கு விணையாற்றுவதற்கான நேரம் குறைகிறது. அதனால் அவர் வீசும் வேகத்தை விட அதிக வேகத்தில் பந்துவீசுவதாக பேட்டர்கள் உணர்கிறார்கள்.
இதுபற்றிய ஆர்தர்டன் மற்றும் மார்க் வுட் இடையிலான உரையாடலில், ஒரு தருணத்தில் வுட்டை விட 47 செ.மீ முன்தள்ளி பந்தை பும்ரா ரிலீஸ் செய்ததாகக் குறிப்பிட்டார் ஆர்தர்டன். “அந்தப் பந்து நான் பேட்டை கீழே கொண்டுவருவதற்கு 47 நொடிகள் முன்பாகவே என்னை தாக்கும்” என்று நகைச்சுவையாகப் பதிவு செய்திருந்தார் வுட்.
பட மூலாதாரம், Getty Images
எந்த பேட்டரும் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கிரீஸிலிருந்து ரிலீஸ் ஆகும் பந்துக்கே ஆடிப்பழகியிருப்பார்கள். வெகு சில வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே சற்று முன்னர் வருவார்கள். பும்ராவை எதிர்கொள்ளும்போது அவர்கள் முற்றிலும் பழக்கப்படாத ஒரு சூழ்நிலையைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அவர்களால் வேறொரு வேகத்தில் பந்தை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்படி பல தனித்துவங்கள் நிறைந்ததால் தான் பும்ராவின் பந்துவீச்சைக் கணிப்பது பலருக்கும் சவாலாக இருக்கிறது.
இதுபற்றிப் பேசிய நாசர் ஹுசைன், “பும்ராவுடைய ரன் அப், அவருடைய ஆக்ஷன், மிகையாக நீண்டிருக்கும் கைகள், பந்தை வீசும்போது அவர் இருக்கும் நிலை… இதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் பேட்டர்கள் குழப்பம் அடைவார்கள். அதனால் பும்ராவைப் பார்க்காமல், பந்தை மட்டும் பார்த்து ஆடுவதுதான் பாதுகாப்பானது” என்றும் அறிவுரை வழங்குகிறார்.
இந்த தனித்துவங்கள் போக இன்ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லோயர் பால்கள் என பல வேரியேஷன்களை வைத்திருக்கும் பும்ரா, அதைத் துல்லியமாகவும் செயல்படுத்துகிறார்.
‘இந்த பௌலிங் ஆக்ஷன் எப்படி வந்தது என்றே தெரியவில்லை’
இன்று பெரிய அளவு பேசப்படும் இந்த வித்தியாசமான பௌலிங் ஆக்ஷன் தனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை என்கிறார் பும்ரா.
இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் உடனான ஒரு உரையாடலில் இதுபற்றிப் பேசியிருந்த அவர், “எனக்கு இந்த பௌலிங் ஆக்ஷன் எப்படி வந்தது என்று சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் எல்லாமே தொலைக்காட்சியைப் பார்த்து கற்றுக்கொண்டதுதான். பயிற்சியாளர்கள் என்று யாரும் இல்லை. அதனால் அப்போது நான் யாரையெல்லாம் பார்க்கிறேனோ, அவர்களைப் போல பந்துவீசிப் பார்ப்பேன். அவை அனைத்தும் சேர்ந்து இப்படியொரு ஆக்ஷன் வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த முறையால் தன் உடல் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றும், அதனால் தான் அதைத் தொடர்ந்ததாகவும் பும்ரா கூறினார்.
“அப்போது(சிறு வயதில்) பவுண்டரி எல்லைகள் சிறிதாக இருக்கும். அதனால் என்னால் அதிகம் ஓடமுடியாது. அப்போதெல்லாம் நான் இன்றுபோல் நடக்கவில்லை. ஓடிக்கொண்டுதான் இருந்தேன். அதன்பிறகுதான் ஆற்றலை சேமிக்கலாமே என்று கொஞ்சம் நடை, கொஞ்சம் ஓட்டம் என்று மாற்றிக்கொண்டேன். அதனால் வேகம் குறையவில்லை எனும்போது அதையே பின்பற்றத் தொடங்கினேன்” என்றார் பும்ரா.
அப்படி ஆற்றலை சேமித்ததன் மூலம் பெரிய ஸ்பெல்கள் வீசும் ரஞ்சி போன்ற போட்டிகளில் மற்ற பௌலர்களை விட தான் சற்று புத்துணர்வாக இருந்ததாகவும் கூறினார். இந்த முறை அங்கு நன்றாகத் தனக்கு உதவியதால், அதையே சர்வதேச அரங்குக்கும் எடுத்துவர முடிவு செய்ததாகவும் கூறினார் பும்ரா.
அவர் கூறிய இன்னொரு முக்கியமான விஷயம், அந்த பந்துவீச்சு முறையை எந்த பயிற்சியாளரும் பெருமளவு மாற்றவில்லை என்பது.
இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் உடன் கடந்த ஆண்டு நான் கொண்டிருந்த உரையாடலில், அவரும் அதைத்தான் சொல்லியிருந்தார்.
“எந்தவொரு வீரரின் இயற்கையான இயல்பையும் நாம் விருப்பத்துக்கு மாற்றிவிடக்கூடாது. பயிற்சி கொடுப்பதன் முக்கிய சாராம்சம், அவர்களை மேம்படுத்துவதுதான். நாங்கள் பும்ராவிடம் இயற்கையாகவே திறமை இருப்பதை உணர்ந்தோம். அதை எப்படி சரியாகக் கையாள்வது, எப்படி காயங்கள் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வது, அதற்கு என்ன மாதிரியான முன்னெடுப்புகள் எடுக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். பும்ராவின் பௌலிங் ஆக்ஷனை மாற்ற நினைத்ததே இல்லை” என்று பரத் அருண் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு