பட மூலாதாரம், Getty Images
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
”இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும். இது தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரங்களில் புயலாக வலுப்பெறக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 25ம் தேதி வாக்கில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை – தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை
இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.