0
தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான புயல்கள் மற்றும் வெள்ளத்தால் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு இங்கிலாந்து அரச குடும்பம் சார்பில் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ், ஆழமான இரங்கலை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ அறிக்கையில், மன்னர் சார்ள்ஸ், “பிராந்தியம் முழுவதும் பரவலான அழிவுகள் ஏற்பட்டுள்ளதை அறிந்து நானும் ராணி கமிலாவும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
“மக்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை மிகுந்த வேதனை அளிக்கிறது” என வருத்தத்துடன் கூறிய மன்னர், “அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் மனமார்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “வீடுகள் அழிக்கப்பட்ட பலருக்கும், காணாமல் போனவர்களின் செய்திக்காகக் காத்திருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம்” என மன்னர் கூறினார்.
இந்த அவசர நிலையில் துணிச்சல் மிக்க அவசரகால பணியாளர்கள், மீட்பு குழுக்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்குபவர்களை மன்னர் சார்ள்ஸ் பாராட்டினார்.
இந்தியா, மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்த மன்னர், “பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் நாங்கள் உறுதியாக மனங்களில் வைத்திருக்கிறோம். அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்க பிரார்த்தனை செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
“இயற்கையின் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசரத் தேவையாகும். இந்தப் பேரழிவுகள் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் சவால்களின் தெளிவான நினைவூட்டலாக உள்ளன” என மன்னர் சார்ள்ஸ் தனது செய்தியில் குறிப்பிட்டார்.