2010-ல் திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கான தனது வியூகப் பயணத்தை கோவையிலிருந்து தான் தொடங்கினார் ஜெயலலிதா. அவரது வழியைப் பின்பற்றி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையிலிருந்தே தொடங்குகிறார். 2006-11 திமுக ஆட்சியில் மின்வெட்டை கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் 2010-ல் கோவை வஉசி மைதானத்தில் அதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்ற அந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜெயலலிதாவே தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எடுத்துவைத்துப் பேசி அதிமுக தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தார் ஜெயலலிதா. கோவையில் தொடங்கிய இந்தப் பயணத்தை மற்ற மாவட்டங் களுக்கும் விரிவுபடுத்திய அவர், இதை தேர்தல் பிரச்சாரப் பயணமாகவே மாற்றிக்கொண்டார். 2011-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு ஜெயலலிதாவின் மாவட்ட வாரியான இந்த ஆர்ப்பாட்டங்களே அடித்தளம் அமைத்தன.
2011-ல் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தையும் சென்டிமென்டாக கோவை வஉசி மைதானத்திலிருந்தே தொடங்கினார் ஜெயலலிதா. அவரது பாணியில் கோவையிலிருந்தே தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார் பழனிசாமி. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 2 இடங்கள் வீதம் கோவையின் 10 தொகுதிக்கும் சேர்த்து மொத்தமாக 20 இடங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் பழனிசாமி.
பிப்ரவரி முதல் வாரத்தில் திட்டமிடப்பட்ட அவரது இந்தப் பயணம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, அத்திக்கடவு – அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்தியதற்காக பிப்ரவரி 9-ம் தேதி அன்னூரில் பழனிசாமிக்கு பாராட்டு விழா எடுக்கிறார்கள். இதையும் பிரமாதப்படுத்திக் காட்ட அதிமுக தரப்பில் தயாராகி வருகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், “கோவையில் தொடங்கும் புரட்சித் தமிழர் பழனிசாமியின் பிரச்சாரப் பயணம் மாநில அளவில் பேசு பொருளாக மாறும். கட்சியினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஒரு புதிய நம்பிக்கையை விதைக்கும். அன்னூர் பாராட்டு விழாவிலும், கோவை சுற்றுப் பயணத்திலும் திரளப் போகும் மக்களின் பெரும் திரட்சியானது மீண்டும் அதிமுக அதிகாரத்துக்கு வருவதற்கான முன்னறிவிப்பாக இருக்கும்.
2010-ல் கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் எவ்வாறு கட்டியம் கூறியதோ, அதே மாதிரி பெரும் தொடக்கத்தை பழனிசாமியின் கோவை சுற்றுப் பயணம் தரும். நிர்வாகத் திறனற்ற திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தனை ஓட்டைகளை வைத்துக் கொண்டு 200 தொகுதிகளில் வெற்றி என கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது கனவை புரட்சித் தமிழர் பழனிசாமியின் சுற்றுப் பயணம் நிச்சயம் தகர்க்கும்” என்றார்.
இம்முறை கோவை மாவட்டத்தில் திமுக கொடியை நாட்டிவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக கடந்த நவம்பர் மாதமே கோவையில் கள ஆய்வையும், கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தினார். அந்தவிதத்தில், 200 தொகுதிகளில் வெற்றி என்று சொல்லிவரும் அவரும் கோவையிலிருந்தே தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். அடுத்ததாக கோவை சென்டிமென்டுடன் பழனிசாமியும் வருகிறார். யாருடைய கனவு நனவாகிறது என்று பார்க்கலாம்!