தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார்.
“இது முற்றிலும் எதிர்பாராதது,” என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. “நான் சிறப்பாக, ஆரோக்கியமாக, முழு உடற்தகுதியோடு இருந்தேன், எந்த ஒரு நோய்க்கான அபாயமும் இல்லை. இது எனக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. என்னால் இதை நம்ப முடியவில்லை. எனது வாழ்க்கையில் எனக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை”.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் லுயிசாவுக்கு மூன்றாம் நிலை புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, அப்போதே அவருக்கு புற்றுநோய் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்தது.
நான்கரை மாதத்துக்கு மேல் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், அவரது மார்பகத்தின் ஒரு பகுதியை நீக்க அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் ரேடியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் லுயிசாவுக்கு புற்றுநோய் சிகிச்சை நிறைவடைந்தது, ஆனால் புற்றுநோய் மீண்டும் வராமல் இருக்க அவர் தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது.
“கீமோதெரபி மிக தீவிரமாக இருந்தது, ஆனால் எனது உடல் அதனை நன்கு தாங்கிக்கொண்டது. அதற்கு நான் சுறுசுறுப்பாக இருந்ததும் உடலை வலுவாக வைத்திருந்ததும்தான் காரணம் என்பேன்”, என்று அவர் நினைவுகூர்ந்தார்.
அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
“நல்வாய்ப்பாக, எனது மார்பகத்தை முழுமையாக அகற்றவேண்டிய தேவை ஏற்படவில்லை. எனது முடியை இழக்க வேண்டியிருந்ததுதான் இதில் எனக்கு மிகவும் கடுமையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் கண்ணாடியில் என்னைப் பார்க்கும்போது, நான் பயந்துபோவேன். இது எனது குழந்தைகளையும் பாதித்தது.”
லுயிசாவைப் போலவே உலக அளவில் பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோரின் முன்னோர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் ரீதியாகவோ, சூழலியல் மற்றும் வாழ்வியல் காரணங்களால் வயது முதியவர்கள் மத்தியில் புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகிறது. உதாரணமாக ஒரு நபர் வயதடையும்போது, உயிரணு பிரிதல் அதிகரிக்கும். இது பிறழ்வுகள் (mutation) உருவாக வழிவகுக்கிறது மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது
எனவே, புற்றுநோயியல் நிபுணர்கள் நீண்ட காலமாக இளம் வயதினரிடையே மார்பகப் புற்றுநோயில் BRCA1 மற்றும் BRCA2 பிறழ்வுகள் போன்ற மரபணு காரணிகளுடன், இளம் வயதினருக்கு ஏற்படும் ஆரம்பகால புற்றுநோய் வருவதைக் கண்டறிவதை இணைத்து வருகின்றனர்.
இருப்பினும், லுயிசாவைப் போன்ற அதிகமான நோயாளிகளுக்கு, மரபணு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
அதிகரித்து வரும் நோய் பாதிப்புகள்
பிஎம்ஜே என்னும் புற்றுநோய் இதழில் சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, 1990 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் 50 வயதுக்குட்பட்டவர்களின் ஆரம்பகால புற்றுநோயின் பாதிப்பு 9% அதிகரித்திருப்பதாகவும், இவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்புடைய மரணங்கள் 28% அதிகரித்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 204 நாடுகளில் 29 வகையான புற்றுநோய்களை பகுப்பாய்வு செய்தது.
இதேபோல், தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்காவில் தலைமுறை தலைமுறையாக 17 வகையான புற்றுநோய் பாதிப்பு சதவிகிதங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகக் காட்டுகிறது, குறிப்பாக Gen X மற்றும் மில்லினியல்ஸ் (1965 மற்றும் 1996க்கு இடையில் பிறந்தவர்கள்) மத்தியில் இது அதிகரித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.
2012 மற்றும் 2021க்கு இடையில் 50 வயதுக்குட்பட்ட வெள்ளையின பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் ஏற்படும் விகிதம் ஆண்டுக்கு 1.4% உயர்ந்த நிலையில், அது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் 0.7% ஆக இருந்ததாக, அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் (ACS) புதிய அறிக்கை தெரிவிக்கின்றது.
பிஎம்ஜே புற்றுநோய் இதழில் நாசித் தொண்டை, வயிறு, பெருங்குடல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களும் இளைஞர்களிடம் அதிகரித்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கான காரணிகள்
இதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதிகரிக்கும் புற்றுநோய் வளர்ச்சி, பல பத்தாண்டுகளாக புற்றுநோய் தடுப்பில் ஏற்பட்ட முன்னேற்றங்களை மாற்றியமைக்கக்கூடும் என்ற அபாயம் இருப்பதாக லேன்செட் ஆய்வு எச்சரிக்கிறது.
பிஎம்ஜே புற்றுநோய் இதழ் மற்றும் லேன்செட் அறிக்கைகளின்படி, சிவப்பு இறைச்சி (ஆடு, மாட்டிறைச்சி போன்றவை) மற்றும் சோடியம் அதிகம் உள்ள உணவுகள், பழங்கள் மற்றும் பால் குறைவாக உள்ள உணவுமுறை போன்றவற்றுடன், அதிகளவு மது அருந்துதல் மற்றும் புகையிலை பயன்பாடு போன்றவையே முக்கிய காரணிகளாக கருதபடுகின்றன.
மேலும் உடல் பருமன் ஏற்படுவதால் வரும் உடல் வீக்கம் மற்றும் ஹார்மோன் ஒருங்கின்மை போன்றவையும் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
அமெரிக்காவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் 17 வகை புற்றுநோய்களில் சிறுநீரகம், கருப்பை, கல்லீரல், கணையம் மற்றும் பித்தப்பை போன்ற 10 வகை புற்றுநோய்கள் உடல் பருமன் தொடர்பானவை என்று லான்செட் அறிக்கை குறிப்பிடுகிறது.
இருப்பினும், இந்த காரணிகள் அனைத்தும் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை விளக்கவில்லை.
ஆனால், அனைத்து புற்றுநோய் நேர்வுகளையும், இந்த காரணங்கள், விளக்குவதில்லை.
புற்றுநோய்க்கான மற்ற காரணங்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மின் சாதனங்கள் அல்லது தெருவிளக்குகள் மூலம் செயற்கை ஒளி தொடர்ச்சியாக உடலில் படுவது நமது உடல்நிலையை பாதித்து மார்பு, பெருங்குடல், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சிலர் வாதிடுகின்றனர்.
இரவில் அதிக நேரம் ஒளி படும்படியாக இரவு நேர பணியில் பணியாற்றுவது மெலடோனின் அளவுகளை குறைத்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை ஊக்குவிக்கக்கூடும் என பிற ஆய்வுகள் கூறுகின்றன.
ஜூன் 2023-ல் நியூசிலாந்தை சேர்ந்த பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரான்க் பிரிசெல் பெருங்குடல் புற்றுநோயை உண்டாக்குவதில் நுண் நெகிழிகளின் பங்கு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். இது ஆணுறையில் ஊசியால் ஓட்டையிடுவதைப் போல பெருங்குடலின் மேல் உள்ள பாதுகாப்பு அடுக்கை சேதப்படுத்துவது போன்றது என்று குறிப்பிட்டார்.
உணவில் சேர்க்கப்படும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட எமல்சிஃபையர்கள் மற்றும் நிறமூட்டிகள், குடல் அழற்சி மற்றும் டிஎன்ஏ பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். புற்றுநோய் ஆய்வுக்கான அமெரிக்க சங்கத்தின் கூற்றின்படி, குடற் செயல்பாடு கோளாறு, பெருங்குடல் புற்றுநோயோடு மட்டுமல்லாது, மார்பக மற்றும் ரத்த புற்றுநோயோடும் தொடர்புப்படுத்தப்படுகிறது.
ஆன்டிபயாடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பயன்பாடு குடல் நுண்ணுயிரிகளை பாதிப்பதால், அதுவும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக இருக்கிலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாடு 2000-ம் ஆண்டிலிருந்து சுமார் 45 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, குறிப்பாக சிறார்கள் மத்தியில் அதிகரித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. இது, நுரையீரல் புற்றுநோய், நிணநீர் மண்டல புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக செல் புற்றுநோய், எலும்பு மஜ்ஜை பிளாஸ்மா செல்களில் உருவாகும் ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது என, 2019-ல் வெளியான அறிக்கையில் இத்தாலியை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு தெரிவித்திருந்தது.
தலைமுறைகளுக்கிடையில் அதிகரிக்கும் சராசரி உயரம் கூட புற்றுநோய் உருவாவதற்கு பங்களிக்கலாம் என, ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பெருங்குடல் சிகிச்சை நிபுணரும், பிஎம்ஜே ஆன்காலஜி அறிக்கையின் இணை ஆசிரியருமான பேராசிரியர் மால்கம் டன்லப் குறிப்பிடுகிறார்.
“மனித இனத்துக்கு பொதுவாக உலகம் முழுவதும் உயரம் கூடிக்கொண்டிருக்கிறது. உயரத்துக்கும் பெருங்குடல் புற்றுநோய் உட்பட பல புற்றுநோய்களுக்கும் வலுவான நேரடித் தொடர்பு உள்ளது.” என்கிறார் அவர். அதிக செல் உற்பத்தி, இயல்பாக உருவாகும் வளர்ச்சி ஹார்மோன் தாக்கம், அதிக பெருங்குடல் பரப்பு போன்றவற்றை அவர் புற்றுநோயுடன் தொடர்புப்படுத்துகிறார்.
புற்றுநோய் மரபியலில் உலகில் முன்னணி நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் டன்லப், ஒரெ ஒரு காரணமல்லாமல், பல்வேறு காரணிகள் ஒரே நேரத்தில் இணைவதுதான் இளம் வயதில் புற்றுநோய் ஏற்பட காரணம் என்றும் இருப்பினும் அவற்றை அடையாளம் காண்பது கடினம் என்றும் நம்புகிறார்.
“பெரும்பாலான அபாய காரணிகள் உரிய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை,” என குறிப்பிடுகிறார்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், ஒட்டுமொத்த அபாயம் குறைவு என்பதால் இளையவர்கள் அனைவரையும் புற்றுநோய் சோதனைக்கு உட்படுத்துவது பொருத்தமான பொருட்செலவாக இருக்காது என்றும் கூறுகிறார்.
என்ஐசி எனப்படும் அமெரிக்க தேசிய புற்றுநோய் மையத்தின் கூற்றுப்படி, 80 விழுக்காடு புற்றுநோய்கள் 55 வயதுக்கு மேற்பட்டோரிடம்தான் கண்டறியப்படுகிறது.
மருத்துவர்களுக்கு அழைப்பு
இருப்பினும் வளர்ந்து வரும் இந்த சூழ்நிலை, இளம் நோயாளிகளிடம் தோன்றும் அறிகுறிகள் கவனிக்காமல் விடப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இளம் வயதிலேயே புற்றுநோய் ஏற்படுவது குறித்த விழிப்புணர்வை பொது மருத்துவர்களிடையே ஏற்படுத்த சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) போன்ற முக்கிய அமைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.
“60 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் மலம் கழிப்பதில் சிரமம், சோர்வு, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகளை சொல்லும்போது , மருத்துவர்கள் அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு முழு உடல் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார்கள். இருப்பினும், 30களில் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளவர்களாக கருதப்படாதவர்களுக்கும் இந்த அறிகுறிகள் சாதாரண வலிகளாக கண்டுகொள்ளாமல் விடப்படலாம்.” என விளக்குகிறார் பிரேசிலின் புற்றுநோய் மருத்துவத்திற்கான சங்கத்தின் இயக்குநர் மருத்துவர் அலெக்ஸாண்ட்ரே ஜேகோம். தாமதமாக நோயை கண்டறிவது நோயாளி குணமடையும் வாய்ப்புகளை பாதிக்கும் என அவர் விளக்குகிறார்.
“இவர்கள், தங்கள் இளமை காலத்தின் உச்சத்தில் இருப்பவர்கள், தங்களுக்கான குடும்பம் ஒன்றைத் தொடங்குபவர்கள், சிறப்பாக வாழ்பவர்கள். புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிப்பது அவர்களையும் அவர்களது அன்புக்குரியவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது,” என்கிறார்.
ஆனால் நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், இளம் நோயாளிகள் பெரும்பாலும் தீவிர சிகிச்சைகளை சிறப்பாக தாங்கிக்கொள்வார்கள். இதனால் அவர்கள் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர் ஜாகோம் குறிப்பிடுகிறார்.
இளமையிலேயே வரும் புற்றுநோய்களின் நீண்ட கால பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கிறார் மருத்துவர் டன்லப்.
“இந்த புற்றுநோய்களால் பதிக்கப்படும் இளைஞர்கள் இந்த அபாயத்தை தங்களது வயதான காலத்துக்கும் அனுபவிக்கக் கூடும்”, என்று அவர் எச்சரிக்கிறார். “இது எதிர்காலத்தில் அதிகரிக்கப்போகும் புற்றுநோய் தாக்கத்தின் தொடக்கமா அல்லது ஒரு குறிப்பிட்ட வயதினருக்கு மட்டும் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா?”
வாழ்க்கையை மாற்றும் அனுபவம்
“கடினமான நாட்களையும், மகிழ்ச்சியான நாட்களையும் ஒரே விதமாக இருண்ட எண்ணங்கள் தோன்றியபோது, அவற்றை கடந்து செல்ல முயற்சி செய்கிறேன். நான் வலிமையாக உணர்ந்தபோது, இதுவும் கடந்து போகும் என்பதை அறிந்ததால் அந்த தருணங்களை நான் மிகவும் நேசித்தேன்”, என்று புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்ற லுயிசா கூறுகிறார்.
“ஒவ்வொரு நாளையும் பொறுமையாக அணுகுங்கள். உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்- சில நாட்களில் ஓய்வு எடுப்பதுதான் நீங்கள் செய்யக்கூடியதில் சிறந்தது, அவ்வாறு செய்வது தவறில்லை. புற்றுநோய் ஒருவரின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் நீங்கள் யார் என்பதை வரையறுக்க அதை நீங்கள் அனுமதிக்க வேண்டியது இல்லை. மிகவும் கடினமான நேரத்திலும் வாழ்க்கை, வளர்ச்சி மற்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது”, என்று அவர் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு