6
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் பேட்டி எடுத்தார்.
இதில் இடம்பெற்ற விவாதம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசு பொருளாகியுள்ளதுடன், பல்வேறுதரப்பட்ட சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊடகவியலாளர் மஹ்தி ஹஸன் கேட்ட கேள்விகளால் ரணில் விக்கிரமசிங்க சங்கடத்துக்கு உள்ளானதாக விமர்சிக்கப்படுகிறது.
குறிப்பாக, “ராஜபக்க்ஷவை எதிர்ப்பதாக வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், ரணில்- ராஜபக்க்ஷ என்று மக்கள் ஏன் சொல்கிறார்கள். நீங்கள் அவரைப் பாதுகாப்பதால் அப்படி ஒரு பெயர் வந்ததா?”
“உள்ளூராட்சித் தேர்தலை நடத்தப் பணம் இல்லை என்று காரணம் கூறினீர்கள். எனினும், எலிசபத் மகாராணியினதும் ஜப்பான் பிரதமரதும் மரண வீடுகளுக்குப் போவதற்கு எல்லாம் பணம் இருந்ததா?”
“16 வருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படுகொலைகளுக்கு ஏன் நீதி கிட்டவில்லை?” உள்ளிட்ட கேள்விகள் இதன்போது கேட்கப்பட்டன.
அத்துடன், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பற்றிய சதியின் பின்புலம், கோட்டாபய ராஜபக்க்ஷவுக்குத் தண்டனை வழங்காமல் விட்டது, யுத்தக் குற்றவாளி என்று அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் சேர்த்த சவேந்திரசில்வாவுக்குப் பதவி வழங்கியமை என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
“ஒரு கட்டத்தில் நீ பிறக்க முன்பே நான் அரசியலில் இருக்கிறேன்” என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார். அப்போதும் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன், “அதுதான் பிரச்சினையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சிலர் கூறக்கூடும்” என்றார்.
இந்த அல்ஜசீரா தொலைக்காட்சி பேட்டி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ரணில் அதிருப்தி
இந்நிலையில், அல்ஜசீராவின் பேட்டி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, தன்னிடம் கேள்வி எழுப்பிய நிபுணர்கள் குழுவின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மெஹ்டி ஹசனுடன் இணைந்து தன்னிடம் கேள்வி கேட்டவர்களில் இருவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாசற்குணநாதன் கலந்துகொள்வார் என எனக்கு தெரிவிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள ரணில், அவருடன் கொள்கைரீதியில் முரண்பாடுள்ள போதிலும் அவரை எனக்கு தெரியும் என்பதால் நான் சற்று ஆறுதலாக உணர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அவரை நீக்கிவிட்டு, வேறு இருவரை சேர்த்துள்ளனர் அவர்கள் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என எனக்கு பின்னர் தெரிவிக்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நான் வழங்கிய பதில்களின் முக்கிய விவரங்களை அவர்கள் ஒளிபரப்பவில்லை என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, நான் உள்ளுர் ஊடகங்களுடன் பேசும்போது, அது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். நல்லது மற்றும் மோசமானது என அனைத்தும் ஒளிபரப்பாகும்.
ஆனால், அல்ஜசீரா எனது இரண்டு மணிநேரப் பேட்டியில் ஒரு மணிநேரத்தை மாத்திரம் வெளியிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.