சென்னை: திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தனியார் தொழில் நிறுவனங்கள் விதிகளை மீறி கட்டுமானங்களை எழுப்பியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் 6 மாத காலத்துக்குள் சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக புழல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான மல்லிகா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ட விளாங்காடுபாக்கம் மற்றும் சென்றம்பாக்கம் ஊராட்சிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள், வேர்ஹவுஸ் குடோவுன்கள், வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன.
இதில் பெரும்பாலான நிறுவனங்ள் முறையான கட்டிட அனுமதியின்றி விதிகளுக்கு புறம்பான கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிறுவனங்களில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், அந்த 2 கிராம ஊராட்சிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் விதிகளை மீறி பல நிறுவனங்கள் கட்டுமானங்களை கட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதிகள், இப்பகுதிகளில் தனியார் தொழில் நிறுவனங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை 6 மாத காலத்துக்குள் இடித்து அப்புறப்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.