0
காலையில் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய நினைக்கிறீர்களா? பெரும்பாலும் அதற்காக ஒரே மாதிரியான சட்னி, சாம்பாரையே தயாரிப்பது வழக்கமாகிவிடுகிறதா? குறிப்பாக சட்னி என்றால் அதே சுவை மீண்டும் மீண்டும் வருவது சலிப்பை ஏற்படுத்தலாம்.
அப்படி நினைப்பவர்களுக்கு, இந்த பனிக்காலத்திற்கு மிகவும் இதமாகவும், காரசார சுவையுடனும் இருக்கும் பூண்டு வெங்காய சட்னி சிறந்த தேர்வாகும். வெறும் 10 நிமிடங்களில் சட்டென்று தயாரிக்கக்கூடிய இந்த சட்னி, செய்யவும் மிகவும் எளிதானது. இட்லி, தோசை மட்டுமல்லாமல், அனைத்து வகை டிபன்களுடனும் சேர்த்து சாப்பிடக்கூடிய அளவிற்கு இது சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* முழு பூண்டு – 2
* வரமிளகாய் – 6
* கறிவேப்பிலை – 1 கொத்து
* பெரிய வெங்காயம் – 1
* உப்பு – சுவைக்கேற்ப
* புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 ஸ்பூன்
* கடுகு – 1/2 ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை அதில் ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி கிளறி, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கினால், சுவையான மற்றும் காரசாரமான பூண்டு வெங்காய சட்னி தயார்.