பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று, குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியின் மேலே நாசாவின் செயற்கைக்கோளான லான்சாட் 8 பறந்தது. அப்போது அதில் திகைக்க வைக்கும் ஒரு காட்சி பதிவானது.
அங்கு 1.8 கி.மீ விட்டம், 6 மீட்டர் ஆழம் கொண்ட, கின்னம் போன்ற ஒரு பள்ளம் இருப்ப அந்த செயற்கைக்கோள் பதிவு செய்தது. கிட்டத்தட்ட துல்லியமான வட்ட வடிவில் இயற்கையான பள்ளம் உருவாகாது.
பின்னர் அது எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தபோது, சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு வந்து விழுந்த ஒரு விண்கல் ஏற்படுத்திய குழியே அந்தப் பள்ளம் என்பது தெரிய வந்தது.
இத்தகைய விண்கல் மோதல்கள் பூமியில் எவ்வளவு அதிகமாக நிகழ்கின்றன? அவற்றால் என்ன ஆபத்து? பூமியில் டைனோசர்களின் இருப்பை அழித்த அளவுக்குப் பேரழிவை ஏற்படுத்தவல்ல விண்கல் மோதல் மீண்டும் நிகழுமா?
ரஷ்யாவை நிலைகுலைய வைத்த விண்கல் வெடிப்பு
கடந்த 2013ஆம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் திடீரென வானத்தில் பிரகாசமான நெருப்புக் கோளம் தெரிந்தது.
அதை மக்கள் அனைவரும் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், பூமியின் வளிமண்டலத்திற்குள் பறந்து வந்த அந்த நெருப்புக் கோளம் சுமார் 30கி.மீ உயரத்தில் வெடித்தது.
அந்த வெடிப்பினால் காற்று விரிவடைந்து, அதிர்வலைகள் உருவாகிப் பரவின. சுமார் பல கிலோமீட்டர் பரப்பளவில் 8,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சிதறின, கட்டடங்கள் அதிர்ந்தன, கூரைகள் பிய்ந்து பறந்தன.
உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், 1,500 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இதன் பின்னணியை ஆராய்ந்தபோது, சுமார் 9,000 டன் எடைகொண்ட, 20 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்துள்ளது.
சுமார் 100கி.மீ சுற்றளவில் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சி தெளிவாகத் தென்பட்டுள்ளது. அதில் சிலர் சூரியனைவிட அதிக பிரகாசத்தில் அது தெரிந்ததாக தெரிவித்தார்கள். அதன் பாதைக்கு அருகில் இருந்த சிலர், அது கடந்து சென்றபோது வெப்பமாக உணர்ந்ததாகக் கூறினார்கள்.
அந்தப் பகுதியில் பிறகு தேடிப் பார்த்தபோது, கோழிகுண்டு அளவிலான, வெடிப்பில் சிதறிய அந்த விண்கல்லின் சிறுசிறு துண்டுகள் கிடைத்தன.
பட மூலாதாரம், UGC
வியாழன், செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையே சுற்றிக்கொண்டிருந்த ஒரு விண்கல்தான் பாதை மாறி பூமியை நோக்கி வந்தது என்றும், அதுவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
வியாழன் கோளின் ஈர்ப்புவிசையால் சிறிதளவு தள்ளப்பட்ட அந்தப் பெரிய விண்கல், பாதை விலகி பூமியை நோக்கிய திசையில் பயணிக்கத் தொடங்கியது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 30கி.மீ தொலைவில் இந்த விண்கல் வெடித்த நிகழ்வில், கிட்டத்தட்ட 400-500 கிலோ டன் டி.என்.டி வெடிபொருட்களுக்கு நிகரான ஆற்றல் இதிலிருந்து வெளிப்பட்டதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.
இதேபோல, 1908ஆம் ஆண்டில் சைபீரிய பகுதியில் உள்ள துங்குஸ்கா என்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்ததாகக் கருதப்படுகிறது.
துங்குஸ்காவில் மோதிய விண்கல் 65 மீட்டர் விட்டம் கொண்டது. செல்யாபின்ஸ்க் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்திய விண்கல் 20 மீட்டர் விட்டமுள்ளது.
இவை, நியுயார்க் நகரின் 443 மீட்டர் உயரமுள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், பாரிஸில் உள்ள 324 மீட்டர் உயரமான ஐபில் டவர் ஆகியவற்றைவிடச் சிறிதாகத் தெரியலாம்.
ஆனால், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கு ஏற்ப, மிக அதிக அளவிலான ஆற்றலை வெளிப்படுத்தி, சேதங்களை விளைவித்தன.
டைனோசர்களின் பேரழிவுக்கு வித்திட்ட சம்பவம்
பூமியில் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது இவ்வாறான விண்கற்கள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் ஒரு சம்பவம் நடந்தது.
அப்போது, மெக்சிகோவின் கிழக்கு கடல் பகுதியில் 10-15கி.மீ விட்டம் கொண்ட ஒரு மிகப் பிரமாண்டமான விண்கல் பூமியில் மோதியது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பிரளயத்தில் அதுவரை கோலோச்சி வந்த டைனோசர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
அவை மட்டுமல்ல, 25 கிலோவுக்கும் மேல் எடை இருக்கக்கூடிய நீர், நிலவாழ் பெரிய உயிரினங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. ஆனால், விண்கல் மோதலால் இதுபோன்ற பிரளயங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் கூறிய குஜராத் பள்ளத்தைப் போல பூமியில் சுமார் 200 இடங்களில் விண்கல் விழுந்தமைக்கான வடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றை ஆராய்ந்து, பூமியில் விண்கல் விழுவதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
பல தருணங்களில் வானத்தில் எரிகல் நிகழ்வுகளைக் கண்டிருப்போம். அதாவது வானில் நிறைய ஒளிக்கீற்றுகள் தென்படுவதைப் பார்த்திருப்போம். அவை எரிகல் பூமியில் விழும் நிகழ்வின் விளைவு.
சின்னச் சின்ன அளவிலான எரிகற்கள் பூமியில் வந்து விழுவதையே எரிகல் நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்கள். இப்படியான எரிகற்கள் ஒரு நாளைக்குப் பல வந்து விழும். ஆனால், புவி வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மீது உராயும்போது அவை எரிந்துவிடுகின்றன.
எடுத்துக்காட்டாக, உங்கள் இரு கைகளையும் சேர்த்து நன்கு தேய்த்துப் பாருங்கள். கை சூடாவதை உணர்வீர்கள் அதுதான் உராய்வு. அதேபோல எரிகற்கள் காற்றுடன் உராய்கின்றன. அப்போது ஏற்படும் வெப்பம் அவற்றை எரித்து விடுகின்றன. அப்படி எரிவதுதான் ஒளிக்கீற்றாக வானில் தென்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
பூமியில் தினசரி விழும் விண்கற்கள்
ஒரு நாளைக்கு 44,000 கிலோ விண்கற்கள் பூமியில் வந்து விழுகின்றன. சின்னச் சின்ன மணல், கல் போன்ற எரிகற்கள் பூமியில் தினசரி வந்து விழுகின்றன.
ஆனால், 50 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு விண்கல் பூமியை நோக்கி வந்தாலும்கூட, அது வளிமண்டலத்திலேயே எரிந்து சாம்பலாகிவிடும். அதுதான் ரஷ்யாவிலும் நடந்தது.
ஒருவேளை சுமார் 75மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல் பூமியில் மோதினால், அதனால் ஒரு சிறிய நகரை தரைமட்டமாக்க முடியும். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழக்கூடும்.
அதேநேரம், நூறு முதல் ஆயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்தவல்ல சுமார் 160 மீட்டருக்கும் அதிகமான விட்டத்தைக் கொண்ட ஒரு விண்கல் பூமியில் மோதினால், சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களே தரைமட்டமாகிவிடும்.
இருப்பினும் கணிப்புகளின்படி, இத்தகைய சம்பவங்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடக்க வாய்ப்புள்ளது.
பூமியில் விழுந்தால் ஒரு மாவட்டத்தையே அழித்துவிடும் அளவிலான, சுமார் ஆயிரம் முதல் பத்தாயிரம் மெகாடன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டுமெனில், ஒரு விண்கல் 350 மீட்டருக்கும் மேல் பெரிதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு 15,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் என்று கணிப்புகள் கூறுகின்றன.
பூமியின் அரணாகச் செயல்படும் நிலா
இதுபோன்ற விஷயங்களில் பூமியின் பாதுகாப்பு அரணாக நிலா செயல்படுகிறது. பூமிக்கு வரும் அடிகளைத் தாங்கிக் கொள்வதன் மூலம் பெரும் பகுதி விண்கல் மோதல்கள் நிகழாமல் அது தடுக்கிறது.
பூமியின் பக்கமாக வரக்கூடிய விண்கற்களைத் தன் பக்கம் ஈர்த்து, அந்த அடிகளைத் தானே தாங்கிக் கொள்கிறது. அதனால்தான் நிலவில் விண்கல் மோதல்களால் உருவான கின்னக் குழிகள் இருக்கின்றன.
புவியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலாவின் மறுபக்கத்தில் பார்த்தால் பிரமாண்டமான கின்னக் குழிகள் இருக்கின்றன. அவையெல்லாம் பூமியில் மோதிவிடாமல் நிலா பாதுகாத்து நிற்கிறது.
இந்தக் காரணத்தால், டைனோசர்களையே அழித்த 10-15கி.மீ விட்டம் கொண்ட பிரமாண்ட விண்கல் பூமியின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் சில கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்.
ஆனாலும், அப்படிப்பட்ட ஓர் ஆபத்து வர வாய்ப்புள்ளதா என்பதை முன்னமே தெரிந்துகொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் விஞ்ஞானிகள் உள்ளனர்.
அதற்காக, பூமிக்கு அருகிலுள்ள விண்கற்கள் அனைத்தும், எந்தத் திசையில் நகர்கின்றன, பூமியில் மோத வாய்ப்புள்ளதா என்பனவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு