ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், விசாரணை சரியான திசையில் இருப்பதாகக் கூறினார். மேலும், மீதமுள்ள தொகை மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறினார்.
கைதானவர்களில், கோபால் பிரசாத் என்பவர் காவலாளியாக இருக்கிறார். சேவியர் என்பவர் பண மேலாண்மை சேவை (CMS) நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். அன்னப்பா நாயக், பெங்களூருவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கைத் தீர்க்க கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மற்றும் கோவா உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 200 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை காவல்துறை நியமித்திருந்தது.
பணத்தைத் திருடிய பிறகு திருடர்கள் வாகனங்களை மாற்றியிருக்கிறார்கள். போலியான நம்பர் பிளேட்களைப் பயன்படுத்திய அவர்கள், சிசிடிவி கேமராக்கள் குறைவாக உள்ள, அல்லது இல்லாத இடங்களில் நிறுத்தி பணப் பெட்டிகளை மாற்றியிருக்கிறார்கள்.
இந்நிகழ்வு புதன்கிழமை மதியம் 12:48 மணியளவில் நடந்திருக்கிறது. ஆனால், போலீஸ் கமிஷனரைப் பொறுத்தவரை சிஎம்எஸ் என்ற நிறுவனம் இதுபற்றிய தகவலை மதியம் 1:20 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவித்திருக்கிறது.
வேன் ஓட்டுநரிடம் துப்பாக்கியைக் காட்டி பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்ததாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
பெங்களூரு நகரின் மத்தியில் பட்டப்பகலில் இந்நிகழ்வு நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. அதன்பிறகு கொள்ளையர்களைப் பிடிப்பதகான திட்டத்தை காவல்துறை வகுத்தது.
இதுபற்றி பிபிசியிடம் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், புதன்கிழமை மதியம் ஒரு எஸ்யூவி காரில் வந்த ஆறு பேர் பணத்தை எடுத்துச்செல்லும் வாகனத்தை நிறுத்தியதாகக் கூறினார்.
அப்போது அந்த வாகனம் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் சென்றுகொண்டிருந்தது.
அந்த வேனில் ஓட்டுநர், பணப் பாதுகாவலர் மற்றும் ஆயுதம் ஏந்திய இரு காவலர்கள் இருந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி அதிகாரிகளாக நடித்த திருடர்கள்
அந்தத் திருடர்கள் தாங்கள் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். வேனில் அவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் செல்வதற்கான சரியான ஆவணங்களை அவர்கள் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வதற்காக வாகனத்தை நிறுத்தியதாக வேனில் இருந்தவர்களிடம் கொள்ளையர்கள் சொன்னதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
முதல்கட்ட தகவலின்படி, அந்த கும்பல் பணப் பாதுகாவலரையும் காவலர்களையும் தங்களின் ஆயுதங்களை விட்டுவிட்டு எஸ்யூவியில் ஏறச் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் வேனை பணத்தோடு ஓட்டிச்செல்லுமாறு அதன் ஓட்டுநரிடம் கூறியிருக்கிறார்கள்.
காவல்துறை கூற்றுப்படி அந்த கொள்ளையர்கள் லால்பாக்-குக்கு அருகில் உள்ள அஷோக் பில்லர் ரோட்டில் அந்த வேனை நிறுத்தியிருக்கிறார்கள்.
அந்த கும்பல் தங்கள் ஆள் ஒருவரை, பணத்தை எடுத்துச் சென்ற வேனோடு அனுப்பியிருக்கிறார்கள். சில தூரம் சென்ற எஸ்யூவி, நிம்ஹான்ஸ் (NIMHANS) பேருந்து நிறுத்தத்தில் அந்த மூன்று பணியாளர்களையும் இறக்கிவிட்டிருக்கிறது. பின்னர் அந்த கும்பல், குறைவான சிசிடிவி கேமராக்களே இருந்த பெங்களூரு டெய்ரி சர்க்கிள் மேம்பாலத்திற்கு எஸ்யூவியை ஓட்டிச் சென்றிருக்கிறது.
பட மூலாதாரம், Imran Qureshi
படக்குறிப்பு, பத்திரிகையாளர்களிடம் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்துப் பேசிய ஆணையர் சீமந்த் சிங் (நடுவே இருப்பவர்)
மாறிய வண்டிகள், மாற்றப்பட்ட பணம்
சிஎம்எஸ் நிறுவனம் இந்த சம்பவம் நடந்த இடமாக டிஜே ஹல்லியைக் குறிப்பிட்டதாக சீமந்த் குமார் சிங் தெரிவித்தார். அது நகரத்தின் கிழக்குப் பக்கம் இருக்கும் இடம். ஆனால், சம்பவம் நடந்த அஷோக் பில்லரோ தெற்குப் பகுதியில் உள்ளது.
இதுபற்றிப் பேசிய கமிஷனர், “இந்த விவகாரத்தில் ஏஜென்சியின் பங்கு என்ன என்பதும் விசாரிக்கப்படுகிறது. பணப் பரிமாற்றத்தின் போது பல ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளன. அவர்களிடம் தவறுகள் ஏதுமில்லை என்று சொல்லிவிட முடியாது” என்று கூறினார்.
ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டிய சீமந்த் சிங், பண வேன்களில் பணப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு தனித்தனிப் பெட்டிகள் இருக்க வேண்டும் என்றார். பயணிகள் பெட்டியில் இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் ஓட்டுநர் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இரண்டு பெட்டிகளிலுமே சிசிடிவி கேமராக்கள் இருக்கவேண்டும் என்று கூறினார்.
பணம் எடுத்துச்செல்லும் ஒவ்வொரு வேனிலும் ஜிபிஎஸ், நேரடி கண்காணிப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் வழித்தடத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்தின் குறிப்பேடு ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வேன்கள் ஒரே பாதையிலோ அல்லது ஒரே நேரத்திலோ மீண்டும் மீண்டும் பயணிக்கக் கூடாது. அவற்றின் இயக்கம் பற்றிக் கணித்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விதிமுறை.
சிஎம்எஸ் நிறுவனத்திடமிருந்து இதுபற்றிய கருத்து பெறுவதற்காக பிபிசி முயற்சி செய்தது. அவர்களிடம் கருத்து பெற்ற பிறகு இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.
தன் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தப்பட எஸ்யூவி போலியான நம்பர் பிளேட்டையும் இந்திய அரசு ஸ்டிக்கரையும் பயன்படுத்தியிருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்த நிறுவனத்துக்கு இந்தக் கொள்ளையுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் காவல்துறை விசாரிப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தக் கொள்ளையில் பயன்படுத்திய எஸ்யூவி காரை காவல்துறை மீட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆனால் கொள்ளையர்கள் தப்பிக்கப் பயன்படுத்திய வாகனம் எது என்று தெளிவாகத் தெரியவில்லை என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா தெரிவித்தார்.
”வாகனங்களை மாற்றி பண பரிமாற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சமீபகாலமாக கர்நாடகாவில் நடந்த மற்ற வங்கிக் கொள்ளை சம்பவங்களை போலீசார் தீர்த்ததுபோல், இந்த வழக்கையும் விரைவில் தீர்த்து வைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த மே மாதம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து 53.26 கோடி ரூபாய் மதிப்புள்ள 59 கிலோ தங்கம் திருடப்பட்டது. இதுவரை 39 கிலோ தங்கமும் கொஞ்சம் பணத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்தத் திருட்டு தொடர்பாக இரண்டு முன்னாள் ஊழியர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.