பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா.
அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நம்பிக்கையோடு வருகிறது இந்திய அணி.
இந்த 5 முக்கிய விஷயங்கள் நடந்தால் இந்திய அணி சாம்பியன் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு – தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன். அவை என்ன?
1) இந்தியா சேஸ் செய்வது சாதகமாக அமையலாம்
இந்திய அணி டாஸ் வென்றால், பந்துவீச்சை தேர்வு செய்வது சாதகமாக அமையலாம் என்று சொல்கிறார் ஆர்த்தி சங்கரன்.
“வழக்கமாக இதுபோன்ற பெரிய போட்டிகளில் எந்த அணியுமே முதலில் பேட்டிங்கைத்தான் தேர்வு செய்வார்கள். பெரிய ரன்கள் அடித்தால், அதுவே எதிரணிக்கு நெருக்கடி ஏற்படுத்திவிடும். அது வழக்கம்தான். ஆனால், இந்தப் போட்டியில் இந்தியா இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று தோன்றுகிறது” என்றார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்களை சேஸ் செய்தது இந்தியா
தான் அப்படிச் சொன்னதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறினார் அவர். “பனி (Dew) இந்தப் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பௌலர்களுக்குப் பந்தைப் பிடிப்பது எளிதாக இருக்காது. அரையிறுதியின் கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலிய பௌலர்கள் நிறைய வைட்கள் வீசியதைப் பார்த்தோம். அதுமட்டுமல்லாமல் பந்தும் பேட்டுக்கு நன்கு வரும். அதனால் இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் நல்லது.
அதுமட்டுமல்லாமல் மழை பெய்யக்கூடும் என்பதால் ஆடுகளம் மூடி வைக்கப்படலாம். அப்படி மூடிவைக்கப்பட்ட ஆடுகளத்தில் பந்து சற்று நின்று வரும். அப்படியிருக்கும்போது முதலில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. அதனால் இரண்டாவது பேட்டிங் செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்துதான் வரலாற்று வெற்றி பெற்றது. 339 ரன்களை சேஸ் செய்து, பெண்கள் ஒருநாள் போட்டிகளில் மிகப் பெரிய சேஸையும் பதிவு செய்தது இந்தியா.
2) ரேணுகா தாக்கூருக்குப் பதில் ஸ்னே ராணா
அரையிறுதியில் ஆடிய அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார் பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன்.
“ஸ்னே ராணாவால் இறுதிப் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். அரையிறுதியின் முக்கிய கட்டத்தில் அவர் இல்லாததை உணர முடிந்தது. அதேசமயம் ரேணுகா இந்தியாவின் சிக்கனமான பௌலராக இருக்கிறார். இருந்தாலும், அவரை முதல் ஸ்பெல்லுக்குப் பின் பெரிதாகப் பயன்படுத்த முடிவதில்லை. கடைசி கட்டங்களில் ஒரு பௌலர் குறைவாக இருப்பதுபோலத்தான். அதனால் எந்த கட்டத்திலும் பந்துவீசக்கூடிய ஸ்னே ராணாவை ஆடவைப்பது மிடில் ஓவர்களுக்கும், டெத் ஓவர்களுக்கும் உதவும்” என்று கூறுகிறார் ஆர்த்தி.
இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் ஆடியிருக்கும் ரேணுகா 4.13 என்ற எகானமியில் பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். 6 போட்டிகளில் ஆடியிருக்கும் ஸ்னே ராணா, 5.67 என்ற எகானமியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஸ்னே ராணா ஆடவில்லை
3) மரிசான் காப் வீசும் 10 ஓவர்களை சரியாகக் கையாளவேண்டும்
தென்னாப்பிரிக்காவின் முன்னணி பௌலரான மரிசான் காப்பை இந்திய பேட்டர்கள் நன்றாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி.
“காப் மிகச் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் அவருடைய 10 ஓவர்களை இந்தியா சிறப்பாகக் கையாளவேண்டும். ஒரு நல்ல விஷயம், இங்கிலாந்து பேட்டர்களுக்கு இருந்ததுபோல் இந்திய பேட்டர்களுக்கு இன்ஸ்விங்கை சமாளிக்கும் பிரச்னை இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் காப். பவர்பிளேவில் பேட்டர்களுக்கு சவாலளிக்கூடிய அவர், இதுவரை 3.83 என்ற எகானமியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
இந்தியாவுக்கு பவர்பிளேவில் அவர் கொஞ்சம் பிரச்னை தரலாம் என்று சொல்லும் ஆர்த்தி, காப்போடு டெல்லி அணியில் ஷஃபாலி ஆடியது அவருக்குக் கொஞ்சம் சாதகமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 3 ஆண்டுகளாக ஷஃபாலி வர்மா, மரிசான் காப் இருவரும் வுமன்ஸ் பிரிமீயர் லீக் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் மரிசான் காப்
அதேசமயம் ஷஃபாலி வர்மா அவருடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை விளையாடவும் அணி நிர்வாகம் அனுமதிக்கவேண்டும் என்று கூறுகிறார் ஆர்த்தி.
காப் தவிர்த்து, இடது கை ஸ்பின்னரான மலாபா இந்தியாவுக்கு சவாலாக இருக்கலாம் என்று கணிக்கிறார் ஆர்த்தி. ஆனால், அவர் பந்துவீச்சில் அதிரடி அடித்து ஆடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
4) மூன்று முக்கிய விக்கெட்டுகளை சீக்கிரம் கைப்பற்றவேண்டும்
தென்னாப்பிரிக்க பேட்டர்கள் லாரா வோல்ஃபார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் காப் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையும் சீக்கிரம் வெளியேற்ற வேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன்.
“தென்னாப்பிரிக்க பேட்டர்களைப் பொறுத்தவரை ஓப்பனர்கள் இருவருமே பெரிய சவாலாக அமைவார்கள். அவர்கள் போக காப்புடைய அனுபவமும் சிக்கல் கொடுக்கும். இவர்கள் மூவரையும் சீக்கிரம் பெவிலியனுக்கு அனுப்பினால், தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் முதுகெலும்பை உடைக்கலாம். அவர்கள் மூவருமே இல்லாதபோது மற்றவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்.” என்று கூறினார்.
இந்தத் தொடரில் 470 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் வோல்ஃபார்ட்.
”இவ்விரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் நடீன் டி கிளார்க் தான் 54 பந்துகளில் 84 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற வைத்தார். அப்போது பெரும்பகுதி அவரோடு வோல்ஃபார்ட் விளையாடியிருந்தார். அந்த 3 பேரை (வோல்ஃபார்ட், பிரிட்ஸ், காப்) அப்படி நீண்ட நேரம் ஆடவிடாமல் செய்தால், பின்னால் வருபவர்கள் தாக்கம் ஏற்படுத்த முடியாமல் செய்ய முடியும்” என்கிறார் ஆர்த்தி.
5) ஹர்மன், ஸ்மிரிதி இருவரின் நிதானமும் முக்கியம்
இந்தியாவின் இரு தூண்களான ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா இருவரும் இறுதிப் போட்டியில் நிதானமாக இருக்கவேண்டும் என்கிறார் ஆர்த்தி.
“இந்தியாவின் இந்த இரண்டு ஸ்டார்களும் நெருக்கடிகளை தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு, மற்றவர்கள் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வழி வகுக்க வேண்டும்” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவின் கேப்டனும், துணைக் கேப்டனும் நெருக்கடியான போட்டியை நிதானமாகக் கையாளவேண்டும் என்கிறார் ஆர்த்தி சங்கரன்
மேலும், “அவர்கள் இருவரும் இப்போது பல ஃபைனல்கள் விளையாடி விட்டார்கள். நிறைய சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறார்கள். அதனால் அந்த நெருக்கடிகளையெல்லாம் அவர்கள் தோள்களில் தாங்கி அதை சமாளிக்கவேண்டும். மற்றவர்களுமே சிறந்த செயல்பாட்டைக் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த இரு சீனியர்களின் நிதானம் முக்கியம்” என்றார் ஆர்த்தி.
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் இருக்கும் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்குத் தொடங்கும்.
இந்த இரு அணிகளுமே இதுவரை உலகக் கோப்பை எதுவும் வென்றதில்லை.