பட மூலாதாரம், Getty Images
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்ட வெற்றி பெற்றது.
முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர்.
100 ரன்களை கடந்த இந்தியா:
பட மூலாதாரம், Getty Images
தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது.
அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர்.
அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி.
அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார்.
ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது.
இடையில் நிறுத்தப்பட்ட போட்டி:
பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார்.
35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி.
இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர்.
இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
200 ரன்கள்
பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
பரபரப்பான இறுதிகட்டம்
பட மூலாதாரம், Getty Images
பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.
இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார்.
பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது.
கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா.
அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது.
ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார்.
2வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. 12 ஓவரில் 3 விக்கெட்டுகளை மலமலவென இழந்தது.
50 ஓவர்களில் 278 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அதன்பிறகு 17.3வது ஒவரில் சித்ரா அமின் சிக்ஸர் அடித்தார். 12 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அடித்த முதல் சிக்ஸர் இது என கிரிக்பஸ் குறிப்பிட்டுள்ளது.
இது பாகிஸ்தான் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், அதன்பின் அதிக ரன்கள் சேர்க்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான்.
2 விக்கெட்டுகளை இந்திய வீராங்கனை கிராந்தி கைப்பற்றினார்.
அதன்பிறகு சித்ரா, நடாலியா பாட்னர்ஷிப் நிதானமாக விளையாடி வந்தனர்.
அதற்குள் 27.1 ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் விழுந்தது. 33 ரன்கள் எடுத்திருந்த நடாலியா, கிராந்தி வீசிய பந்தில் அவுட்டானார்.
30 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.
அதே சமயம் இந்திய அணி 22 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்திருந்தது.
இதற்கிடையில் மீண்டும் 30.5வது ஓவரில் மற்றொரு விக்கெட் பறிபோனது. தீப்தி சர்மா வீசிய பந்தில் ஃபாத்திமா சனா அவுட்டானார்.
சித்ரா அமின் 84 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அணிக்காக போராடி பவுண்டரிகளை விளாசினார்.
இதன் பின்னர் ஆட்டம் படிப்படியாக இந்திய அணி பக்கம் திரும்பியது. 43 ஓவர்களிலேயே 159 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது.
ப்ளேயிங் XI
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங்
பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால்
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு