படக்குறிப்பு, இந்தப் புகைப்படத்தின் மூலையில் அவரது கை இருப்பது போல அவரது காதலர் இருப்பதற்கான அறிகுறிகளும் தெரியலாம். ஆனால் தவானா ஒருபோதும் தனது காதலரின் முகத்தைச் சமூக ஊடகங்களில் பதிவிடுவதில்லை.கட்டுரை தகவல்
தவானா முஸ்வபூரியை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 33,000க்கும் மேற்பட்டவர்கள் அவரது வாழ்க்கை பற்றித் தங்களுக்கு அனைத்தும் தெரியும் என நினைக்கலாம். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தவானாவின் காதலர் எப்படி இருப்பார் என்பது தெரியாது.
அவருக்கு ஒரு காதலர் இருப்பதற்கான நுட்பமான அறிகுறிகள் இருக்கலாம், உதாரணமாக ஒரு தலையின் பின்புறம் அல்லது இரவு உணவின்போது இரண்டு ஒயின் கிளாஸ்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவது போன்ற அறிகுறிகளை அவரது பதிவுகளில் காணலாம். ஆனால் 24 வயதான அவர், தனது காதலரின் முகத்தைப் பதிவிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறுகிறார்.
“நான் ஒரு பெண்ணின் இயல்புகளுடனேயே இருக்க விரும்புகிறேன். ஒரு பெண்ணாக, ‘நான் என் விஷயங்களைச் சரியாகச் செய்து முடித்துள்ளேன் என்ற வலிமையான தோற்றத்தை பிறருக்குத் தர வேண்டும்,” என்று தவானா கூறுகிறார்.
இந்த இன்ஃப்ளூயன்சர் தனது ‘பிராண்டை’ (தனித்தன்மையை) ஒரு காதலனை தன்னுடன் சேர்த்துக் காட்டாமல் கட்டமைத்துள்ளார்.
“என் பதிவுகளில் எந்தவொரு பகுதியும் ஒரு ஆணின் உதவியால் உருவாக்கப்பட்டது என்பது போலத் தெரிவதை நான் விரும்பவில்லை. ‘இதை நானே செய்தேன்’ என்று சொல்வது எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது” என்கிறார் அவர்.
அவரது நிலைப்பாடு இப்போதைக்கு மாறப் போவதில்லை. அவரும் அவரது காதலரும் அவர்களது உறவின் அடுத்த கட்டத்திற்குச் சென்றாலும்கூட, “ஒரு மோதிரம்கூட(திருமணம்) எனது உறவை சமூக ஊடகத்தில் பதிவிடுவதற்குப் போதுமானது இல்லை,” என்று அவர் கூறுகிறார்.
ஆண்களுடனான உறவு குறித்த மறுமதிப்பீடு
தவானா போலவே, பலர் தங்கள் உறவை ஆன்லைனில் வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்துச் சமூக ஊடகப் பயனர்கள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதன் விளைவாக, கடந்த மாதம், பிரிட்டிஷ் வோக் (British Vogue) பத்திரிகை ‘இப்போது ஒரு காதலனை வைத்திருப்பது சங்கடமானதா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதே கேள்வியைத் தூண்டியது.
வைரலான இந்தக் கட்டுரையில், எழுத்தாளர் சாண்டே ஜோசப், எதிர்பாலின ஈர்பாளர்களாக இருக்கும் பெண்கள் தங்கள் உறவுகளை ஆன்லைனில் முன்வைக்கும் விதத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். பெண்கள் “காதலன் மீது பித்துப் பிடித்து அலைவது போல” தோற்றமளிக்காமல், ஓர் இணையரை கொண்டிருப்பதன் “சமூகப் பலன்களை” அறுவடை செய்ய விரும்புகிறார்கள், என்று அவர் எழுதுகிறார்.
உங்கள் காதலரைப் பற்றி அடிக்கடி பதிவிடுவது “கிரிஞ்சானது” (cringe) மற்றும் “கலாசார ரீதியாகத் தோல்விகரமானது” போலத் தோன்றலாம் என்று ஜோசப் எழுதுகிறார்.
ஒரு காதலன் இருப்பது இப்போதெல்லாம் “ஒரு சாதனையாகக் கருதப்படுவதில்லை” என்றும் ஒரு காலத்தில் இருந்ததைப் போல் ஒருவரை அதிக பெண்மை உள்ளவராகவோ அல்லது குறைவாகப் பெண்மை உள்ளவராகவோ கருதுவதற்கான காரணமாக அது இருப்பதில்லை எனவும் அவர் ஆழமான ஒரு கருத்தை தெரிவித்தார்.
“நாம் வாழும் ஆணாதிக்கச் சமுதாயமும் அது பெண்களை ஒடுக்குவதும்தான்” பெண்கள் தங்கள் காதலர்கள் குறித்துப் பதிவிடத் தயங்குவதற்குக் காரணம் என்று அவர் நம்புகிறார்.
“நிறைய பெண்கள், வருங்காலத்தில் கணவராகப் போகும் ஒருவர் இருப்பது அருமை, ஒரு கணவர் இருப்பது அருமை என்று கூறிக் கொண்டிருந்தார்கள்,” என்று ஜோசப் புதன்கிழமை பிபிசி ரேடியோ 4இன் வுமன்ஸ் ஹவர் நிகழ்ச்சியில் கூறினார்.
“ஆனால் அது உண்மையில் அருமையானது அல்ல. இந்த அரசியல் சூழலில் ஆண்களுடனான நமது உறவை நாம் மறுமதிப்பீடு செய்ய வேண்டும்” என்றார் அவர்.
பட மூலாதாரம், Stephanie Yeboah
‘1,000 பேர் என்னைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டனர்’
தெற்கு லண்டனை சேர்ந்த சமூக ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குபவரும் எழுத்தாளருமான ஸ்டெஃபனி யெபோவா, தான் இன்ஸ்டாகிராமில் தனது காதலனை பதிவிட்டதற்கு வருந்துவதாக பிரிட்டிஷ் வோக்கிடம் கூறினார்.
அவர் பிபிசியிடம் பேசுகையில், ஒரு காதலன் கிடைத்த பிறகு, அவரது உள்ளடக்கத்துடன் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியவில்லை என்று கூறி தன்னைப் பின்தொடர்வதைத் தவிர்த்துவிட்டதாக “ஏராளமான தனிப்பட்ட குறுஞ்செய்திகள்” வந்ததாகக் கூறுகிறார்.
“அன்று சுமார் 1,000 பேர் என்னைப் பின்தொடர்வதைத் தவிர்த்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்,” என்று யெபோவா நினைவு கூர்ந்தார்.
ஆனால் காதலன் தொடர்பான உள்ளடக்கம் சற்று அளவுக்கு அதிகமாக இருப்பதாக மக்கள் ஏன் கருதுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதாக அவர் கூறுகிறார்.
“உறவு தொடர்பான பல உள்ளடக்கங்கள் அபத்தமானவை. அதைப் பார்க்கும்போது மக்கள் இப்போது கிரிஞ்சாக உணர்கிறார்கள் என நினைக்கிறேன்” என்கிறார் யெபோவா.
சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு, ஒரு புதிய இணையரைப் பதிவிடாமல் இருப்பது நிலைத்தன்மை பற்றிய கேள்வியாக இருக்கலாம் என்று லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இன்ஃப்ளூயன்சர் மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங் துறை இணைப் பேராசிரியரான கில்லியன் ப்ரூக்ஸ் கூறுகிறார்.
பட மூலாதாரம், Dr Gillian Brooks
படக்குறிப்பு, இன்ஃப்ளூயன்சர்கள் தங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு “தனித்துவமான அழகியலை” விற்கிறார்கள் என்று ப்ரூக்ஸ் கூறுகிறார்.
“அவர்கள் ஒரு தனித்துவமான அழகியலை, ஒரு தனித்துவமான ரசனையை விற்கிறார்கள்,” என்று ப்ரூக்ஸ் விளக்குகிறார்.
“அவர்கள் மிகவும் அர்ப்பணிப்புள்ள மற்றும் தனித்துவமான பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளனர். எனவே அவர்கள் தங்கள் பிராண்டில் இருந்து விலகிச் சென்றால், அவர்கள் தங்கள் பார்வையாளர்களைக் குழப்புகிறார்கள், அதனால் மக்கள் அவர்களைப் பின்தொடர்வதை நிறுத்திவிடுகிறார்கள்.”
‘சார்ந்திருப்பவர் போலத் தெரிய நான் விரும்பவில்லை’
ஆனால் தங்கள் காதலர்களைப் பதிவிட விரும்பாதவர்கள் இன்ஃப்ளூயன்சர்கள் மட்டுமல்ல.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றபோதிலும், தனது வருங்கால கணவர் யார் என்பதை சமூக ஊடகங்களில் காட்ட விரும்பவில்லை என்று சொல்கிறார் 25 வயது மில்லி.
“நான் எனது இணையரைச் சார்ந்திருப்பவர் போலத் தோன்றவோ அல்லது எங்கள் உறவுதான் எனது முழு ஆளுமை போலத் தோன்றுவதையோ நான் விரும்பவில்லை,” என்று அவர் விளக்குகிறார்.
“சமூக ஊடகம் ஒரு நபரைப் பற்றி மிகக் குறுகிய பிம்பத்தை உருவாக்குகிறது. என்னையும் என் இணையரையும் பற்றிய படங்கள் மற்றும் பதிவுகள் மட்டுமே இருக்கும்போது, அது மிகைவிருப்பு போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சார்லட் தனது இணையருடன் இரண்டு ஆண்டுகளாக இருக்கிறார். 20 வயதான அவர், சில காரணங்களுக்காகத் தனது காதலனைப் பற்றி சமூக ஊடகங்களில் பதிவிடாமல் இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்.
அழகியல் மட்டத்தில், “இன்ஸ்டாகிராமில் பதிவிடத் தகுதியானவையாக” அவர்கள் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் அதற்கு அப்பால், ஒரு உறவு “நட்பைவிட அதிகத் தனிப்பட்டதாக” இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்.
“நான் [எனது உறவைப்] பதிவிட்டால், அது ‘என்னையும் என் உறவின் முழு விவரங்களையும் பாருங்கள்’ என்று சொல்வது போல இருக்கும் என்று நான் நினைக்கிறேன், இது துரதிர்ஷ்டவசமாக உண்மையில்லை,” என அவர் மேலும் கூறுகிறார்.
ஆதிரா (இது அவரது உண்மையான பெயரல்ல), தனிப்பட்ட தன்மையையே விரும்புகிறார். அவரது நண்பர்கள் பலரும் இதேபோல இருக்கிறார்கள் என்றும், தங்கள் இணையரைப் பதிவிடாமல் இருப்பதற்குக் காரணமாக “கண் திருஷ்டி”யை குறிப்பிடுகிறார்கள் என்றும் 21 வயதான ஆதிரா கூறுகிறார்.
“கண் திருஷ்டி” என்பது பொதுவாக பொறாமையால் தூண்டப்படும் ஒரு தீங்கிழைக்கும் பார்வையின் மூலம் பரவும் ஒரு சாபம் பற்றிய இயற்கைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கை.
“யாராவது தற்செயலாகத் தங்கள் பொறாமையை, அது அறியாமலும் உள்மனதிலேயே இருந்தாலும்கூட, என் உறவின் மீது கண் திருஷ்டி வைப்பதைத் தடுக்க நான் அவரைப் பற்றிய விவரங்களைப் பதிவிடுவதைத் தவிர்க்கிறேன்,” என்று ஆதிரா கூறுகிறார்.
பட மூலாதாரம், Dr Gillian Brooks
படக்குறிப்பு, சமூக ஊடகங்கள் “என்றென்றும் நிலைத்திருக்கும்” என்பதை மக்கள் உணர்கிறார்கள் என்று சீட்மேன் கூறுகிறார்.
பதிவிடுவதன் பின்னணியில் உள்ள பதற்றம்
மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்தின் சமூக உளவியலாளரான க்வெண்டோலின் சீட்மேன், மக்கள் ஆன்லைனில் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பற்றி, அதிலும் குறிப்பாக காதல் உறவுகளில் கவனம் செலுத்துகிறார்.
“உங்கள் வாழ்க்கையின் இவ்வளவு தனிப்பட்ட பகுதியை ஆன்லைனில் பகிர்வது சில நேரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்கு ஆன்லைன் நிரந்தரத்தன்மை பற்றிய பயம் காரணமாக இருக்கலாம்” என்று சீட்மேன் நம்புகிறார்.
“மக்கள் [இப்போது] ஆன்லைனில் அதிக விஷயங்களைப் பதிவிடுவதில்லை,” என்று சீட்மேன் குறிப்பிடுகிறார். “அதற்கு ஒரு காரணம், இந்த விஷயங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று மக்கள் உணர்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.
“உங்களால் அவற்றை உண்மையில் அகற்ற முடியாது, அதனால் நீங்கள் கொஞ்சம் அதிகக் கவனமாக இருக்க விரும்புவீர்கள்.”