• Mon. Nov 3rd, 2025

24×7 Live News

Apdin News

‘பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த திமுக அரசு’ – கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு இபிஎஸ் கண்டனம் | DMK government has buried women safety EPS condemns sexual assault of Coimbatore student

Byadmin

Nov 3, 2025


சென்னை: பெண்கள் பாதுகாப்பை திமுக அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,

பாதிப்புக்குள்ளான அம்மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது.

குறிப்பாக, எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அதிமுக அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.

திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் பெப்பர் ஸ்பிரே (Pepper Spray) அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர்.

திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர்

ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.



By admin