• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

பெண்கள் பெயரில் சொத்து பதிவுக்கு 1% கட்டண குறைப்பு: நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது | 1 percent fee reduction for property registration in women name

Byadmin

Mar 31, 2025


பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1 சதவீத பதிவு கட்டணம் குறைப்பு என்ற தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை செயலர் குமார் ஜெயந்த் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

‘சமூகத்தில் மட்டுமின்றி, அவரவர் குடும்பங்களிலும் பெண்களுக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவுகளில் 75 சதவீத பதிவுகள் இந்த அறிவிப்பால் பயன்பெற இயலும். இதன்மூலம் பெண்களின் சுயசார்பும், பொருளாதார சுதந்திரமும் மேலும் உயரும்’ என்று சட்டப்பேரவையில் கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

விதிமுறைகள், நிபந்தனைகள்: இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், கூட்டாக சேர்ந்து சொத்து வாங்கினாலும், பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் அனைவரும் பெண்களாக இருக்க வேண்டும். இந்த உத்தரவு வெளியாகும் முன்பு பத்திரப் பதிவு தொகை செலுத்தியவர்களுக்கு கட்டணம் திருப்பி தரப்படாது. சந்தை மதிப்பின்படி, சம்பந்தப்பட்ட சொத்து ரூ.10 லட்சத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சலுகையை பெறும் வகையில், ஒரே சொத்தை பல பாகங்களாக பிரித்து வாங்க முயற்சிக்க கூடாது. பத்திரப் பதிவுக்கு பிறகு ஆய்வு செய்யும்போது, மதிப்பு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருப்பது தெரியவந்தால், சலுகை வழங்கப்பட்ட தொகையையும் திருப்பி செலுத்த நேரிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



By admin