பட மூலாதாரம், Supplied
-
- எழுதியவர், அபூர்வா அமீன்
- பதவி, பிபிசி குஜராத்தி
-
குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.
சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன, அவரால் தூங்கவும் முடியவில்லை.
கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் ஒன்றிரண்டு அல்ல, மொத்தம் 250 பேன்கள் மற்றும் 85 ஈர்கள் இருந்துள்ளன.
வெளிச்சம் பட்டால் பேன்கள் இருக்கும் இடத்தில் இருந்து நகர்ந்துவிடும் என்பதாலும், மருத்துவ அறிவியலின் சில வரம்புகள் இருப்பதாலும், பேன்களை அகற்றும் சிகிச்சை இரண்டு மணிநேரம் நீடித்தது.
கண் இமைகளில் ஏற்படும் அரிய வகை பேன், phthiriasis palpebrarum என்று அறியப்படுகிறது.
பட மூலாதாரம், Supplied
விசித்திரமான மருத்துவ பிரச்னையின் பின்னணி
சவர்குண்ட்லாவில் உள்ள லாலுபாய் சேத் ஆரோக்ய மந்திர் மருத்துவமனையின் கண் மருத்துவர் மிருகங்க் படேலிடம் பிபிசி பேசியது.
கீதாபென் சிகிச்சைக்காக புறநோயாளி பிரிவுக்கு வந்தபோது, சுமார் மூன்று மாதங்களாக அவரது கண் இமைகளில் தொடர்ந்து அரிப்பு இருப்பது குறித்துக் கூறியதாகத் தெரிவித்தார்.
“பொடுகு இருப்பதே கண் இமைகளில் அரிப்பு ஏற்படுவதற்குப் பொதுவான காரணம். கண் இமைகளில் பேன் இருப்பது மிகவும் அரிதானது. கருவியின் மூலம் கண் இமைகளை கவனமாகப் பார்த்தபோது, அங்கு பேன் அசைவதைக் கண்டோம்” என்று மருத்துவர் மிருகங்க் படேல் கூறினார்.
“பேன்கள் மட்டுமல்ல, பேன்களின் முட்டையான ஈர்களும் பாதிக்கப்பட்டவரின் கண் இமைகளில் இருந்தன. கண்களில் ஈரும் பேனும் இருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தால் அவர் பீதியடைந்து விடுவார் என்பதால், முதலில் நாங்கள் அவருக்கு ஆலோசனை வழங்கினோம். அதுமட்டுமல்ல, பேன்கள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை நீக்குவதற்கு அதிக நேரம் ஆகலாம் என்றும் விளக்கிச் சொன்னோம்.”
மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள், இதற்கு முன்னதாக சூரத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் சென்று மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற்றிருந்தனர்.
நோயாளி கீதாபென்னின் மகன் அமித் மேத்தா பிபிசியிடம் , “அம்மாவின் கண்களில் அரிப்பு இருந்தது. இரவில் அவரால் தூங்க முடியவில்லை. சூரத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் காட்டினோம், எந்தப் பலனும் இல்லை. பின்னர் லாலுபாய் சேத் ஆரோக்ய மந்திர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அம்மாவை பரிசோதித்த மருத்துவர் மிருகாங்க் அம்மாவின் கண்ணில் பேன் இருப்பதாகவும், அதை வெளியே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்,” என்று கூறினார்.
“இந்த பேன் நம் உடலில் உள்ள ரத்தத்தை உரிஞ்சுகிறது. உடலின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கண் இமைகளின் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அங்கு அவற்றால் ரத்தத்தை சுலபமாகக் குடிக்க முடியும். இந்தப் பேன்கள் கண் இமைகளின் மேல் அமர்வதால் நோயாளிக்கு அரிப்பு ஏற்படும். இந்தப் பேன்களை எளிதில் அகற்ற முடியாது” என்று மருத்துவர் மிருகங்க் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Supplied
பேன் அகற்றும் செயல்முறை
இந்த வகையான பேன்கள் வெளிச்சம் ஏற்பட்டால் நகர்ந்துவிடுபவை. எனவே அவற்றை அகற்ற, McPherson எனப்படும் சிறப்புக் கருவியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பேனாகப் பிடித்து வெளியே இழுக்க வேண்டும்.
“இந்த சிகிச்சைக்கு சுமார் இரண்டு மணிநேரம் எடுத்தது” என்று மருத்துவர் மிருகங்க் படேல் விளக்கினார்.
“செயல்முறை முடிந்ததும், நோயாளியின் கண் அரிப்பு குறைந்துவிட்டது. இதுபோன்ற அரிதான பாதிப்புகள் இந்தியாவில் ஆங்காங்கே காணப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவர் என்னிடம் வந்தபோது, நான் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் இதுவொரு அரிய பிரச்னை.”
சிக்கலான நடைமுறையை மேற்கொண்டு மருத்துவர் மிருகங்க் படேல் மற்றும் அவரது குழுவினர், நோயாளியின் கண் இமைகள் இரண்டில் இருந்தும் மொத்தம் 250க்கும் மேற்பட்ட பேன்களையும் 85க்கும் மேற்பட்ட ஈர்களையும் அகற்றினர்.
சிகிச்சைக்கு அடுத்த நாளன்று மீண்டும் கண் பரிசோதனை செய்தபோது நோயாளியின் கண்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன.

பிபிசியிடம் பேசிய மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா, “நான் மருத்துவத் துறையில் 21 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால் இன்று வரை இதுபோன்ற பாதிப்பை இரு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன். இது சற்று சிக்கலான பிரச்னை” என்று கூறினார்.
“நோயாளி இரண்டரை மாதங்களாகத் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். சூரத்தில் சில மருத்துவர்களை அவர் சந்தித்து இருந்தாலும், நோய் கண்டறியப்படவில்லை, இது பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது” என்றார் அவர்.
ஃபிதிரியாசிஸ் பால்பெப்ரரம் என்றால் என்ன?
அமெரிக்க தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின்படி, ஃபிதிரியாசிஸ் பால்பெப்ரரம் (Phthiriasis palpebrarum) என்பது கண் இமைகளில் பேன் மற்றும் அதன் முட்டையான ஈர் இருக்கும் அரிய மருத்துவ நிலை ஆகும்.
இந்தச் சிக்கல் ஏற்பட்டால், கடுமையான அரிப்பு, கண் இமைகள் சிவத்தல், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படும். இது பொதுவான கண் தொற்று போல் இல்லை என்பதால் அதைக் கண்டறிவது கடினமாக இருக்கலாம்.
பட மூலாதாரம், Supplied
கண்களில் எப்படி பேன் வரும்?
ஆமதாபாத்தில் உள்ள துருவ் மருத்துவமனையின் கண் நிபுணர் மருத்துவர் ஹர்ஷத் அகஜா பிபிசியிடம் கூறுகையில், “இது மிகவும் அரிதான நோய். இந்த லார்வாக்கள் கொசுக்கள் முட்டையிடும் அதே வகையிலான லார்வாக்கள். சுகாதாரமின்மையால் ஏற்படுகின்றன.”
“பல ஆண்டுகளுக்கு முன்பு ஆமதாபாத்தில். இதுபோன்ற ஒரு பாதிப்பை பார்த்தோம். ஆனால் இது மிகவும் அரிதானது” என்றார் மருத்துவர் அகஜா.
கண்ணிமைகளில் பேன் வருவதற்குக் காரணம், வீட்டிலுள்ள சில வகையான சூழல்களாகவோ, பயன்படுத்தும் தலையணைகளாகவோ இருக்கக்கூடும்.
“மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே கால்நடைகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது. சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பேன்கள் படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள் அல்லது ஆடைகளில் இருக்கலாம்” என்று மருத்துவர் மிருகங்க் கூறுகிறார்.
“இந்த நோய் தற்செயலாகவும் ஏற்படலாம். காடு போன்ற இடத்திற்குச் செல்லும்போது அல்லது கால்நடைகளுடன் தொடர்பு கொள்ளும்போது அவை உடலில் ஒட்டிக்கொண்டு, தலையில் இருந்து கண் இமைகளுக்கு வந்து சேரலாம்” என்றும் அவர் விளக்கினார்.
பட மூலாதாரம், Supplied
கண் இமைப் பேன் முதன்மை அறிகுறிகள்
கண் வலி, கண்களில் தொடர்ந்து அரிப்பு, தூக்கமின்மை ஆகியவை கண் இமையில் பேன்கள் இருப்பதற்கான அறிகுறிகள் என்று மருத்துவர் மிருகாங்க் கூறுகிறார்.
கண் இமைகளில் நீர் வடிதல், வீக்கம் ஆகியவை தோலில் ஏற்படும் தொற்று காரணமாக அரிப்பு ஏற்படுவதற்கான அடிப்படை அறிகுறிகளாகும்.
இந்த வகையான நோய்களைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?
சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம். கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக ஏற்படும். வீட்டில் தூய்மையைப் பராமரிப்பது மிகவும் முக்கியம்.
கண்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், நேரத்தைக் கடத்தாமல் உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். கண் பிரச்னைகளை லேசாக எடுத்துக் கொள்வது பாதிப்பை அதிகப்படுத்தும் என்று மருத்துவர் பிரகாஷ் கட்டாரியா கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு