சென்னை: “வேலு நாச்சியார் பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்ட வீரப் பெண்மணி வேலு நாச்சியார் (Velu Nachiyar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 3). ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் (1730) பிறந்தார். விஜயரகுநாத செல்லதுரை சேதுபதி மன்னரின் ஒரே மகள் இவர். சிறு வயதிலேயே துணிச்சலும் எதற்கும் அஞ்ஞாத நெஞ்சுரமும் கொண்டிருந்தார்.கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்றறிந்தார்.ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் உடல்நலக் குறைவால் 66-வது வயதில் (1796) மறைந்தார். இவரது பெயரில் 2008-ல் தபால் தலை வெளியிடப்பட்டது.