படக்குறிப்பு, இந்தியாவில் மாதவிடாய் குறித்து பொதுவெளியில் பேச தயக்கம் நிலவுகிறதுகட்டுரை தகவல்
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில், முறைப்படுத்தப்பட்ட வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளதன் மூலம், நாட்டிலேயே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 18 முதல் 52 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுப்பை சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்த முடியாது. மேலும் விடுப்பு பெற மருத்துவ சான்றிதழும் தேவையில்லை.
இந்தத் திட்டத்தின் மூலம், முறைப்படுத்தப்பட்ட துறைகளில் (அரசு மற்றும் தனியார்) பணிபுரியும் 3.5 முதல் 4 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள்.
ஆனால் வீட்டு வேலை செய்பவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், டெலிவரி பணியாளர்கள் போன்ற அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் சுமார் 60 லட்சம் பெண்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
எனவே, இந்த திட்டத்தை அமைப்புசாரா துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் கொள்கை தனியார் துறையை உள்ளடக்கிய முதல் முயற்சி. அதேபோல், வேலை வகை அல்லது ஒப்பந்த வகையைப் பொருட்படுத்தாமல் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்பதால் கர்நாடகாவின் மாதவிடாய் விடுப்புக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது .
மாதவிடாய் விடுப்பு என்பது புதிய திட்டம் அல்ல. ஸ்பெயின், ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கெனவே மாதவிடாய்க்கு விடுப்பு வழங்குகின்றன.
இந்தியாவில் பிகார் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள், அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு நாள் விடுப்பு வழங்குகின்றன. கேரளாவிலும் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்பயிற்சி நிறுவன பெண் ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய்க்காக கூடுதல் விடுப்பு வழங்குவது குறித்து பாலின சார்பு, சமத்துவம் குறித்த விவாதங்கள் எழுகின்றன.
மற்றவர்கள் இது ஒரு அவசியமான உரிமை என்றும், பெண்கள் சம்பளத்தை இழக்காமல் விடுப்பு எடுக்க உதவுகிறது என்றும், தவிர்க்க முடியாத மாதவிடாய் வலியுடன் வேலை செய்ய வேண்டிய நிலையைத் தவிர்க்க உதவுகிறது என்றும் கூறுகின்றனர்.
“இது பெண்களுக்காக அரசு எடுத்துள்ள மிகவும் முற்போக்கான கொள்கை முடிவுகளில் ஒன்று,” என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பிபிசியிடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கேரள மாநிலம் சபரிமலையில் மாதவிடாய் காலத்தில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்
ஐடி மற்றும் பிபிஓ துறைகளின் லாப நோக்கற்ற வர்த்தக சங்கமான நாஸ்காம் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், கர்நாடகாவில் பல ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு வழங்குகின்றன. எனவே இந்த அரசாணையை அமல்படுத்துவது பெரிய சவாலாக இருக்காது என்றார்.
உள்ளூர் ஆடை மற்றும் ஜவுளித் தொழிலாளர் சங்கத் தலைவர் பிரதிபா ஆர். இந்த முடிவை வரவேற்கிறார்.
இதுகுறித்துப் பேசிய போது, இந்தத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வருடத்திற்கு வெறும் 11 நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம், இதை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று சில பெண்கள் கருதுகின்றனர்.
காரணம், இந்தியாவின் பல பகுதிகளில் மாதவிடாய் குறித்து பேசுவதற்கே தடை உள்ளது . பெண்கள் கோயில்களுக்கு செல்லத் தடை விதிக்கப்படுகிறது, மாதவிடாய் காலத்தில் “அசுத்தமானவர்கள்” என்று கூறி வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
“மாதவிடாய் பற்றி பேசவே இயலாத போது, எப்படி ஒருவர் மாதவிடாய் விடுப்பு பெற முடியும்? நமது சமூகம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை,” என்று ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மேலாளரான அனுனிதா பிபிசியிடம் கூறுகிறார்.
மற்றொரு ஐடி ஊழியரான அருணா பாப்பிரெட்டி இதுகுறித்துப் பேசுகையில், “என்னைக் கேட்டால், விடுப்பு தேவையில்லை என்று தான் கூறுவேன். ஏனென்றால் மாதவிடாயைப் பற்றி பேசாமலேயே பல பெண்கள் உயர்ந்த பதவிகளை அடைந்திருக்கிறார்கள்” என்கிறார்.
மாதவிடாயைச் சுற்றி ஆழமாக வேரூன்றியுள்ள தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராடுவதே உண்மையான சவால் என்று கூறும் சமூக ஆய்வாளர் புஷ்பேந்திரா, “பிகாரில் ஒரு பெண் இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அது மாதவிடாய் காரணமாகத் தான் கேட்கப்படுகிறது என புரிந்து கொள்ளப்படுகிறது. இது பெண்களுக்கு வசதி அளித்தாலும், அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை “என்கிறார்.
பல ஆண்டு காலமாக மாதவிடாய் விடுப்பு வழங்கி வரும் பிகார் உட்பட, இந்தியாவின் பல பகுதிகளில், கடைக்காரர்கள் இன்னும் பழைய செய்தித்தாள்களில் சானிட்டரி பேட்களைச் சுற்றிக் கொடுப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கு முன்பு, மாதவிடாய் மீதான பிம்பத்தைப் போக்கி அதனைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கேரளாவில் ஆண்களுக்கு மாதவிடாய் குறித்து பயிற்சிகள் நடத்தப்பட்டாலும், மாதவிடாய் காலத்தில் பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்வதற்கான தடையை நீக்குவதற்கு எதிராக அங்கு 2018 ஆம் ஆண்டில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், அரசாங்கத்தின் மாதவிடாய் விடுப்புக் கொள்கை, மாதவிடாய் பற்றி விவாதிக்க மக்களுக்கு வாய்ப்பளிக்கும் என்று கர்நாடகாவில் உள்ள சில பெண்கள் கருதுகிறார்கள்.
“இதை மாதவிடாய் விடுப்பு என்று அழைப்பது அந்த கட்டமைப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது” என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஆசிரியை ஷ்ரேயா ஸ்ரீ.
கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தின் துணை டீனும், கர்நாடகாவின் மாதவிடாய் விடுப்பு குழுவின் தலைவருமான சப்னா எஸ், பெண்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்.
“தற்போதுள்ள சமூகக் கட்டமைப்பை நோக்கி கேள்வி எழுப்ப வேண்டும். மன்னிப்பு கேட்பது போலவோ அல்லது கூச்சத்துடனோ பெண்கள் மாதவிடாய் விடுப்பு கேட்கக் கூடாது,” என்று அவர் கூறுகிறார்.