பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி டிசம்பர் 15, 2025 அன்று பாட்னாவில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கினர்கட்டுரை தகவல்
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டிசம்பர் 15 அன்று ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கும்போது, ஒரு முஸ்லிம் பெண் மருத்துவரின் முகத்தில் இருந்த ஹிஜாப்பை விலக்கினார்.
நிதிஷ் குமாரின் இந்த நடத்தை இந்திய ஊடகங்களோடு மட்டும் நின்றுவிடாமல், சர்வதேச ஊடகங்களிலும், குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் விவாதப் பொருளானது.
துருக்கி முதல் கத்தார் வரையிலான ஊடகங்கள் நிதிஷ் குமாரின் இந்தச் செயலைக் கண்டித்துள்ளன. இந்தியாவில் முஸ்லிமாக இருப்பது எளிதான காரியம் அல்ல என்று பாகிஸ்தானிலும் மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக பிகார் முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரின் நற்பெயருக்கு, இத்தகைய நடத்தை ஏற்றதல்ல. இத்தகைய சூழலில், நிதிஷ் குமாரின் உடல்நிலை இப்போது முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன.
இது குறித்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, இந்த விஷயம் தனது வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று அவர் கூறினார்.
ஜூன் 2022-இல் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். இதற்கு முஸ்லிம் நாடுகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக நுபுர் சர்மாவை கட்சியிலிருந்து நீக்கியது.
பாஜக தலைமையிலான என்டிஏ (தேசிய ஜனநாயகக் கூட்டணி) கூட்டணியில் நிதிஷ் குமாரும் ஒரு முக்கியமான அங்கம். நுபுர் சர்மாவின் கருத்து சர்ச்சை ஏற்படுத்திய போது, மேற்கு ஆசியாவில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறினர்.
இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோதி மேற்கு ஆசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நிதிஷ் குமார் தொடர்பான இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது. லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வசிக்கும் மேற்கு ஆசியாவில் இந்தியாவுக்குப் பெரிய வர்த்தகக் கூட்டாளிகள் உள்ளனர்.
இத்தகைய சூழலில், இந்தியாவில் எது நடந்தாலும் அதன் தாக்கம் அங்கேயும் எதிரொலிக்கும்.
இந்தியாவின் நற்பெயருக்குப் பாதிப்பா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நிதிஷ் குமார் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் கூறுகையில், இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது நிச்சயமாக நாட்டின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படும் என்றார்.
அவர் கூறுகையில், “எதிர்வினைகள் இரண்டு வகைப்படும். ஒன்று அரசு சார்ந்தது, மற்றொன்று மக்கள் சார்ந்தது. நிதிஷ் குமார் விவகாரத்தில் அரபு நாடுகள் மிகக் கடுமையான எதிர்வினையைத் தராது, ஏனென்றால் அவர்களிடமும் பன்முகக் கலாச்சாரச் சூழல் இல்லை. ஆனால் மேற்கு ஆசியாவின் சாதாரண மக்களிடையே இந்தியாவின் நற்பெயர் மிக நன்றாகவே இருந்து வந்துள்ளது. எகிப்து, அல்ஜீரியா போன்ற நாடுகளின் மாணவர்களின் படிப்பு அறைகளில் மகாத்மா காந்தியின் புகைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.”
“மேற்கு ஆசியாவின் பொதுமக்களிடையே இந்தியா என்பது பன்முகக் கலாச்சாரம், பல மொழிகள், பல மதங்கள் கொண்ட ஒரு தாராளவாத ஜனநாயக நாடாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் யாராவது தாக்கப்பட்டால், அந்த நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படும். உலகம் முழுவதும் இரண்டு விஷயங்கள் மிகவும் உணர்ச்சிகரமானவையாக மாறியுள்ளன. ஒன்று முஸ்லிம் வெறுப்பு, மற்றொன்று யூத எதிர்ப்பு. முஸ்லிம் வெறுப்புடன் நேரடியாக தொடர்புபடுத்தப்படும் பல விஷயங்கள் இந்தியாவில் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கின்றன.” என்றார்.
செளதி அரேபியாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் தல்மீஸ் அகமது கூறுகையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு இருந்த நற்பெயர் இப்போது உடைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
தல்மீஸ் அகமது, “எந்தவொரு நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் ஏதேனும் நடந்தால், உலகின் பெரும்பாலான நாடுகள் அதை பேசுவதைத் தவிர்க்கின்றன. ஆனால் அதன் உளவியல் ரீதியான தாக்கம் இருந்தே தீரும். இந்தியா என்றால் ஒவ்வொரு மனிதருக்கும் சம உரிமை கிடைக்கிறது, யாரிடமும் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்ற பிம்பம் 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. இந்தியா ஒரு பன்முகக் கலாச்சார நாடாகப் பார்க்கப்பட்டது,” என்று கூறினார்.
“நிதிஷ் குமார் செய்தது அவரது அரசியலோடு ஒத்துப்போகவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது இந்தியாவின் அரசியலில் இப்போது நடப்பவற்றின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இந்தியா இப்போது தனது பொருளாதார,ராணுவ பலம் மற்றும் உலகளாவிய செல்வாக்கைப் பற்றியே அதிகம் பேசுகிறது.”
“இந்தியா தனது பேசுபொருளையே மாற்றிவிட்டது. துருக்கியைத் தவிர வேறு எந்த முஸ்லிம் நாடும் இந்தியாவின் விவகாரங்களை பேசுவதில்லை. பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் அமைதியாக இருப்பதற்குக் காரணம், அவர்களின் உள்நாட்டு விவகாரங்களும் மிகவும் முன்மாதிரியானவை அல்ல என்பதுதான். துருக்கிக்கு ஒரு உத்திசார்ந்த நோக்கம் உள்ளது, அதனால் அவர்கள் அவ்வப்போது ஏதேனும் கூறிவருகிறார்கள்,” என்றார் தல்மீஸ் அகமது.
இந்தியா மாறிவிட்டதா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நிதிஷ் குமார் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக பிகார் முதல்வராக உள்ளார்.
தல்மீஸ் அகமது,”உலகம் முழுவதும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை நொறுங்கி வருகிறது. மேற்கத்திய விழுமியங்களும் இப்போது இல்லை. அமெரிக்காவின் செல்வாக்கும் முன்போல இல்லை. ‘நடுத்தர சக்திகள்’ என்று நாம் அழைக்கும் நாடுகள் இப்போது தங்கள் பலத்தைக் காட்டுகின்றன, இந்தியாவும் அந்த நாடுகளில் ஒன்று. இந்தியா மாறிக்கொண்டிருக்கும் விதம், இந்த மாறிவரும் உலகத்தோடு ஒத்துப்போகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
“மேற்கு ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் ஜனநாயகம் இல்லை. அத்தகைய சூழலில் மக்கள் இந்தியாவை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. இந்தியாவில் ஒரு வகையான ஜனரஞ்சக இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இயக்கத்தின் நோக்கிலிருந்து பார்த்தால் எல்லாம் மாறிவிட்டது போலத் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல, இந்தியா ஒரு பழமையான நாகரிகம், சில ஆண்டுகளில் எல்லாம் அழிந்துவிடாது.”
டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரும் பிரபல எழுத்தாளருமான அபூர்வானந்த், நிதிஷ் குமார் செய்த செயலுக்கு ஒரு நாகரிகமான சமூகத்தில் கடும் அதிருப்தி வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்.
பேராசிரியர் அபூர்வானந்த் ‘எக்ஸ்’ தளத்தில் எழுதியுள்ள பதிவில், “நிதிஷ் குமாரின் இந்தச் செயல் ஒரு நாகரிகமான சமூகத்தில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் இந்துக்களான நாம் இப்போது நாகரிகத்தின் மீதே கோபமாக இருப்பது போலத் தெரிகிறது. மாறாக, மக்கள் இதில் மகிழ்ச்சியடைவதைக் காண்கிறேன். முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாம் கோர வேண்டும். அவர் பதவி விலகுவதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
பிகாரில் ஜன் சூராஜ் கட்சியின் தலைவரும் இந்தோனேசியாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதருமான மனோஜ் பாரதி கூறுகையில், நாட்டில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என்றார். உலகம் முழுவதும் முஸ்லிம் வெறுப்பு குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் ஏதேனும் நடந்தால் அதுவும் இதனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்பதை மனோஜ் பாரதி ஒப்புக்கொள்கிறார்.
நிதிஷ் குமார் விவகாரத்தில் பாகிஸ்தானில் கோபம் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் தலைவர் சமீஹா ரஹீல் காஸி கூறுகையில், ஹிஜாப் அணிவது என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் மத உரிமை என்றார்.
“அதிகாரத்தில் இருக்கும் ஒரு ஆண், ஒரு பெண்ணின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக அகற்றினால், அது மனித கண்ணியம், நீதி மற்றும் ஒழுக்கத்தை மீறும் செயலாகும். இந்த விஷயத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை மனித உரிமைகள் ஆணையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானின் அரசியல் ஆய்வாளர் அம்மா மசூத், நிதிஷ் குமாரின் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து, “இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதத்திற்கு ஒரு சோகமான உதாரணம் இது. பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பணி நியமனக் கடிதங்களை வழங்கும்போது ஒரு முஸ்லிம் பெண் மருத்துவரின் முகத்திரையை வலுக்கட்டாயமாக விலக்கினார்,” என்று பதிவிட்டுள்ளார்.