அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வர்த்தக வரிகளை விதித்துள்ளார். சில நாடுகளுக்கு குறைந்தபட்சமாக 10% முதல் சில நாடுகளுக்கு 40%-க்கும் மேல் வரை என வரி விதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஆளே இல்லாத தீவுகளின் பெயரும் பெற்றுள்ளது.
ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது 10% வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இவை ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான பிரதேசங்களாகும். இவற்றில் மனிதர்கள் வசிப்பதே இல்லை.
பென்குயின்கள் மற்றும் சீல்கள் மட்டுமே வசிக்கும், இந்த தீவுகள் மீது வரிகளை விதிக்கும் அமெரிக்காவின் முடிவை அமெரிக்க வர்த்தக செயலாளர் ஆதரித்துள்ளார்.
“குறுக்குவழிகளை மூடுவதற்கும்”, இந்த தீவு வழியாக மற்ற நாடுகள் கப்பல் போக்குவரத்து மூலமாக அமெரிக்காவை அடைவதை தடுப்பதற்கும் ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகள் மீது வரி விதிக்கப்பட்டது என வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லட்னிக் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்ஸிடம் கூறினார்.
பட மூலாதாரம், Richard Arculus
ஆஸ்திரேலியாவிலிருந்து 4,000 கிமீ தொலைவில் உள்ள இந்த தீவுகளுக்கு வரிகள் விதிக்கப்பட்டதாக கடந்த வாரம் டிரம்ப் அறிவித்தபோது, ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஆச்சரியத்துக்கு ஆளாகினர்.
ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல், ஏபிசி செய்தி நிறுவனத்திடம், வரிகளை விதிப்பது “ஒரு பெரும் தவறு” என்றும் இது “விரைவாக எடுக்கப்பட்ட முடிவு” போல இருக்கிறது என்றும் கூறினார்.
ஆனால் டிரம்பின் வரிவிதிப்புப் பட்டியலில் ஆஸ்திரேலிய பிரதேசத்தை சேர்த்தது குறித்து கேட்டபோது, “நீங்கள் வரிப் பட்டியலில் இருந்து எந்த பகுதியையாவது விட்டுவிட்டால், அமெரிக்காவில் லாபம் ஈட்ட நினைப்பவர்கள் விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் வர முயற்சிப்பார்கள்” என்று லட்னிக் கூறினார்.
“அமெரிக்க அதிபருக்கு அது தெரியும். அதை அவர் சரி செய்யப்போகிறார்”, என்றும் குறிப்பிட்டார் லட்னிக்.
வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச் சந்தைகளும் 5%க்கும் அதிகமாக சரிந்து, 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க பங்குச் சந்தை மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.
இந்த வரி விதிப்பினை நியாயப்படுத்த பல அமெரிக்க அரசு செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேர்காணல்களை வழங்கினர். அதில் லட்னிக்கின் நேர்காணலும் ஒன்றாகும்.
பட மூலாதாரம், Annelise Rees
உலகளாவிய வர்த்தகத்தில் ஒரு துறைமுகம் வழியாக மற்றொரு துறைமுகத்திற்கு பொருட்களை அனுப்புவது பொதுவானது. அதாவது, ஒரு நாட்டில் இருந்து கிளம்பும் கப்பலிலுள்ள சரக்கு, மற்றொரு நாட்டில் வேறு ஒரு கப்பலுக்கு மாற்றப்பட்டு, பின்னர் இறுதி இடத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஆனால் இந்த செயல்முறை, ”சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கப்பல் போக்குவரத்து குறித்த தகவல்களை மறைக்கவும் அல்லது தவறாக சித்தரிக்கவும் வாய்ப்பளிக்கிறது” என்கிறது பொதுக் கொள்கை அமைப்பான பியூ அறக்கட்டளை.
மேற்கு மற்றும் மத்திய பசிபிக் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த முறை மூலம் கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள டுனா மீன் போன்ற இனங்கள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக அந்த அறக்கட்டளை தெரிவிக்கின்றது.
ஹெர்ட் மற்றும் மெக் டொனால்ட்ஸ் தீவுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறித்து தெளிவான தரவுகளைப் பெறுவது கடினம்.
ஆனால் 2022 ஆம் ஆண்டில், அமெரிக்கா அந்த பகுதியில் இருந்து 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது. அதில் கிட்டத்தட்ட அனைத்தும் பெயரிடப்படாத “இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள்” ஆகும்.
டிரம்ப்பின் வரி விதிப்புப் பட்டியலில் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதியும் இடம்பெற்றிருந்தது. இங்கு ராணுவ வீரர்கள் மட்டுமே உள்ளனர் மற்றும் அங்கு செல்ல அனுமதி தேவைப்படும்.
உலக வங்கியின் ஏற்றுமதித் தரவுகள், 2022 ஆம் ஆண்டில் அந்த பகுதியில் இருந்து அமெரிக்காவிற்கு 414,350 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக காட்டுகின்றன.