• Wed. Dec 18th, 2024

24×7 Live News

Apdin News

பெரம்​பூர் ரயில் நிலை​யத்தை ரூ.428 கோடி​யில் 4-வது முனையமாக மாற்ற கருத்​துரு | Perambur railway station proposed to be converted into 4th terminal at a cost of Rs.428 crore

Byadmin

Dec 18, 2024


சென்னை: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தைத் தொடர்ந்து, 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்ற ரூ.428 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் ரயில்வே வாரியத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் ரயில் முனையங்கள் அமைந்துள்ளன. இதையடுத்து, கூட்ட நெரிசலைக் குறைக்க, புதிய ரயில் முனையம் அமைக்கும் முயற்சி ரயில்வே நிர்வாகம் தரப்பில் எடுக்கப்பட்டது.

அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சால்ட் கோட்டார்ஸில் உள்ள இடத்தைப் பயன்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், அந்த இடம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் 4-வது ரயில் முனையம் அமைக்க முன்மொழியப்பட்டது. ஆனால், அதனை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது,

இதைத்தொடர்ந்து, சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அதன்படி, ரூ.428 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பாதைக்கான 3-வது வழித்தடம் பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் அமையவுள்ளது.

இதனால், புதிதாக அமையும் 4-வது முனையம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெரம்பூர் ரயில் முனையம் உருவானால், வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு போக்குவரத்து சேவை வழங்கும் முக்கிய மையமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பெரம்பூரில் போதிய நிலம் இருப்பதால், இங்கு 4-வது புதிய முனையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தின் கூடுதல் வசதிகளுக்கான அமைவிடங்கள், பார்சல் அலுவலகங்கள், வாகன நிறுத்தம் வசதி, நுழைவாயில்கள் உள்பட பல விபரங்கள் இடம்பெறும்.

இந்த திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த பிறகு, இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். பெரம்பூரில் இப்போது 4 நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக இரண்டு நடைமேடைகள் அமைக்கப்படும். இந்த புதிய ரயில் முனையத்தை 2028-ம் ஆண்டில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



By admin