பட மூலாதாரம், DHILEEPAN RAMAKRISHNAN
பெரியார் மீது அவருடைய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படும் ஒரு விமர்சனம், அவர் தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறினார் என்பதுதான்.
நாடாளுமன்ற மக்களவையில் மார்ச் 11ஆம் தேதியன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல், “தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் படத்தை ஒவ்வொரு அறையிலும் (திமுகவினர்) வைத்திருக்கின்றனர். அவருக்கு மாலை அணிவித்து வணங்குகின்றனர், திராவிட இயக்கத்தின் அடையாளம் என்கின்றனர். ஆனால், அவர் தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறியுள்ளார்” எனப் பேசினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இத்தகைய விமர்சனத்தைப் பெரியார் மீது வைத்திருக்கிறார்.
உண்மையிலேயே பெரியார் தமிழ் மொழியை ‘காட்டுமிராண்டி மொழி’ எனக் கூறினாரா? தமிழ் மொழி குறித்த அவருடைய பார்வை என்ன?
பெரியார் கூறியது என்ன?
தமிழை ‘காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் கூறியிருப்பதாகத் தெரிவிக்கிறார், பிபிசி தமிழிடம் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன். ஆனால், அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் அவர்.
“இதிகாசங்கள், புராணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ் மொழியில் சாதி, மதத்தைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் இருப்பதை பெரியார் பல சந்தர்ப்பங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளார். மாறாக, மனித வளர்ச்சிக்கும் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் தமிழில் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். அந்த அர்த்தத்தில்தான் காட்டுமிராண்டித்தனமான விஷயங்கள் தமிழ் மொழியில் இருப்பதாக பெரியார் கூறினார்” என்கிறார் கலி. பூங்குன்றன்.
பெரியாரின் நோக்கம், தமிழ் மொழியைக் குறை கூறுவதாக அல்லாமல், விஞ்ஞான ரீதியாக தமிழ் மொழி சீர்திருத்தம் அடைய வேண்டும் என்பதே இதன் பொருள் எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
இருப்பினும், மேடைகளில் ‘தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்று பெரியார் பிரசாரம் செய்ததில்லை என்றும் ஓரிரு சமயங்களில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகின்றன, பெரியாரிய இயக்கங்கள்.
தாய் மொழி என்பதற்காகவே அதிலுள்ள பிற்போக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று அர்த்தம் இல்லை என்பதே பெரியாரின் வாதமாக இருந்ததாக பூங்குன்றன் கூறுகிறார்.
மேலும், தமிழ் மொழியின் பழம்பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிராமல், புதுமையை நோக்கி நவீனத்துடன் மொழி பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகவே பெரியார் ஒரு குறையாக இதைக் கூறாமல், ஓர் அக்கறையின் வெளிப்பாடாகவே குறிப்பிட்டதாக, திராவிட இயக்கத்தினர் கூறுகின்றனர்.
தமிழ் மொழி குறித்த பெரியாரின் பார்வை
பெரியாரை பொறுத்தவரையில் தனக்கு எவ்விதமான பற்றும் இல்லை என்றே தொடர்ந்து கூறி வந்திருக்கிறார். “எவனொருவன் மனித சமுதாயத்துக்காகத் தொண்டாற்ற வருகிறானோ அவனுக்கு நாட்டுப் பற்று, சாதிப் பற்று, மொழிப் பற்று உள்ளிட்ட எவ்விதப் பற்றும் இருக்கக் கூடாது,” என்று அவர் கூறியிருக்கிறார்.
“மொழி என்பது போர்க்கருவி போல, போர்க் கருவிகளில் மாறுதல் ஏற்பட்டதைப் போல், மொழியிலும் மாறுதல் ஏற்பட வேண்டும்” என்பதே மொழி குறித்த பெரியாரின் பார்வை என்று, ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ என்ற தனது புத்தகத்தில் விளக்குகிறார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
“தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பாய் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கு முக்கியக் காரணம், மதச்சார்புடையோரின் கையில் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான்” எனப் பெரியார் கூறியுள்ளதாக, அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பான ‘மொழி – எழுத்து’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி குறித்த தனது கருத்துகளை ‘விடுதலை’ நாளிதழில் தொடர்ச்சியாகப் பதிவு செய்திருக்கிறார் பெரியார். அவற்றைத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் கி.வீரமணி. 1970ஆம் ஆண்டு, டிசம்பர் 1 விடுதலை நாளிதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளவை:
”தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி, விஞ்ஞான மொழி என்பதும், தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ் மொழி, ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும், ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பு எதுவும் இல்லை.”
”நான் வீட்டிலும், வெளியிலும் பேசுவது தமிழ், படிப்பது தமிழ், எழுதுவதும் தமிழ், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ் வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகிறது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை. ஆகையால், தமிழ் மொழியைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாகக் கூற வேண்டியதாகிறது.”
பெரியார் தமிழுக்காக என்ன செய்தார்?
“பெரியார் தமிழுக்கான எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். 1930களில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை பெரியார் முன்னின்று நடத்தினார். அப்போதுதான், தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழியில் மறுமலர்ச்சி வருகிறது.
அந்தக் காலகட்டதில் தமிழில் பல வடமொழி வார்த்தைகள் கலந்திருந்தன. அதையெல்லாம் மாற்றி, தமிழ் வார்த்தைகளை அன்றாடம் உபயோகிக்குமாறு செய்தார்,” என்று பெரியார் தமிழ் மொழிக்காகச் செய்துள்ளவற்றைப் பட்டியலிட்டார் கலி. பூங்குன்றன்.
மேலும், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதை ஊக்குவித்தார். ஊர்களின் பெயர்களில் சமஸ்கிருத ஊடுருவல் ஏற்பட்டதைச் சுட்டிக்காட்டியதாகவும், கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக்கூடாதா என்று பெரியார் கேள்வியெழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, தமிழ் மொழியின் ஆக்கபூர்வமான விஷயங்களை சுட்டிக் காட்டிய அதே நேரம், அதன் குறைகளையும் எடுத்துரைத்தவர் பெரியார் என்கிறார் கலி. பூங்குன்றன்.
தான் நடத்திய பத்திரிகைகளுக்கு விடுதலை, குடிஅரசு, உண்மை, பகுத்தறிவு, புரட்சி என தமிழ் பெயர்களையே பெரியார் சூட்டியுள்ளார். இந்தப் பத்திரிகைகளில், ஆயிரக்கணக்கிலான கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
தமிழை அறிவார்ந்த மொழியாக மாற்ற நினைத்தே அனைத்து மேடைகளிலும் பெரியார் திருக்குறளை முன்னிறுத்தி, திருக்குறள் மாநாடுகளை நடத்தியதாக, பெரியாரிய இயக்கத்தினர் கூறுகின்றனர்.
தமிழ் மொழியை எழுதுவதை எளிமையாக்கி, எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் முன்னிறுத்தியுள்ளார்.
தமிழ் மொழியில் சீர்திருத்தம்
தமிழ் மொழியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த பெரியார் பல முயற்சிகளை மேற்கொண்டதாக மூத்த செய்தியாளர் ப. திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, “தமிழ்நாட்டு ஆட்சி தமிழில்தான் இருக்க வேண்டும். அது தமிழாட்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருந்தார் பெரியார்” எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருமாவேலன்.
“தமிழையும் மதத்தையும் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ் ஆட்சி செல்ல வேண்டும்” என பெரியாரின் நோக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவர்.
இந்திய விடுதலைக்குப் பிறகு மொழி வாரி ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டபோது, 1956ஆம் ஆண்டு திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய மாநாட்டில், சென்னை ராஜ்ஜியம் எனும் பெயருக்குப் பதிலாக தமிழ்நாடு எனும் பெயரை வழங்க வேண்டும் என முதன்முதலில் கூறியது பெரியாரும் திராவிடர் கழகமும்தான் என்று கி.வீரமணி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தி, சமஸ்கிருதம் குறித்து பெரியார் கூறியது என்ன?
ஹிந்தி எதிர்ப்பில் பெரியார் மிகவும் வலுவாக இருந்ததாக திருமாவேலன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“பெரியாரின் போராட்ட குணத்தை அதிகமாக்கியது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். 1938ஆம் ஆண்டில் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்ட வடிவத்தைக் கொண்டாலும், பெரியார் தமது டிந்தி எதிர்ப்பை 1929ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார். 7.3.1929 நாளிட்ட ‘குடிஅரசுவில்’ ஹிந்தி எதிர்ப்பைத் தொடங்கினார். ‘தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும்’ என்பதுதான் ‘சித்திரபுத்தன்’ எனும் புனைப்பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பு” என்று தனது நூலில் திருமாவேலன் குறிப்பிட்டுள்ளார்.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக மட்டுமின்றி சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிராகவும் தொடர்ச்சியாகத் தனது கருத்துகளை பெரியார் பதிவு செய்துள்ளார்.
“இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காகவாவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் எதிலாவது ஒற்றுமை-பொருத்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில், தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்துக்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?” என்று பெரியார் கேள்வியெழுப்பியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு