• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு | HC reserved orders in the Case seeking cancellation of bail of Periyar University VC

Byadmin

Apr 21, 2025


சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

அரசு அனுமதி பெறாமல், விதிகளை மீறி பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், இதுசம்பந்தமாக புகார் அளித்தவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர்.

சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இந்த வழக்கின் புலன் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கி உள்ளது. வழக்கை ரத்து செய்யக்கோரி துணைவேந்தர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, புலன் விசாரணையை விரைந்து முடித்து ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது?.” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக், “டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்ய வேண்டி உள்ளது” என்று விளக்கம் அளித்தார். துணைவேந்தர் தரப்பில், “ஏற்கெனவே இதே பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற அமைப்பு துவங்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , காவல்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.



By admin