• Tue. May 20th, 2025

24×7 Live News

Apdin News

பெரியாறு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை வழங்காவிட்டால் போராட்டம்: விவசாயிகள் சங்கம் | Farmers’ Association to Protest if Environmental Clearance is Not Granted to Maintain Periyar Dam

Byadmin

May 20, 2025


பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேரள அரசு பின்பற்றாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மழைக்காலம் தொடங்கும் முன்பு முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அணையில் பராமரிப்புப் பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்டுவது, வல்லக்கடவு வனச் சாலையை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் கேரள அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ஏற்று கேரள அரசு உரிய ஒப்புதலை அளிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மனோகரன் கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் சிறப்பான தீர்ப்பு இது. அதே நேரம், 2006ம் ஆண்டில் இருந்து இது போன்ற எத்தனையோ தீர்ப்புகளை, வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்தாலும், அதை கேரள அரசு முறையாகப் பின்பற்றுவது இல்லை. இந்த முறை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு பின்பற்றாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்” என்றார்.



By admin