• Fri. Oct 18th, 2024

24×7 Live News

Apdin News

“பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” – ஆர்.பி.உதயகுமார் | admk former minister rb udhayakumar slam dmk government

Byadmin

Oct 17, 2024


கம்பம்: “முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல கேரள அரசு தொடர்ந்து இழுத்தடித்து வந்ததுக்கு தமிழக அரசு ஏன் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார்.

கம்பம் ஒன்றிய அதிமுக சார்பில் காமயகவுண்டன்பட்டியில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (அக்.17) நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தேனி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர்கள் எஸ்.டி.கே. ஜக்கையன், முருக்கோடை இராமர், முன்னாள் எம்.பி.பார்த்திபன் ஆகியோர் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினர். சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: “துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு என ஏற்கனவே முடிவுசெய்து விட்டார்கள். இந்த பதவிக்கு இவரைவிட திமுக கட்சிக்காக உழைத்த வேறு யாரும் இல்லையா?. துரைமுருகன், பொன்முடி, நேரு போன்ற சீனியர்கள் இருக்கும் போது கருணாநிதியின் பேரன் என்ற ஒரே காரணத்தால் தான் அவருக்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம். அணையில் மராமத்து பணிகள் செய்தபின் படிப்படியாக அணையில் 152 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் அணையில் மராமத்து பணிகளுக்காக தளவாட பொருட்களைக் கூட கொண்டு செல்ல விடாமல் கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் துணைக் குழு ஆய்வை தமிழக அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். அப்படியானால் ஆறுமாதமாக அணையில் மராமத்து பணிகள் எதுவும் செய்யப்படவில்லையா? இதுகுறித்து முதல்வர் ஏன் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை?. இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு முல்லை பெரியாறு அணையைப் பற்றி கவலை இல்லை” என்றார். மாநில அம்மா பேரவை செயலாளர் ஜெயக்குமார், தலைமை கழக பேச்சாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் பரணீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



By admin