• Sat. Feb 1st, 2025

24×7 Live News

Apdin News

‘பெரியாறு அணை வலுவாக உள்ளது’ – உச்ச நீதிமன்ற கருத்துக்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு | tn farmers welcomes Supreme Court opinion on mullaiperiyar dam

Byadmin

Jan 29, 2025


குமுளி: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அணை உடைந்து விடும் என்பது கற்பனை கதை போலவே உள்ளது என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும், அணை பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல மனுக்கள் கேரளாவில் இருந்து தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ரிஷிகேஷ்ராய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறியதாவது: அணை கட்டி 130 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் மாறுபட்ட காலநிலைகளையும் எதிர்கொண்டு இன்னமும் பலமாகவே உள்ளது. ஆனால், அணை உடைந்துவிடும் என்று கூறுவது காமிக்ஸ் கதைகள் போல உள்ளது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் அணை பலமாக இருப்பதற்கு இதனை கட்டிய பொறியாளர்களுக்கு நன்றி கூற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு 5 மாவட்ட தமிழக விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறுகையில், “40 ஆண்டுகளாக கேரளாவில் நடத்தப்பட்டு வரும் பொய் பிரச்சாரத்துக்கு இதன் மூலம் உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறது. அணை குறித்து தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து பல்வேறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வரும் வலதுசாரி அமைப்புகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் சரியான பதிலடி இது.

அதேவேளையில் அணை குறித்து தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வரும் கேரள இயக்கவாதிகளையும், யூடியூப் சேனல் நடத்துபவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.



By admin