பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. டிரம்ப் அமெரிக்க அதிபராக இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின்னர் இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இருவரும் கடைசியாக 2019-ம் ஆண்டு நேரில் சந்தித்து பேசியிருந்தனர்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு இடையில் வர்த்தக மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தென் கொரிய நகரான பூசானில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 100 நிமிடங்கள் நீடித்தத்தாகவும், இது திட்டமிடப்பட்டதை விட அதிக நேரம் நடைபெற்றதாகவும் சீன ஊடகமான சிசிடிவி கூறுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு, இரு தலைவர்களும் சந்திப்பு குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சந்திப்பு முடிந்து திரும்பி செல்லும் போது விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த சந்திப்பு “பெரிய வெற்றி” என்று குறிப்பிட்டார்.
ஜின்பிங் உடனான சந்திப்பு குறித்து “இது ஓர் அற்புதமான சந்திப்பு. அவர் ஒரு சிறந்த தலைவர்” என்று டிரம்ப் கூறினார். “நாங்கள் பல முக்கியமான விஷயங்களில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதே போன்று, முக்கிய வர்த்தக விவகாரங்களில் இரு நாடுகளும் ஒத்த கருத்தை எட்டியுள்ளதாக கூட்டத்துக்கு பின் சீன அரசு ஊடகத்தில் அதிபர் ஜின்பிங்கின் கருத்துகள் வெளியாகியுள்ளன.
தென் கொரியாவில் விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக்கு பிறகு, தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் புறப்பட்டுச் சென்றார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் இந்த கூட்டத்தை 1முதல் 10 க்குள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள் என்று கேட்ட போது, அவர் 10க்கு 12 என மதிப்பிடுவதாகவும், இந்த சந்திப்பு ஒரு “பெரிய வெற்றி” என்றும் கூறினார்.
“நாங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு அவர்கள் என்னை வாழ்த்தினர்,” என்று டிரம்ப் கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்வேன் என்றும் டிரம்ப் கூறுகிறார். அதன் பின்னர் ஜின்பிங் அமெரிக்காவிற்கு வருவார் என்றும், அநேகமாக வாஷிங்டன் டிசி அல்லது புளோரிடாவில் உள்ள பாம் பீச்சுக்கு வருவார் என்றும் கூறினார்.
இந்த சந்திப்பில் தைவான் குறித்து பேசப்பட்டதா என்று கேட்டதற்கு, ” தைவான் ஒருபோதும் (எங்கள்) விவாதங்களில் வரவில்லை” என்று டிரம்ப் பதிலளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன்
யுக்ரேன் விவகாரத்தில் ஷி ஜின்பிங் உடன் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
“யுக்ரேன் விவகாரத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்யப் போகிறோம். சில நேரங்களில் நீங்கள் அவர்களை (ரஷ்யா-யுக்ரேன்) சண்டையிட அனுமதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் யுக்ரேனில் ஒன்றாக வேலை செய்யப் போகிறோம், “என்று அவர் கூறினார்.
அணு ஆயுதம்
இந்த சந்திப்புக்கு முன்பாக அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதிக்க அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அது குறித்து தென் கொரியாவில் ஜின்பிங் முன்னிலையில், சந்திப்பு தொடங்குவதற்கு முன்பாக கேள்வி எழுப்பிய போது, டிரம்ப் அதனை தவிர்த்துவிட்டார்.
பிறகு, விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, “மற்ற முக்கிய நாடுகள் அவ்வாறு செய்யத் தொடங்கியுள்ளதால், அமெரிக்கா அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்க இது ‘பொருத்தமான’ நேரம் என்று” டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவிடம் மிகப்பெரிய அணுசக்தி இருப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த சோதனைகள் ” மற்றவர்களுடன் தொடர்புடையது,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
என்விடியா
என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்குடன் சீனா விரைவில் பேசும் என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிகாரிகள் இந்த விவாதங்களில் “ஒரு வகையான நடுவராக” செயல்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
ஒரு நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இந்த விவாதங்கள் பிளாக்வெல் சிப்பை உள்ளடக்காது என்றும் டிரம்ப் கூறினார் (பிளாக்வெல் சிப் என்பது செயற்கை நுண்ணறிவுக்கான Nvidia-வின் சிறந்த சிப் என்று கருதப்படுகிறது) ஆனால் அந்த பேச்சுவார்த்தைகளில் எது குறித்து பேசப்படும் என்று விவரத்தை அவர் வழங்கவில்லை.
சீனா அரிய தாதுக்கள் மீதான கட்டுப்பாட்டை கொண்டிருப்பது போன்று, அமெரிக்கா, தரமான சிப்கள் தயாரிப்பில் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
அரிய தாதுக்கள்
அரிய தாதுக்கள் வர்த்தகம் தொடர்பான பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது என்று டிரம்ப் கூறுகிறார், ஆனால் அது குறித்த எந்த விவரங்களையும் அவர் வழங்கவில்லை.
அரிய தாதுக்கள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலின் முக்கிய புள்ளியாக உள்ளது.
முக்கியமான கனிமங்களின் செயலாக்கத்தில் சீனா ஏகபோகத்தைக் கொண்டுள்ளது, மேலும் சமீபத்திய வாரங்களில் அரிய தாதுக்கள் ஏற்றுமதிகள் மீது அதன் பிடியை சீனா இறுக்கியது.
“சீனாவில் இருந்து இனி எந்த தடையும் இல்லை,” என்று ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பின் டிரம்ப் கூறுகிறார்.
வாஷிங்டனும் பெய்ஜிங்கும் “பல விஷயங்களில் உடன்படுகின்றன” என்று டிரம்ப் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
சீனா மீதான வரிகள்
உடனடியாக நடைமுறைக்கு வரும்போது, அமெரிக்காவிற்குள் ஃபெண்டானிலுக்கான ரசாயன பொருட்களை முடக்குவதில் சீனாவின் பங்குக்கு ஈடாக முன்னதாக இயற்றப்பட்ட அனைத்து சீனப் பொருட்கள் மீதான வரிகளை அமெரிக்கா குறைக்கும் என்று அவர் கூறினார்.
முன்பு அறிவித்தபடி, சீனா அதிக அளவு சோயாபீன்களை வாங்கத் தொடங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டார், “அதை நான் பாராட்டினேன்” என்றும் அவர் கூறினார்.
ஜின்பிங் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் உடனான சந்திப்பின் போது ஜின்பிங்கின் கருத்துக்கள் குறித்த அறிக்கையை சீனாவின் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அதன் படி, “முக்கிய வர்த்தக பிரச்னைகளை” தீர்க்க இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக சீனத் தலைவர் கூறினார். சீன மற்றும் அமெரிக்க குழுக்கள் இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கும் “உறுதியளிக்கும் மருந்தாக” (reassuring pill) செயல்படும், (நேர்மறையான) விளைவுகளை வழங்க பணியாற்றும் என்று ஜின்பிங் கூறினார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கையாள்வது, சைபர் மோசடி, பணமோசடி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பதற்கான “நம்பிக்கைக்குரிய வாய்ப்புகள்” இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“சீனாவும் அமெரிக்காவும் கூட்டாக பெரும் சக்திகளின் பொறுப்பை நிரூபிக்க முடியும், இரு நாடுகளுக்கும் உலகிற்கும் மிகவும் குறிப்பிடத்தக்க, நடைமுறை மற்றும் நன்மை பயக்கும் முயற்சிகளை நிறைவேற்ற ஒன்றிணைந்து செயல்பட முடியும்,” என்றும் அவர் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு