-
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
பெருந்துறை சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் ‘இந்த ஆழ்குழாய் கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சிப்காட் வளாக ஆலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக வெளியேற்றப்பட்ட கழிவுநீர்தான் இதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கு தீர்வு காணப் போராடி வரும் அமைப்பினர், சிப்காட் வளாக ஆலைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்யும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.
ஆலைகளுக்கு அரசு வழங்கும் காவிரி நீரின் விலையை உயர்த்தினால்தான், சுத்திகரிப்பு சரியாக நடக்கும் என்று போராட்டக்குழுவினர் கூறுகின்றனர்.
பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு டெண்டர் விட்டு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது அமைந்தால் தீர்வு கிடைக்குமென்றும் சிப்காட் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அங்கே என்ன நடக்கிறது?
‘நிலத்தடி நீர் விஷமானதை வெளிப்படுத்திய அறிவிப்பு’
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக அரசின் சிப்காட் (SIPCOT) தொழில் வளர்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டையாகவுள்ள இந்த வளாகம், பெருந்துறை பேரூராட்சி மற்றும் ஈங்கூர் கிராம ஊராட்சிகளில் 2700 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
சிப்காட் அதிகாரிகள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவலின்படி, தற்போது 260க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன. இரும்பு, உணவுப்பொருட்கள், ஆடைகள், மெத்தைகள், ஸ்டெபிலைசர் உள்ளிட்ட மின் பொருட்கள், பாத்ரூம் உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், நுாற்பு, நெசவு மற்றும் சாயஆலைகள் என பலவிதமான தொழிற்சாலைகளும் இங்குள்ளன. இந்த சிப்காட்டால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.
சிப்காட் வளாகத்தின் பெரும்பகுதி அமைந்துள்ள ஈங்கூர் கிராம ஊராட்சி மற்றும் அதையொட்டியுள்ள முகாசிபிடாரியூர், வரப்பாளையம், வாய்ப்பாடி ஆகிய கிராம ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் 37 ஆழ்குழாய் கிணறுள்ள இடங்களில் ‘இந்த ஆழ்குழாய் கிணற்று நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நீரைப் பரிசோதித்து, குடிநீர் வடிகால் வாரியம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு பரிந்துரைத்ததன் அடிப்படையில் இவை வைக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த உண்மை நிலையை அறிவதற்காக பிபிசி தமிழ், களஆய்வு மேற்கொண்டது. பெருந்துறை சிப்காட் வளாகம் அமைந்த நாளிலிருந்து இப்போது வரையிலுமான பல்வேறு நிகழ்வுகளையும், அவை சார்ந்த ஆவணங்களையும் அங்குள்ள மக்கள் பலரும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தனர்.
கடந்த 2000 வது ஆண்டில் அரசு சார்பில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட போது, 54 சாயஆலைகள், 21 தோல் பதனிடும் ஆலைகள் இந்த வளாகத்திற்குள் வந்துள்ளன. ஆனால் சில சாயஆலை நிறுவனங்கள் மட்டுமே பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இணைந்துள்ளன.
சாயஆலைகளின் கழிவுநீரில் 2,000 டிடிஎஸ் (TDS–Total Dissolved Salt) வரை உப்புத்தன்மையுள்ள நீரினை, விவசாய நிலத்தில் விடலாம் என்பதை பயன்படுத்தி, பல ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமலேயே சிப்காட் வளாகத்திலுள்ள நல்லா ஓடையில் வெளியேற்றி வந்ததாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பின் ஜீரோ டிஸ்சார்ஜ் என்ற அளவில் சாயஆலைக் கழிவுநீருக்கான கட்டுப்பாடுகள் அதிகமான பின், மக்களின் தீவிரமான எதிர்ப்பால் உச்சநீதிமன்றம் தலையிட்டு, வளாகத்திலிருந்த அனைத்து தோல் பதனிடும் ஆலைகளையும் மூட உத்தரவிட்டது. ஆனால் அதற்குப் பின்னரும் கூட நிலைமை முழுமையாக மாறிவிடவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிப்காட் கழிவுநீர், நல்லா ஓடை வழியாக குட்டப்பாளையம், குமாரபாளையம், ஒட்டையக்காட்டூர், எளையாம்பாளையம், முருகம்பாளையம், வாய்ப்பாடி, சுல்லி மேட்டூர், அக்கரையாம்பாளையம் போன்ற பல்வேறு ஊர்களைக் கடந்து பாலத்தொழுவு குளத்தில் சேர்கிறது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியிலுள்ள இளைஞர்கள் பலரும் இணைந்து, சிப்காட் கழிவுநீர் விவகாரத்தை கையில் எடுத்துப் போராடத் துவங்கினர்.
‘போராடிய 42 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு’
எல்லா வயதினரையும், பல்வேறு சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்து பெருந்துறை சிப்காட் வளாகத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இயக்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பையும் உருவாக்கியுள்ளனர். இவர்களைத் தவிர்த்து, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் என்ற அமைப்பும், இதே பிரச்னைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இவ்வாறு போராடிய 42 பேர் மீது 7 பிரிவுகளில் காவல்துறையால் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு போராட்டங்களுக்குப் பின்பே, இப்பகுதியின் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதை ஒப்புக் கொள்ளும் வகையில், ‘குடிப்பதற்கு உகந்ததல்ல’ என்று குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகக் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரசாத், ”கடந்த 2017 க்குப் பின்பு, ஜீரோ டிஸ்சார்ஜ் என்ற கட்டுப்பாடு வந்தபின்னும் ஆலைகளின் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுவதில்லை என்பதை நாங்கள் 2023 ஆம் ஆண்டில்தான் கண்டுபிடித்தோம். டிடிஎஸ் மீட்டர்களை வாங்கி, ஆங்காங்கே நீர் மாதிரி எடுத்து பரிசோதித்து இதைக் கண்டறிந்து போராடத் துவங்கினோம்.” என்கிறார்.
இதுதொடர்பான புகாரின் பேரில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் 20 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசே 3 குழுக்களை உருவாக்கி, தொழிலையும் நிலத்தடி நீரையும் காக்கும் பொருட்டு 13 நிபந்தனைகளை விதித்தது. சிப்காட் வளாகத்திலிருந்து கழிவுநீர் வெளியேறவே கூடாது என்பது அதில் முக்கிய நிபந்தனை என்கிறார் பிரசாத்.
சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான பிரசாத், தற்போது ஈரோட்டிலுள்ள தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சிப்காட் வளாகத்திலுள்ள ஆலைகளில் சுத்திகரிப்பு முறையாக நடக்கிறதா என்பதை தினமும் டிடிஎஸ் மீட்டர்கள் மூலம் கண்காணித்து வருவதாகக் கூறும் பிரசாத், அதனால் கழிவுநீர் கலப்பு குறைந்துள்ளதாகக் கூறுகிறார்.
ஆனால் ஏற்கெனவே 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியேற்றப்பட்ட அதீத உப்புத்தன்மையுள்ள கழிவுநீரால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 30 கிராமங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் குற்றம்சாட்டுகின்றனர் .
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஈங்கூர் கிராமத்தைச் சேர்ந்த செம்மலர், ”நான் கெமிஸ்ட்ரி படித்தவள். ஆய்வகத்தில் பணியாற்றியிருக்கிறேன். சமீபத்தில் எனது வீட்டில் வரும் போர்வெல் தண்ணீரை ஆய்வகத்தில் கொடுத்துப் பரிசோதித்தபோது, அதன் டிடிஎஸ் அளவு அதிகமாக இருந்தது. ஃபுளோரைடு, நைட்ரேட் அளவும் மிக அதிகமாக இருந்தது. ” என்றார்.
மேலும். ”இந்த அளவில் ஃபுளோரைடு இருந்தால் பற்கள் சீக்கிரமே காலியாகிவிடும். சல்பேட் அதிகமிருப்பதாலும் உடலில் எக்கச்சக்கமான பாதிப்புகள் வருமென்பது எனக்குத் தெரியும். ஆனாலும் வேறுவழியே இல்லாமல் அதைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையே தண்ணீர்தான். அதையே விஷமாகக் கொடுத்தால் என்ன செய்வது.” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய வேறு சில பெண்களும், ஒரு நபருக்கு தினமும் 55 லிட்டர் என்று கணக்கிட்டு குடிநீர் கொடுப்பதாகவும், அதுவும் தினமும் வருவதில்லை என்றும் தகவல் பகிர்ந்தனர். வேறு வழியின்றி, ஆழ்குழாய் கிணற்றைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறும் பெண்கள், சோப்பால் பாத்திரங்களை விளக்கினாலும் நுரை வருவதில்லை என்றும், சில்வர் பாத்திரமும் துருப்பிடித்து விடுவதாகவும், அதில் சமைப்பதே ஆபத்தாகவுள்ளது என்றும் கூறினர்.
கவுண்டனுாரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி சரசாள், ”நான் சிறுவயதாக இருக்கும்போது, இந்த கிணறுகளில் உள்ள தண்ணீரைத்தான் குடிக்கப் பயன்படுத்தினோம். இப்போது இந்த கிணற்றில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து குழாய்களில் கொடுக்கிறார்கள். அதில் குளித்தால் கூட உடலெல்லாம் கடுமையாக அரிப்பு ஏற்படுகிறது. இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஆடு, மாடுகளுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. ” என்றார்.
‘மஞ்சள் நிறநீர், கரும்புகை, துரத்தியடிக்கும் துர்நாற்றம்’
கடப்பமடையிலுள்ள விவசாய நிலத்தில் தென்னை மரங்களுக்கு பாய்ச்சப்பட்ட ஆழ்குழாய் கிணற்று நீரின் நிறம் முழுக்க முழுக்க மஞ்சளாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. சில கிராமங்களில் குழாய்களில் வரும் நீரை அதே இடத்தில் பரிசோதித்தபோது, டிடிஎஸ் அளவு 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது.
சிப்காட் வளாகத்தில் பிபிசி தமிழ் ஆய்வு செய்தபோது, பல பகுதிகளில் நிற்கவே முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. பல்வேறு ஆலைகளில் புகைபோக்கிகள் வழியாக கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்தது. சில ஆலை வளாகங்களில் விறகுகளும், நிலக்கரியும் மலை போல் குவிக்கப்பட்டிருந்தன.
சிவப்பு வகைப்பாட்டின் கீழ் வரும் ஆலைகளுக்கு வெளியே, ஒவ்வொரு நாளின் கழிவுநீரின் டிடிஎஸ் அளவைக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பெரும்பாலான பலகைகளில் 20 நாட்களுக்கு முந்தைய பரிசோதனை முடிவுகளே குறிக்கப்பட்டிருந்தன. சிப்காட் வளாகத்திலுள்ள நல்லா ஓடையில் துவங்கி, பாலத்தொழுவு குளம் வரையிலும் பிபிசி தமிழ் நேரில் ஆய்வு செய்தது.
ஓடையின் இரு பகுதிகளில் டிடிஎஸ் அளவிடும் கருவியும், அதே பகுதியில் கேமராக்களும் பொருத்தப்பட்டு, அது ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படுவதும் தெரியவந்தது.
”இப்போது ஆன்லைன் முறையில் டிடிஎஸ் கணக்கிடப்படுவதால் சுத்திகரிப்பு ஓரளவுக்கு நடக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 13 ஆயிரம் என்ற அளவில் இருந்த டிடிஎஸ் இப்போது 2 ஆயிரத்துக்கும் குறைவாகியுள்ளது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக வெளியேற்றப்பட்ட கடுமையான உப்புத்தன்மையுள்ள கழிவுநீரால் 4 கிராம ஊராட்சிகளில் உள்ள பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலத்தடி நீர் விஷமாகியுள்ளது.” என்றார் பிரசாத்.
நல்லா ஓடையின் தண்ணீர் இறுதியாகக் கலக்கும் பாலத்தொழுவு குளம் 477 ஏக்கர் பரப்பளவுடையது. அதில் தற்போது 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் தண்ணீர் நிற்கிறது. அதன் நிறமும் வெளிர் மஞ்சள் நிறமாகவுள்ளது. ஒரு புறத்தில் நல்லா ஓடையின் தண்ணீர் கலக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக அத்திக்கடவு–அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் தரப்படும் பவானி ஆற்று நீரும் கலக்கிறது.
பாலத்தொழுவு குளத்துக்கு அருகில் விவசாய நிலம் வைத்துள்ள சந்திரசேகர், ”அத்திக்கடவு தண்ணீர் வந்ததால் தண்ணீர் நிறம் கொஞ்சம் மாறியுள்ளது. அதற்கு முன் மிக மோசமாக இருந்தது. ” என்றார்.
‘ரூ.120 கோடி மதிப்பில் புதிய பொது சுத்திகரிப்பு நிலையம்’
இப்பகுதியிலுள்ள நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து, சிப்காட் ஆலைகளுக்குத் தரும் வகையில் சிப்காட் வளாகத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 20 லட்சம் லிட்டர் நீரை சுத்திகரிக்கும் வகையில் அரசு சார்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 2023 நவம்பர் 11 அன்று அறிவித்தார். அந்த இடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினும் பார்வையிட்டார். கடந்த ஜூனில் இதற்கு பூமி பூஜையும் போடப்பட்டது.
இதை அமைத்தாலும் சிப்காட் ஆலைகளுக்கு தரப்படும் காவிரி நீரின் விலையை உயர்த்துவதே இதற்கு நிரந்தரத் தீர்வு என்று கூறுகிறார், வாய்ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் தினேஷ்குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ”தற்போது ஒரு லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க 35 பைசா வரை செலவாகிறது. ஆனால் காவிரி நீர், ஆலைகளுக்கு லிட்டர் 11 பைசாவுக்கு தமிழக அரசால் தரப்படுகிறது. சுத்திகரிப்பு செய்யும் செலவை விட, புதிய தண்ணீர் குறைந்த விலையில் கிடைப்பதால் சுத்திகரிப்பு செய்யாமல் புதிய தண்ணீரை வாங்கிக் கொள்கின்றனர். அதனால் ஆலைகளுக்குத் தரும் காவிரி நீரின் விலையை குறைந்தபட்சம் 50 பைசாவாக உயர்த்தினால் சுத்திகரிப்பு முறையாக நடக்கும்.” என்றார்.
இதே கருத்தைக் கூறும் பிரசாத், ”மாசு கட்டுப்பாடு குறித்து சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன. ஆலைகளில் கட்டமைப்புகளும் இருக்கின்றன. ஆனால் கண்காணிப்புக் கருவிகளே இல்லை. ” என்கிறார்.
இவர்கள் உட்பட போராட்டக்குழுவினர் அனைவரும், ஜல்ஜீவன் திட்டத்தையும், சிப்காட் ஆலைகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்காக மட்டுமே ஒரு சிறப்புக் குடிநீர்த் திட்டத்தையும் அரசு விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றனர். ஆலைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, நல்லா ஓடையில் வரும் கழிவுநீர் மாசு அளவை தினமும் இணையத்தில் வெளியிட வேண்டுமென்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சிப்காட் திட்ட அலுவலர் (பொறுப்பு) சுஜா பிரியதர்ஷிணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அதற்கு பதிலளித்த அவர், ”ஆலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரின் தன்மையை மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்கிறது. நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்து ஆலைகளுக்கு வழங்க ரூ.120 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. கடந்த ஜூனில் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் துவங்கும். இந்த பணியை முடிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.
சிப்காட் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவிடமும் பிபிசி தமிழ் இந்த கேள்விகளை முன் வைத்தபோது, ”ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஆன்லைன் முறையில் கண்காணிக்கிறோம். அனுமதிக்கப்பட்ட அளவில்தான் நீர் மாசு உள்ளது. புதிய பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தபின், நிலத்தடி நீரை சுத்திகரிப்பு செய்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிப்காட் வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரின் மாசு அளவை தினமும் இணையத்தில் பதிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆலைகளுக்குத் தரப்படும் காவிரி நீரின் விலையை நிர்ணயம் செய்வது குறித்த மக்களின் கோரிக்கையும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை அரசு முடிவு செய்யும்.” என்றார் அவர்.
களஆய்வில் உதவி: பெ.சிவசுப்பிரமணி
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு