பட மூலாதாரம், Getty Images
டாக்டர், எங்கள் பிள்ளைகளும் கண்ணாடி அணிய வேண்டுமா?
நாங்கள் இருவருமே சிறு வயதில் இருந்தே கண்ணாடி அணிந்து வருகிறோம். அப்படி என்றால், எங்களது பிள்ளையும் சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டுமா ? என பெற்றோர்கள் எப்பொழுதும் பயத்திலே இருப்பார்கள்.
நமது கண்கள் மற்றும் குழந்தைகளின் கண் ஆரோக்கியம் குறித்த கவலை எப்போதும் இருந்தாலும், அதற்கான சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பெரும்பாலும் எடுக்கப்படுவதில்லை.
ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க முயற்சி எடுப்பது அவசியம்.
தவறான வாழ்க்கை முறை இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. கண்ணாடி அணிந்த பின்பும் இந்தப் பயம் நீடிப்பது மட்டுமல்லாமல், நீண்டகாலத்துக்கு கண் பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயமும் தொடர்கிறது.
கடந்த சில தசாப்தங்களில் உலகம் முழுவதும் கண்ணாடி அணியும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல நாடுகளும் இந்தச் சூழலைச் சந்தித்து உள்ளன.
ஆனால் 1980 முதல் 1990 வரை, கல்வி மற்றும் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்ட ஒரு சிறு நாடு, ஒரு புதிய சவாலுக்கு தயார் ஆனது.
அங்கு, நாளுக்கு நாள் அதிகமான குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை (myopia) கண்டறியப்பட்டது.
தொலைதூரம் பார்க்க முடியாத இந்தப் பிரச்னை அதிகரித்துக் கொண்டே வந்தது. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
சிங்கப்பூர் தான் அந்தச் சிறிய நாடு.
இன்று, சிங்கப்பூரில் 80 சதவீத மக்களுக்கு கிட்டப்பார்வை உள்ளது.
“இந்தப் பிரச்னையோடு நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். இப்போது சோர்வடைந்து வருகிறோம். சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கிட்டப்பார்வை உள்ளது,” என்று சிங்கப்பூர் தேசிய கண் மையத்தின் மூத்த ஆலோசகர் ஆட்ரி சியா கடந்த ஆண்டு எச்சரித்தார்.
ஆனால் இந்த சிக்கல் சிங்கப்பூரில் மட்டும் அல்ல.
உலகம் முழுவதும் பரவி வருகிறது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளிலும், இந்தியாவிலும் கூட இந்த விகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில், 1971-ல் 25 சதவீத மக்களுக்கு மட்டுமே கிட்டப்பார்வை பிரச்னை இருந்தது.
இன்று அந்த எண்ணிக்கை 40 சதவீதமாக உயர்ந்துவிட்டது. பிரிட்டனிலும் அதே நிலை தான் காணப்படுகிறது.
ஆனால் தென் கொரியா, சீனா, தைவான் போன்ற நாடுகளில் சூழல் இன்னும் மோசமாக உள்ளது.
தற்போது இருக்கும் வேகம் தொடர்ந்தால், 2050-க்குள் உலக மக்கள்தொகையில் பாதி பேர் கிட்டப்பார்வையால் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விகிதம் ஒவ்வொரு ஆண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.
சீனாவில் கிட்டப்பார்வை அதிர்ச்சி தரும் அளவு அதிகரித்து வருகிறது என்கிறார் சியா.
பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளில் 76 முதல் 90 சதவீதம் பேருக்கு கிட்டப்பார்வை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
வெளிப்படையாகப் பார்க்கையில், கண்ணாடி போட்டு சரிசெய்யக்கூடிய சிறிய பிரச்னையைப் போல கிட்டப்பார்வை தோன்றலாம்.
ஆனால், கிட்டப்பார்வையை புறக்கணிக்கக் கூடாது. காரணம், அது தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கண் பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் கொண்டது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
மயோபியாவை எவ்வாறு கண்டறிவது?
குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை (Myopia) இருப்பதை சரியான நேரத்தில் கண்டறிதல் மிகவும் அவசியம்.
காரணம், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால், குழந்தையின் கல்வி மற்றும் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே அகற்ற முடியும். குறிப்பாக குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் இதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
பட மூலாதாரம், Getty Images
மயோபியாவின் அறிகுறிகள் பெரும்பாலும் 6 முதல் 13 வயதுக்குள் தென்படும். சில சமயங்களில் அதற்கும் குறைந்த வயதில், அல்லது வயதானவர்களிடமும் தோன்றலாம்.
அறிகுறிகள் எப்படி வெளிப்படும்?
- குழந்தைகள் கரும்பலகையில் எழுதப்பட்டதைப் படிக்க சிரமப்படுவார்கள்.
- டிவி, கணினி, மொபைல் போன்றவற்றை மிக அருகில் வைத்து பார்ப்பார்கள்.
- அடிக்கடி தலைவலி வரும்.
- கண்களை அடிக்கடி தேய்த்துக்கொள்வார்கள்.
- சிகிச்சையளிக்காமல் விட்டால், இந்த பிரச்னை காலப்போக்கில் மோசமடைந்து, புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயமும் உண்டு.
பட மூலாதாரம், Getty Images
கிட்டப்பார்வை ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன.
முன்கூட்டியே பிறக்கும் (குறைப்பிரசவம்) குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அதோடு, அதிக நேரம் வேலை செய்யும் பழக்கம், நீண்ட நேரம் அறைக்குளே இருப்பது, வெளிப்புறச் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி குறைவது, இருண்ட இடங்களில் அதிக நேரம் செலவிடுவது, டிஜிட்டல் சாதனங்களை அதிகம் பயன்படுத்துவது போன்றவையும் காரணங்களாகும்.
மயோபியா குறித்து தவறான நம்பிக்கைகள்
மயோபியா ஒரு பார்வைக் கோளாறு என்றாலும், அதைச் சுற்றி சமூகத்தில் பல தவறான நம்பிக்கைகள் நிலவுகின்றன.
இதுகுறித்து விளக்கமாகப் பேசும்போது, ஏஎஸ்ஜி கண் மருத்துவமனையின் குழுத் தலைமை இயக்க அதிகாரி மருத்துவர் விகாஸ் ஜெயின் பல பொதுவான சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.
கிட்டப்பார்வை இருந்தால் திருமணம் செய்வது, குழந்தைகள் பெற்றுக்கொள்வது சிக்கலா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், இதற்கு எந்த மருத்துவ ஆதாரமும் இல்லை என்கிறார் மருத்துவர் ஜெயின்.
கிட்டப்பார்வை சிக்கல் கடுமையாக இருந்தால் கண் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கும் திருமணம் செய்துகொள்வதற்கோ, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்லது குழந்தைகளை வளர்ப்பதற்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
பெற்றோருக்குக் கிட்டப்பார்வை இருந்தால், குழந்தைகளுக்கும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆனாலும், சரியான நேரத்தில் கண் பரிசோதனை செய்வது, தினமும் வெளியில் விளையாடுவது, வெளிப்புறச் செயல்பாடுகளை அதிகரிப்பது , கண்களை பாதுகாப்பது ஆகியவை இந்த அபாயத்தை தடுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ உதவும், என்று அவர் கூறுகிறார்.
கண்ணாடி அணிவதால் கிட்டப்பார்வை அதிகமாகுமா? என்பதும் பெற்றோர்கள் அடிக்கடி கேட்கும் மற்றொரு கேள்வி.
கண்ணாடி அணிவதால் கிட்டப்பார்வை மோசமாவதில்லை. மாறாக, கண்ணாடி அணியாமல் விட்டால் கண்களுக்கு அதிக சுமை ஏற்பட்டு, பார்வை தெளிவாக இருக்காது. அது கல்வி வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று விளக்குகிறார் மருத்துவர் ஜெயின்.
வயதானால் மயோபியா அதிகரிக்குமா?
பெரும்பாலானவர்களுக்கு, கிட்டப்பார்வை சிறுவயதில் தொடங்கி, இருபதுகளின் ஆரம்பத்தில் நிலைத்துவிடும். ஆனால் அதிகமாக ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள் அல்லது மிகக் கடுமையான மயோபியாவுடன் இருப்பவர்களுக்கு வயதாக ஆக இந்தச் சிக்கல் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, என்று அவர் விளக்குகிறார்.
மேலும், சரியான மருத்துவ ஆலோசனை, ஒழுங்கான சிகிச்சை, ஒழுங்கான பழக்கவழக்கங்கள் ஆகியவை வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக ‘Myopia Control Glasses’ வளர்ச்சியை மந்தமாக்க உதவுகின்றன, என்றும் அவர் கூறுகிறார்.
கிட்டப்பார்வை மரபணுக்களால் கடத்தப்படுகிறதா?
இந்தக் கேள்விக்கு பதிலளித்தவர் மருத்துவர் மினல் கன்ஹேர். அவர் கார்னியா, கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவைச் சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார்.
தற்போது செம்பூரில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் ஆயுஷ் கண் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.
“கிட்டப்பார்வை (Myopia) அல்லது தூரப்பார்வை குறைவு என்பது ஒரு வகையான ஒளிவிலகல் பிழை (refractive error). கண்மணியின் வடிவம் நீண்டு விடும்போது, அல்லது அதன் வளைவு மாறும்போது, பார்வை மங்கலாகிறது. இந்தக் குறைபாட்டில் 60 முதல் 90 சதவீதம் வரை மரபியல் காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன”என மருத்துவர் மினல் கன்ஹேர் விளக்குகிறார்.
“பெற்றோர் இருவருக்கும் கிட்டப்பார்வை இருந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் அதிகம். ஆனால் மரபியல் மட்டும் காரணமல்ல. வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக மொபைல், கணினி போன்ற டிஜிட்டல் திரைகளில் அதிக நேரம் செலவிடுவது, வெளியில் செலவிடும் நேரம் குறைவது போன்ற அனைத்தும் கிட்டப்பார்வை உருவாகவும், அதிகரிக்கவும் வழிவகுக்கின்றன”என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுருக்கமாகச் சொன்னால், மரபணுவால் கிட்டப்பார்வை பரவுகிறது, ஆனால் அதன் வளர்ச்சியும், முன்னேற்றமும் வாழ்க்கை முறையையும் சுற்றுச்சூழலையும் பொறுத்தது.
பட மூலாதாரம், Getty Images
மும்பை ஜாஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் கண் மருத்துவர் ஜான்வி மேத்தா, கிட்டப்பார்வை குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.
“கிட்டப்பார்வைக்கு மரபியல் ஒரு பங்கு வகிக்கிறது. ஆனால் அது மட்டுமே ஒரு காரணம் அல்ல. பெற்றோரில் ஒருவருக்கோ, இருவருக்கோ கிட்டப்பார்வை இருந்தால், குழந்தைக்கும் அந்த அபாயம் அதிகரிக்கும். ஆனாலும், சமீபத்திய ஆய்வுகள் வாழ்க்கை முறை காரணிகளே அதிக தாக்கம் செலுத்துவதை காட்டுகின்றன,” என அவர் விளக்குகிறார்.
“வெளியில் செலவிடும் நேரம் குறைவாக இருப்பது, வெளிப்புற விளையாட்டு குறைவாக இருப்பது, கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பது ஆகியவை குழந்தைகளில் கிட்டப்பார்வை அதிகரிக்கச் செய்துள்ளன. ஆனால், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வெளியில் திறந்தவெளியில் செலவிட்டால், இந்த அபாயம் குறைகிறது”என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் மேத்தா.
தொடர்ந்து பேசிய அவர், “மரபணுக்கள் கிட்டப்பார்வைக்கான ‘தோட்டாக்களை அடுக்குகின்றன’, ஆனால் அந்த தோட்டா மற்ற காரணிகளால் இழுக்கப்படுகிறது. குழந்தைகள் தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வெளியில் விளையாடினால், கிட்டப்பார்வையைத் தடுக்கலாம்” என்கிறார்.
குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது?
குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று மும்பை ஜாஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகர் கண் மருத்துவர் ஜான்வி மேத்தா கூறுகிறார்.
“திரை நேரத்தைக் குறைப்பது மிக முக்கியமான விஷயம். குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, திரை நேரத்தைக் குறைக்க வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு காட்சியை 20 வினாடிகள் பார்க்க வேண்டும்” என்று அவர் பரிந்துரைக்கிறார்.
இந்த எளிய வழக்கங்களைப் பின்பற்றினால், குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.
படிக்கும் போது, போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், அனைத்து வகையான திரைகள் மற்றும் புத்தகங்களையும் உங்கள் கண்களிலிருந்து 30 முதல் 40 சென்டிமீட்டர் தொலைவில் வைத்திருங்கள். மேலும், படுத்துக் கொண்டு படிக்க வேண்டாம். உங்கள் கண்களை தவறாமல் பரிசோதிக்கவும்.
பட மூலாதாரம், Getty Images
“குழந்தைகளின் வளர்ச்சிக் காலத்தில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. குழந்தைகளின் கண்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிப்பது அவர்களின் உடல், மன மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்கு அவசியம்.
எனவே, குறைந்தபட்சம் இந்த வளர்ச்சிக் கட்டத்திலாவது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பார்வையைப் பாதுகாக்க சில நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று மருத்துவர் கன்ஹேர் கூறுகிறார்.
குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குழந்தையை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். இதனால் கண்ணாடிக்கான சரியான அளவை தீர்மானிக்கவும், அது ஆண்டுதோறும் எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை கண்காணிக்கவும், பிற கண் கோளாறுகளைச் சரிபார்க்கவும் முடியும்.
கண்ணாடிகளுக்கான மருந்துச் சீட்டைச் சரிபார்க்க உங்கள் குழந்தையை ஒரு கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது பயனளிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று அவர் பரிந்துரை அளிக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
இவற்றுடன், வீட்டிலிருந்தே சில நல்ல பழக்கங்களையும் தொடங்க வேண்டும்.
- தொடர்ந்து ஒரே வேலை செய்து கொண்டிருந்தால், கண்களுக்கு இடையிடையே ஓய்வு கொடுக்க வேண்டும்.
- வீட்டில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும்.
- தேவைப்பட்டால் கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும்.
- கண்களை எவ்வாறு பராமரிப்பது, கைகளை கழுவுவது போன்ற சுகாதார பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
- கண் அல்லது பார்வைக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு, மருத்துவ பராமரிப்புடன் சேர்த்து உளவியல் ஆதரவும், உறுதியும் அவசியம் என்று மருத்துவர் கன்ஹேர் வலியுறுத்துகிறார்.
குழந்தைகளுக்கு எப்போது அதிக கவனம் தேவை ?
குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை (Myopia) உருவாகும் முன்பே, அவர்களின் நடத்தையை கவனித்தால் பிரச்னையை விரைவில் அறிய முடியும் என்கிறார் மருத்துவர் மினல் கன்ஹேர்.
அவர் கூறும் பரிந்துரைகள்:
- குழந்தையின் பள்ளி முன்னேற்றத்தைக் கண்காணித்து, ஆசிரியர்களுடன் தொடர்பில் இருங்கள். பள்ளியில் படிப்பில் பின்தங்குவது கண் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம்.
- பெற்றோர்கள் வீட்டில் கவனிக்காத பிரச்னைகள் பள்ளியில் தோன்றக்கூடும். படிப்பில் பின்தங்குவது கண் பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு அடுத்தகட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சை தேவைப்படலாம்.
- குழந்தையின் பார்வையில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால், அதனைக் கவனியுங்கள். தலையைச் சாய்த்து பார்த்தல் , கண்களைச் சுருக்குதல் (ஸ்ட்ராபிஸ்மஸ்), அடிக்கடி கண்களைத் தேய்த்துக்கொள்வது, பொருட்களை மிக அருகில் வைத்து படித்தல் அல்லது டிவிக்கு மிக அருகில் அமருதல், போன்றவை கண் சோர்வு அல்லது ஒளிவிலகல் பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இதுபோன்ற சமயங்களில் உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும். தாமதித்தால் ‘அம்பிலியோபியா’ (Amblyopia) உருவாகும் அபாயம் உண்டு.
“இப்போது சில நவீன கருவிகள் குழந்தைகளிடம் ஆரம்பத்திலேயே கிட்டப்பார்வையை கண்டறிய உதவுகின்றன. 3 வயது குழந்தைகளிடமும் இதற்கான அறிகுறிகளைப் பதிவுசெய்யக்கூடிய கருவிகள் கிடைக்கின்றன. அதோடு, கண்களுக்கான மருந்து சொட்டுகள், சிறப்பு மயோபியா கட்டுப்பாட்டு லென்ஸ்கள், இரவு நேர லென்ஸ்கள் ஆகியவை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்த உதவுகின்றன,” என மருத்துவர் ஜான்வி மேத்தா கூறுகிறார்.
மேலும், வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களை செய்ய நினைத்தால் உணவு முறையிலோ, உடற்பயிற்சியிலோ மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
உடல்நிலையைப் பரிசோதித்த பிறகே, மருத்துவர் மற்றும் பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வது நல்லது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு