பிரிஜ் நரேன் பாகிஸ்தானின் ஆதரவாளராக இருந்தார், எனவே அவர் அங்கேயே வசிக்க வேண்டியிருந்தது. 1947இல் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் பிரிவினை அறிவிப்புக்குப் பிறகு கலவரங்கள் வெடித்தபோது, லாகூர் பொருளாதார நிபுணர் பிரிஜ் நரேன் நிக்கல்சன் சாலையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்து, ‘இது இப்போது பாகிஸ்தானின் சொத்து. எனவே கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்க வேண்டாம்’ என்று கலவரக்காரர்களை அறிவுறுத்தத் தொடங்கினார்.
லாகூரில் வசித்த பேராசிரியர் பிரிஜ் நரேன், காலனித்துவ பஞ்சாபின் விவசாய பொருளாதாரம் குறித்த ஆய்வுகளுக்குப் பிரபலமானவர். அவர் 1888இல் பிறந்தார். இந்தியப் பிரிவினைக்கு முன்பு, லாகூரின் சனாதன் தர்மா கல்லூரியில் (பின்னர் எம்ஏஓ கல்லூரியாக மாறியது) பொருளாதாரப் பேராசிரியராக இருந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தால் பொருளாதாரத்தில் கௌரவப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.
“இந்திய துணைக்கண்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, ’20ஆம் நூற்றாண்டின் சிறந்த பொருளாதார நிபுணர்களில்’ ஒருவராகக் பேராசிரியர் பிரிஜ் நரேன் கருதப்பட்டார்” என்று டாக்டர் ஜி.ஆர். மதன் தனது ‘Economic Thinking in India’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
அவர் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பிரச்னைகள் குறித்து விரிவுரை ஆற்றினார், மேலும் இந்தத் துறையில் 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். அவரது கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டன.
ஆனால் ஜின்னாவின் ‘இரு தேசக் கோட்பாட்டை’ ஆதரிப்பதும், காந்திஜியை எதிர்ப்பதும் அவர் பிரபலமடைய ஒரு காரணமாக அமைந்தது. “பேராசிரியர் நரேன், காந்திஜியின் ‘சர்க்கா பொருளாதாரத்தை’ (Charkha Economics) வெளிப்படையாக எதிர்த்தார்” என்று டாக்டர் ஜி.ஆர். மதன் எழுதுகிறார்.
சர்க்கா பொருளாதாரம் என்பது மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய ஒரு சித்தாந்தமாகும். இது சுதேசி, தற்சார்பு மற்றும் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார அதிகாரமளிப்பில் கவனம் செலுத்தியது.
பாகிஸ்தான் உருவாக்கத்தின் ‘வலுவான ஆதரவாளர்’
பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் கோபால் மிட்டல் தனது ‘லாகூர் கா ஜோ ஜிக்ர் கியா’ என்ற புத்தகத்தில், “பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் பாகிஸ்தான் ஒருபோதும் பொருளாதார ரீதியாக நிலையானதாக இருக்காது என்றும் அதன் இருப்பு மிகவும் நிலையற்றதாக இருக்கும் என்றும் கூறியிருந்தனர், ஆனால் பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற முடியும் என்ற கருத்தை ஆதரிக்கும் பல கட்டுரைகளை எழுதினார்” என்று கூறுகிறார்.
பாகிஸ்தானில் பிறந்த ஸ்வீடனை பூர்வீகமாகக் ொண்ட ஆராய்ச்சியாளர் இஷ்தியாக் அகமது, ‘The Punjab Built, Partitioned and Cleansed: Unraveling the 1947 Tragedy through Secret British Reports and First-Person Accounts’ என்ற தனது புத்தகத்தில், 1999ஆம் ஆண்டு டெல்லியில் சோம் ஆனந்த் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டுகிறார்: ‘பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தானுக்கான கோரிக்கையை ஆதரித்து, பாகிஸ்தான் நடைமுறையில் ஒரு சிறந்த நாடாக இருக்கும் என்று உறுதியாக வாதிட்டார்.’
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியப் பிரிவினையின் போது, சுமார் 12 மில்லியன் மக்கள் புகலிடம் தேடி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குடிபெயர்ந்தனர்.
பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு லாகூரில் உள்ள மாடல் டவுனில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சோம் ஆனந்த், “பேராசிரியர் பிரிஜ் நரேன் ‘பாகிஸ்தான்’ என்ற சித்தாந்தத்தின் ‘தீவிர ஆதரவாளர்'” என்று கூறினார்.
பிரிஜ் நரேன் செய்தித்தாளுக்கான கட்டுரைகளை எழுதினார், அதில் அவர் “பாகிஸ்தான் ஒரு வெற்றிகரமான மற்றும் நிலையான நாடாக இருக்கும் என்ற கருத்தை நிரூபிக்க தனது பரந்த பொருளாதார அறிவைப் பயன்படுத்தினார்”.
பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா அவரை அங்கேயே தங்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், பாகிஸ்தானின் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க அவர் முழுமையாகத் தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
“ஜின்னா முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம உரிமைகள் உள்ள ஒரு ஜனநாயக அரசை நிறுவ விரும்பினார் என்று பிரிஜ் நரேன் உறுதியாக நம்பினார்.”
“மே 1947 முதல், ஏராளமான இந்துக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர், ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் சுமார் பத்தாயிரம் பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர். நிலைமை சீரடையும் என்றும், தங்களின் வேர்கள் பாகிஸ்தானில் இருந்ததால், அங்கேயே தங்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்” என்று சோம் ஆனந்த் கூறுகிறார்.
“ஆனால் ராட்க்ளிஃப் அவார்ட் (இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு) வெளிவந்தவுடன், சமூக விரோதிகள் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தொடங்கினார்கள். இது ஜின்னாவின் மதச்சார்பற்ற சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தது.”
இருப்பினும், பேராசிரியர் நரேன் ‘தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார், பாகிஸ்தான் தனது உண்மையான தாய்நாடு என்றும், எனவே தான் வெளியேற எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்.’
லாகூரில் கலவரம்: ‘அவன் ஒரு காஃபிர், அவனைக் கொல்லுங்கள்’
குஷ்வந்த் சிங் தனது சுயசரிதையான ‘Truth, Love and a Little Malice: An Autobiography’-இல், “லாகூரில் நடந்த கலவரங்களுக்கு சீக்கியத் தலைவர் மாஸ்டர் தாரா சிங் தான் காரணம் என்றும், அவர் பஞ்சாப் சட்டமன்றக் கட்டிடத்திற்கு வெளியே தனது பெல்ட்டிலிருந்து ஒரு கிர்பானை (குறுவாள்) ஆக்ரோஷமாக உருவி, ‘பாகிஸ்தான் ஒழிக!’ என்று கூச்சலிட்டார்” என்றும் எழுதியுள்ளார்.
அந்த நேரத்தில் லாகூரில் இருந்த குஷ்வந்த் சிங், அந்தச் செயல் “எண்ணெய் நிரம்பிய அறைக்குள் எரியும் தீக்குச்சியை வீசுவது போல இருந்தது. மாகாணம் முழுவதும் வகுப்புவாத கலவரங்கள் வெடித்தன” என்று எழுதுகிறார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் கோபால் மிட்டலின் கூற்றுப்படி, “கலவரங்கள் திட்டமிடப்பட்டதா அல்லது தானாகவே பரவியதா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் உள்ளன”.
அவர் தனது ‘லாகூர் கா ஜோ ஜிக்ர் கியா’ புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார், “ஆனால், கலவரங்கள் திட்டமிடப்பட்டிருந்தால், பாகிஸ்தானுக்குச் சொந்தமான பல கடைகள் மற்றும் வீடுகள் ஏன் எரிக்கப்பட்டன என்பது புரியவில்லை. கலவரக்காரர்கள் பேராசிரியர் பிரிஜ் நரேன் வாழ்ந்த குடியிருப்பைத் தாக்கியபோது, அவரும் அதே வாதத்தை முன்வைத்து, அவர்கள் தீ வைப்பு மற்றும் கொலைகளைச் செய்வதைத் தடுக்க முயன்றார்.”
லாகூரில் நடந்து கொண்டிருந்த கலவரத்தின் போது பேராசிரியர் நரேன் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை ஆராய்ச்சியாளர் இஷ்தியாக் அகமது தனது புத்தகத்தில் விவரித்துள்ளார். சோம் ஆனந்தின் கூற்றை மேற்கோள் காட்டி, “ஒரு கும்பல் அவர் வாழ்ந்த பகுதியை அடைந்தது. அந்தக் கும்பல் காலியாக இருந்த இந்து மற்றும் சீக்கிய வீடுகளை எரித்து சூறையாடிக்கொண்டிருந்தது” என்று அவர் எழுதியுள்ளார்.
“நரேன் அவர்களிடம் சென்று, ‘இதைச் செய்ய வேண்டாம், ஏனெனில் இது இப்போது பாகிஸ்தானின் சொத்து’ என்றார். முதல் குழு அவரது வார்த்தைகளைக் கேட்டு வெளியேறியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மேலும் பல குண்டர்கள் வந்து தீ வைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர். நரேன் மீண்டும் அவர்களிடம் சென்று அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.”
“ஆனால் அவர்களில் ஒருவர், ‘அவர் ஒரு காஃபிர், அவரைக் கொல்லுங்கள்’ என்று கத்தினார். அந்தக் கும்பல் அவர் மீது பாய்ந்தது, பாகிஸ்தானின் தீவிர ஆதரவாளர் கொடூரமாக கொல்லப்பட்டார்”.
மற்ற வரலாற்றாசிரியர்களும் இந்த சம்பவத்தைப் பற்றி தங்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். ‘The Coffee House of Lahore: A Memoir 1942-57’-இல், வரலாற்றாசிரியர் கே.கே. அஜீஸ், “காங்கிரஸின் கூற்றுகளுக்கு மாறாக, பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக நிலையான நாடாக இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்த ஒரே இந்து அறிஞர் பேராசிரியர் பிரிஜ் நரேன் தான்” என்று எழுதுகிறார்.
“அவர் இதை தனது வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார், மேலும் பொதுக் கூட்டங்களிலும் அதையே கூறினார்.”
“தனது வீட்டிற்கு தீ வைக்கும் நோக்கத்துடன் ஒரு கும்பல் வந்தபோது, பிரிஜ் நரேன் வீட்டின் வாசலில் அவர்களை எதிர்கொண்டு, ‘சில நாட்களில் இந்த வீடுகள் அனைத்தும் பாகிஸ்தானின் சொத்தாக மாறும் என்றும், அவற்றை சேதப்படுத்துவது உண்மையில் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்கும்’ என்று கூறினார்” என்று கே.கே. அஜீஸ் எழுதுகிறார்.
“அவரது வார்த்தைகள் முதலில் வந்த கும்பலை அமைதிப்படுத்தியது, அவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு கும்பல் கூடியது. இந்த முறை பேராசிரியரால் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார், அவரது நூலகம் சாம்பலாக்கப்பட்டது.”
பட மூலாதாரம், Sanatan Dharma College-Lahore Ambala Cantt/FACEBOOK
படக்குறிப்பு, லாகூர் சனாதன் தர்மா கல்லூரி, எம்ஏஓ கல்லூரியாக மாறியது.
இடமாற்றம் செய்யப்பட்ட கல்லூரி
லாகூரில் உள்ள சனாதன் தர்மா கல்லூரியின் பேராசிரியர் பிரிஜ் நரேன் பாகிஸ்தானில் தங்க முடிவு செய்ததாகவும், ‘அவர் சமத்துவத்தை நம்பிய ஒரு தீவிர முஸ்லிம் லீக் ஆதரவாளர்’ என்றும் கோபால் மிட்டல் எழுதுகிறார்.
கோபால் மிட்டல் கிழக்கு பஞ்சாபைச் சேர்ந்தவர். ஆனால் அவர் லாகூரை தனது வீடாகக் கொண்டு, தனது பெரும்பாலான நேரத்தை தனது முஸ்லிம் சகாக்களுடன் கழித்தார்.
“பேராசிரியர் நரேனின் கொலை எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் எனது ஆசிரியர் மற்றும் எனது ஆளுமையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்” என்று கோபால் மிட்டல் எழுதுகிறார்.
“எனது குடும்பத்தினர் லாகூரில் தங்குவதற்கு தயாராக இல்லை, அதன் பிறகு எனது எண்ணங்களும் மாறின. அமிர்தசரஸுக்குச் செல்லும் கடைசி குழு லாகூரிலிருந்து புறப்பட்டபோது, நானும் ஒரு பேருந்தில் ஏறினேன். நாங்கள் அமிர்தசரஸை அடைந்தபோது, எரிந்த வீடுகள் அங்கே தென்பட்டன. இங்கு வந்த பிறகு நான் வருத்தத்தால் சிறிது கண்ணீர் விட்டேன்.”
‘மக்கள் குழு ஒரு குழப்பமான நிலையில் பயணித்தது, ஆனால் அவர்களில் கொள்ளையர்களும் இருப்பது போல் தோன்றியது. ஒருவரின் பெட்டி காணாமல் போனது, ஒருவரின் படுக்கை காணாமல் போனது.’ என கோபால் மிட்டல் எழுதியுள்ளார்.
கோபால் மிட்டலின் கூற்றுப்படி, ‘பேராசிரியர் பிரிஜ் நரேன் உயிருடன் இருந்திருந்தால், பாகிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்தும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கான சாத்தியம் அதிகம், ஆனால் விதி இதை அங்கீகரிக்கவில்லை’.
பேராசிரியர் பிரிஜ் நரேனின் அஸ்தி, அவர் நேசித்த அதே பாகிஸ்தானின் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதாக அவர் எழுதியுள்ளார்.
‘1916இல் லாகூரில் நிறுவப்பட்ட சனாதன் தர்மா கல்லூரி, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் அம்பாலாவிற்கும், 1933இல் அமிர்தசரஸில் நிறுவப்பட்ட முகமதிய ஆங்கிலோ-ஓரியன்டல் (எம்ஏஓ) கல்லூரி, பாகிஸ்தானின் லாகூருக்கு, பேராசிரியர் பிரிஜ் நரேன் கற்பித்த அதே கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.’