சென்னை: காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை தங்கள் அடையாள அட்டைகளை காண்பித்து அரசு பேருந்துகளில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் இலவச பயணம் மேற்கொள்ள வசதியாக நவீன அடையாள அட்டையை காவல் ஆணையர் வழங்கி அத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கைதிகளை வழிக்காவலுக்கு அழைத்துச் செல்லும் போலீஸார் அரசு பேருந்துகளில் பயணச் சீட்டு பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான வாரண்ட் இருந்தாலே போதுமானது. இதேபோல், பணி நிமித்தமாக செல்லும் போலீஸாரும் அரசு பேருந்துளில் பெரும்பாலும் டிக்கெட் எடுப்பது இல்லை. ஆனால், சில நேரங்களில் சில நடத்துநர்கள் கண்டிப்புக் காட்டி டிக்கெட் எடுக்க வலியுறுத்துவார்கள். இதனால், இரு தரப்பினரிடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் 13.09.2021 அன்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அடையாள அட்டைகளை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்துக்குள் பயணம் செய்யலாம். இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதையடுத்து சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் போலீஸாருக்கு அரசு பேருந்துகளின் இலவச பயணம் மேற்கொள்ளும் வகையில் நவீன அடையாள அட்டை தயார் செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது.
முதற்கட்டமாக 11,021 போலீஸாருக்கு நவீன அடையாள அட்டைகள் தயார் செய்யப்பட்டது. இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 11) நடைபெற்றது. காவல் ஆணையர் அருண் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர் முன்னிலையில் நவீன அடையாள அட்டைகளை 10 போலீஸாருக்கு வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் துறையில் பணி செய்து வரும் காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை இந்த நவீன அடையாள அட்டையைக் காண்பித்து சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்துக்கு போலீஸார் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.