பட மூலாதாரம், Neelam Productions
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வெளியாகியிருக்கும் பைசன் திரைப்படத்தில் இரு சமூகத் தலைவர்களான பாண்டியராஜா – கந்தசாமி ஆகியோரின் மோதல் விரிவாகக் காட்டப்படுகிறது.
உண்மையில் இந்தத் தலைவர்கள் யார்? 90களிலும் 2000களின் துவக்கத்திலும் தென் மாவட்டங்களில் நடந்தது என்ன?
மாரி செல்வராஜின் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வெளியாகியிருக்கும் பைசன் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சாதி மோதல்கள் மிகுந்திருந்த ஒரு காலகட்டத்தில், கபடி மீது ஆர்வம் கொண்ட ஒரு வீரர் எப்படி தடைகளை உடைத்து இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு உயர்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் அடிப்படையான கதை.
இந்த படம் தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அந்தக் காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் தொடர்ந்து மோதிக்கொண்ட இரு பிரமுகர்களின் கதையும் அவர்கள் வீழ்ந்த கதையும் சொல்லப்படுகிறது.
பட மூலாதாரம், Neelam Productions
பைசன் திரைப்படம் வெளியானதுமே சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் வரும் நடிகர் அமீர் மற்றும் நடிகர் லாலின் கதாபாத்திரங்கள் நிஜத்தில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்கிற கருத்து பல்வேறு விமர்சனங்களிலும் முன்வைக்கப்பட்டது.
பைசன் வெறும் மனத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறாக வந்திருந்தால் இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியிருக்காது எனக் கூறும் பத்திரிகையாளர் டி.என் ரகு, “ஒரு விளையாட்டு வீரனின் கதையை பசுபதி பாண்டியன் & வெங்கடேச பண்ணையார் சண்டையுடன் எளிதாக இணைத்ததுதான் மாரியின் மாஸ்டர்ஸ்ரோக்.” என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
யார் இந்த இருவர்? அவர்கள் இருவருக்குள்ளே நடந்தது என்ன?
1990களின் துவக்கத்தில் ஒரு சாதாரண பிரச்னையில் ஆரம்பித்த இந்த மோதல், பசுபதி பாண்டியனும் வெங்கடேச பண்ணையாரும் இறந்த பிறகும்கூட தொடர்ந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அலங்காரத்தட்டு கிராமத்தில் 1960ல் பிறந்தவர் பசுபதி பாண்டியன். 1980களிலும் 90களிலும் தென் மாவட்டங்களில் பட்டியல் பிரிவினரில் ஒரு முக்கிய பிரமுகராக உருவெடுத்தார் பசுபதி பாண்டியன்.
இந்த நிலையில்தான் 1990களின் துவக்கத்தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் அடுத்த பதினைந்து – இருபது ஆண்டுகள் தென்மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் புல்லாவெளி கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கும் மூலக்கரையைச் சேர்ந்த செல்வந்தரான சிவசுப்ரமணியத்திற்கும் இடையிலான பிரச்னையில் பசுபதி பாண்டியன் ராஜகோபாலை ஆதரித்தார்.
இந்த பகை தொடர்ந்த நிலையில், அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை, ‘ரவுண்ட் டேபிள் இந்தியா’ இணையதளத்தில் உள்ள கட்டுரை ஒன்று விவரிக்கிறது.
“1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிவசுப்ரமணியத்தின் மகன் அசுபதி பண்ணையார் கொல்லப்பட்டார். அடுத்த சில மாதங்களிலேயே பசுபதி பாண்டியனைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. இதில் அவர் தப்பினார். அதே ஆண்டு ஜூலை மாதத்தில் சிவசுப்ரமணியம் கொல்லப்பட்டார். இதையடுத்து பசுபதி பாண்டியனைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில், சென்னையில் நடந்த ஒரு காவல்துறை என்கவுன்டரில் 2003-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி சிவசுப்பிரமணியத்தின் பேரனான வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டார்” என்கிறது அந்தக் கட்டுரை.
பட மூலாதாரம், Neelam
வெங்கடேச பண்ணையார் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது காவல்துறையினரால் அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த என்கவுன்டர் குறித்து விசாரிக்க நீதிபதி ஏ. ராமன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அடுத்த ஆண்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால், அதன் மீது முடிவெடுக்கப்படவில்லை.
வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்ட பிறகும்கூட, அவரது குழுவுக்கும் பசுபதி பாண்டியன் தரப்புக்கும் இடையிலான மோதல் குறையவில்லை. இதற்கிடையில், பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் பசுபதி பாண்டியன். திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞரான ஜெசிந்தாவையும் திருமணம் செய்தார். இதற்குப் பிறகு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பையும் நடத்திவந்தார்.
இந்த காலகட்டத்தில் அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், அ.தி.மு.க. பிரமுகர் பால்ராஜ் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக பசுபதி பாண்டியனும் அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனும் 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் தேதி தூத்துக்குடிக்குச் சென்றனர். அவரது கார் தூத்துக்குடி – மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றான் என்ற இடத்துக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, கார் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பசுபதி பாண்டியன் வேறொரு காரில் ஏறித் தப்பினாலும் அவருடைய மனைவி ஜெசிந்தா அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கில் வெங்கடேசப் பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையார் உட்பட 12 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. பிறகு விசாரணை நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதற்குப் பிறகும் பசுபதி பாண்டியன் மீது தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. ஒரு முறை தூத்துக்குடியில் உள்ள சந்தையில் ஒரு தாக்குதலும் திருநெல்வேலி அருகே வல்லநாட்டில் ஒரு துப்பாக்கிச் சூடும் அவர் மீது நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் அவர் தப்பினார். திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் வசித்த பசுபதி பாண்டியன் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் உள்ளிட்ட பலர் மீது சந்தேகப் பார்வை படிந்தது.
வெங்கடேசப் பண்ணையார், பசுபதி பாண்டியன் ஆகிய இருவரும் இறந்த பிறகும் கொலைகள் தொடர்ந்தன. பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் பண்ணையார் தரப்பைச் சேர்ந்த அருளானந்தம், ஆறுமுகசாமி உள்பட பலரை காவல்துறை கைது செய்தது. இதற்குப் பிறகு பசுபதி பாண்டியன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த எம். முத்துப்பாண்டி என்பவர் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை அழகர் கோவிலில் வைத்து கொல்லப்பட்டார்.
2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பழையகாயலில் ஒரு தாக்குதல் நடந்தது. இதில் சுபாஷ் பண்ணையார் தரப்பைச் சேர்ந்த ஆறுமுகசாமி, கண்ணன் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகு, பசுபதி பாண்டியன் தரப்பைச் சேர்ந்த சிங்காரம் என்பவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பட்டப்பகலில் திருநெல்வேலி கேடிசி நகரில் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் சிங்காரத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி அவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.
“80களிலும் 90களிலும் தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் VS நாடார் என்ற மோதல் இருந்துவந்தது. இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால் திருநெல்வேலியில் இது போன்ற முரண் இந்த இரு சாதிகளுக்கு இடையில் மிகக் குறைவாகவே இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் சில பகுதிகளில்தான் இந்த மோதல் தீவிரமாக இருந்தது. இதுபோல சாதி ரீதியாக அணிதிரள்வதை அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பாதுகாப்பாகவும் கருதினார்கள்” என்கிறார் ஆய்வாளரும் பேராசிரியருமான கோ. ரகுபதி.
பைசன் திரைப்படத்தில் பசுபதி பாண்டியனின் பிரதிபோல வரும் பாண்டியராஜாவின் பாத்திரம், கொல்லப்பட்ட பிறகு அதன் தொடர்ச்சியாக காவல்துறை வெங்கடேசப் பண்ணையாரின் பாத்திரத்தைப் போலவரும் கந்தசாமியை சுட்டுக்கொல்வதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் வெங்கடேசப் பண்ணையார் என்கவுன்டரில் கொல்லப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகே, பசுபதி பாண்டியன் கொல்லப்பட்டார்.
வெங்கடேசப் பண்ணையார் காவல்துறை மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் 2017ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு கருத்தைத் தெரிவித்தது. அதாவது, இந்த வழக்கை அந்த காலகட்டத்திலேயே சி.பி.ஐக்கோ, சி.பி.சி.ஐ.டிக்கோ ஒதுக்கியிருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டது. சம்பவம் நடந்த சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கருத்தை நீதிமன்றம் தெரிவித்தது.
பட மூலாதாரம், Facebook/Kumaresan
சமூக பிரச்னைகளைப் பேசும் படங்கள் அதிக வரவேற்பு பெறுவதைத் தான் ‘பைசன்’ போன்ற திரைப்படங்களின் வணிக வெற்றி காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குமரேசன்.
“இயக்குநர்கள் பா.ரஞ்சித். மாரி செல்வராஜ் வருகைக்குப் பிறகு சமூக பிரச்னைகளைப் பேசும் மையநீரோட்ட படங்கள் அதிகரித்துள்ளன. சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை மேலோட்டமாக மறைமுகமாக எடுப்பது ஒரு வகை. அதே நேரத்தில், புனைவாக அல்லாமல் நிஜத்தில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களும் அதிகரித்து வருகின்றன.”
“பைசன் படத்திலும் கதைக்களம் தென் மாவட்டங்களை அடிப்படையாக கொண்டது தான். அங்கு நிலவிய சமூகப் பிரச்னைகள், சாதிய மோதல்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் படத்தில் எங்குமே நேரடியாக இவர்களைப் பற்றிய குறிப்போ, சித்தரிப்போ இடம்பெறவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் அவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டு விவாதப் பொருளாகிறது.” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு